அயோத்தியில் கிடைத்த புத்த சிலைகள் என பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை !

பரவிய செய்தி
” அயோத்தியில் தோண்ட தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள் வரலாறு”. ராமன் வரலாறு அல்ல புனையப்பட்ட கதை.. அயோத்தியில் ராமர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் புத்தர் சிலைகள் கண்டெடுப்பு.
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியாவில் ராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தில் தோண்ட தோண்ட புத்த சிலைகள் கிடைத்து வருவதாக பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அயோத்தியில் புத்தர் சிலைகள் கிடைத்ததாக பரப்பப்படும் புகைப்படங்களையும், அதன் உண்மைத்தன்மையையும் ஒன்றன் ஒன்றாக இக்கட்டுரையில் காண்போம்.
உண்மை என்ன ?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பகுதியில் புத்தர் சிலைகள் கிடைத்ததாக எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மட்டுமே இப்புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.
பதிவு 1 :
விரிவாக படிக்க : ராமர் கோவில் கட்டும் பகுதியில் புத்தர் சிலை கிடைத்ததாக வதந்தி !
மூன்று புத்தர் சிலைகள் தோண்டி எடுக்கப்படும் இப்புகைப்படம் 2015-ம் ஆண்டில் இருந்தே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முன்பே யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
அடுத்ததாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் எந்தவொரு பதிவும் கிடைக்கவில்லை. இந்த புகைப்படம் முதல் புகைப்படத்துடன் தொடர்புடையதாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த புகைப்படங்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் சுற்றி வருகின்றன எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
பதிவு 2 :
இந்த பதிவில் உள்ள முதல் புகைப்படம் பீகார் மாநிலத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி பணியின் போது கிடைத்த பழமையான டெல்ஹாரா பல்கலைக்கழகத்தின் பகுதி என 2019-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
இரண்டாவதாக குகையில் புத்தரின் சிலை இருப்பது போன்ற புகைப்படத்தை ரிவர்ஜ் சேர்ச் செய்கையில், 2015-ல் themysteriousindia இணையதளத்தில் ” A Peep Into Hindu & Buddhist Past of Afghanistan” எனும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் இடம்பெற்று இருக்கிறது.
மூன்றாவதாக புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டக்ஸிலா புத்த மடாலயத்தின் இடிபாடுகள் என அறிய முடிந்தது.
பதிவு 3 :
மண் குவியலில் இருந்து எடுக்கப்படும் புத்த சிலைகளின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2019 ஏப்ரல் 21-ம் தேதி மியான்மர் லைவ் எனும் முகநூல் பக்கத்தில் இந்த புகைப்படத்துடன் மேலும் இரு புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.
பதிவு 4 :
மேற்காணும் புத்த சிலை 2018-ம் ஆண்டில் Pinterest தளத்தில் பாலா பேரரசு காலத்து புத்த சிலைகளின் தொகுப்பில் இடம்பெற்று இருக்கிறது.
கண்டெய்னரில் சிலைகளுடன் இருவர் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில்பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டை தொடர்புப்படுத்தி சில பதிவுகள் கிடைத்துள்ளன.
2012-ல் wisdomquarterly எனும் வலைப்பதிவு தளத்தில், விலைமதிப்பற்ற புத்த சிலைகள் மற்றும் நினைவுச்சிலைகள் பாகிஸ்தான் நாட்டில் இருந்து கடத்தப்பட்ட போது மீட்கப்பட்டதாக இடம்பெற்று இருக்கிறது. இந்த சிலைகள் லாகூர் அருங்காட்சியகத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2018-ல் ஆஸ்திரேலியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட புத்த சிலை, நினைவு சின்னங்கள், 2012-ல் பாகிஸ்தானில் புத்த சிலைகள் கடத்தப்படுவதாக வெளியான செய்தியில் இடம்பெற்ற புகைப்படம் என இந்தியாவிற்கு தொடர்பில்லாத பல புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நிலத்தை சமன் செய்யும் போது இந்து மத அடையாளங்கள், சிவலிங்கம், தூண்கள் போன்றவை கிடைத்துள்ளதாக ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்தது. அது தொடர்பாக வெளியான சில புகைப்படங்கள் இந்திய அளவில் வைரலாகின. ஆனால், அந்த பழமையான கலைப்பொருட்கள் புத்த காலத்து அடையாளங்கள் என ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ல் வெளியான செய்தியையும் பகிர்ந்து வருகிறார்கள்.
மே 22-ம் தேதி ஹிந்துதான் டைம்ஸ் செய்தியில், ராமர் கோவில் கட்டும் பகுதியில் கிடைத்த பண்டைய கலைப் பொருட்கள் அப்பகுதி புத்த ஸ்தலம் என நிரூபிப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் கூறியதே செய்தியில் வெளியாகி இருக்கிறது. அவர் மீட்கப்பட்ட பொருட்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஆய்வு செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறினாலே அதன் உண்மை தெரியவரும்.
முடிவு :
நம் தேடலில், அயோத்தியில் ராமர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் புத்தர் சிலைகள் கண்டெடுப்பு எனக் கூறும் தகவல் தவறானது. அதனுடன் பகிரப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும், பிற நாடுகளிலும் இருப்பவை. இணையத்தில் கிடைக்கும் புத்த சிலைகளை பயன்படுத்தி மதம் சார்ந்த தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தவறான செய்திகளை பகிர வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
ஆதாரம்
‘Ram temple site in Ayodhya a Buddhist Sthal’
A Peep Into Hindu & Buddhist Past of Afghanistan
After Nalanda and Vikramshila, Bihar unearths Telhara university
Australia returns Gandhara statue of Buddha to Pakistan
Pakistan struggles with smuggled Buddhist relics
https://in.pinterest.com/usernpprins/pala-period-buddha-images/