ஆவின் பாலின் கலப்படத்திற்கு பசுவே காரணம், திமுக அரசல்ல என கார்த்திகைச் செல்வன் கூறவில்லை !

பரவிய செய்தி
ஆவின் பாலில் கலப்படம் என்றால் அதற்குக் காரணம் பசுமாடே தவிர, திமுக அரசல்ல – புதிய தலைமுறை கார்த்திகை செல்வன்
மதிப்பீடு
விளக்கம்
புதிய தலைமுறை செய்தி ஊடகத்தின் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றி வரும் கார்த்திகைச் செல்வன், ஆவின் பாலில் கலப்படம் என்றால் அதற்கு காரணம் பசுமாடே தவிர, திமுக அரசல்ல எனக் கூறியதாக அவர் புகைப்படத்துடன் ஓர் செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
கார்த்திகைச் செல்வன் குறித்து ஒரே மீம் பதிவை பாஜகவைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. மேலும், அவருக்கு திமுக கொடியை அணிவித்து எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்தும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
கார்த்திகைச் செல்வன் இப்படி பேசியதாகக் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் யாரும் அதற்கான காணொளி அல்லது செய்தியை வழங்கவில்லை. வெறும் மீம்ஸ் மற்றும் பதிவுகளே வைரல் செய்யப்படுகிறது. அதற்கான ஆதாரத்தை அவர்கள் தரப்பில் முன்வைக்கப்படவில்லை.
இப்படி ஆதாரங்களே இல்லாத நிலையில், இதுகுறித்து புதியதலைமுறை சேனலில் வெளியான சமீபத்திய செய்திகளை ஆய்வு செய்து பார்த்தோம். இதுதொடர்பான, எந்தவொரு விசயமும் பேசப்படவில்லை.
இதுகுறித்து புதிய தலைமுறை சேனல் தரப்பைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” அவ்வாறு எந்த செய்தியும் வெளியாகவில்லை. அவர் அப்படி பேசவும் இல்லை ” என மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், செங்கை பாலா என்பவர் ட்விட்டர் பக்கத்தில், ” புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலார் @karthickselvaa பசுமாட்டு பால் மற்றும் திமுக தொடர்பாக பேசியதாக ஒரு செய்தி வலைதளத்தில் உலா வருகிறது . அது உண்மை செய்தி அல்ல ” என பதிவிட்டதை கார்த்திகைச் செல்வன் ரீட்விட் செய்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், ஆவின் பாலில் கலப்படம் என்றால் அதற்குக் காரணம் பசுமாடே தவிர, திமுக அரசல்ல என ஊடகவியலாளர் கார்த்திகை செல்வன் பேசியதாக பரப்பப்படுவது பொய்யான தகவல். அவர் அப்படி கூறவில்லை என அறிய முடிகிறது.