This article is from Aug 11, 2019

கர்ப்பிணி பெண்ணிற்காக நடைபாதையில் ஆட்டோ ஓட்டியவர் கைது | ஏன் ?

பரவிய செய்தி

ரயில் நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணி பெண். கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய ஆட்டோ ட்ரைவர் கைது.

மதிப்பீடு

விளக்கம்

கர்ப்பிணி பெண்ணிற்காக ரயில் நிலையத்தின் நடைமேடையில் ஆட்டோவை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்ட செய்தி குறித்து தமிழில் சில மீம்களாக முகநூலில் வெளியாகியது. இது தொடர்பான தமிழ் ஊடகத்திலும் செய்திகள் வெளியாகி உள்ளன. விரிவாக தெரிந்து கொள்ள அங்கு நடந்த நிகழ்வு குறித்தும், வீடியோ குறித்தும் தேடினோம்.

ஆகஸ்ட் 4-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விரார் ரயில் நிலையத்தில் ஏழு மாத கர்ப்பிணி பெண் தன் கணவருடன் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பதிவு செய்து பயணிக்க இருந்த நிலையில், மழையின் காரணமாக ரயில் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்நேரத்தில், கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதனை கண்டு பதட்டமடைந்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் அங்கிருந்தவர்களிடம் உதவியை நாடினார். அப்பொழுது, நடைமேடை 2-க்கு அருகே வெஸ்டர்ன் ரயில்வேஸ் உடைய பகுதியில் ஆட்டோகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனத்துடன் கவாத் என்ற 34 வயது ஆட்டோ ஓட்டுநர் காத்திருந்தார். அவர் உடனடியாக கர்ப்பிணி பெண் இருந்த பெட்டிக்கு அருகே நடைமேடையில் ஆட்டோவில் சென்று கர்ப்பிணி பெண்ணை அழைத்துக் கொண்டு சிறிது நேரத்தில் சஞ்சீவினி மருத்துவனையில் சேர்த்தார் என ரயில்துறையில் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் யாதவ் தெரிவித்து உள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் கவாத் உடைய செயல் நல்ல நோக்கம் உடையதாக எடுத்துக் கொண்டாலும், விதியை மீறிய அவரின் செயலால் அங்கிருந்தவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

ஆகையால், விதியை மீறி செயல்பட்டதாக கூறி ஆட்டோ ஓட்டுநர் கவாத் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வஸாயில் உள்ள ரயில்வே நீதிமன்றம் முன்பு கவாத் ஆஜர்படுத்தப்பட்டு, பின்பு விடுவிக்கப்பட்டார்.

கர்ப்பிணி பெண்ணிற்காக உதவிய ஒருவரை கைது செய்தது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியது. நடைமேடையில் ஆட்டோவை இயக்கிய வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரல் ஆக்கப்பட்டன. ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader