ராமர் கோவிலுக்கு அஸ்திவாரம் தோண்டிய போது தாமிர கேப்சூல் கிடைத்ததாக வதந்தி !

பரவிய செய்தி
இப்போது ராமர் கோயில் கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ராமர் கோயில் பற்றிய விபரம் கேப்ஸ்யூல் வடிவில் தாமிரத்தகட்டில் மூலப்பத்திரமாக இருந்தது கிடைத்துள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டும் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்கு முன்பாக, அஸ்திவாரம் தோண்டிய போது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமர் கோவில் பற்றிய விவரம் அடங்கிய கேப்சூல் வடிவில் தாமிரத்தகட்டில் மூலப்பத்திரம் கிடைத்துள்ளதாக கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவை InVID மூலம் தனித்தனி ஃப்ரேம்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் கடந்த ஜூன் மாதம், அயோத்தியின் ராமர் கோவில் கட்டும் பகுதியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட தாமிர தகடு கிடைத்துள்ளதாக இதே வீடியோவை பரப்பி வந்துள்ளனர் என தெரிந்து கொண்டோம்.
🍁☀️🍁
While digging for the construction of Sri Ram Lalla Mandir at Sri Ram Janmabhoomi at Ayodhya, a Time Capsule was discovered showing the details of original temple.. ⚖️ pic.twitter.com/bQMNAALGuo— Dr. Ramesh C Sharma (@ramesh_gogi) June 8, 2020
உண்மையான வீடியோ அயோத்தியாவின் ராம்ஜன்மபூமியில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. வைரல் செய்யப்படும் வீடியோ ஏப்ரல் 9-ம் தேதி ” Define Avcisi ” எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த பக்கம் கைவினைப் பொருட்கள், நாணயங்கள் குறித்து வெளியிடக்கூடியவை. ராம்ஜன்மபூமியில் நிலத்தில் தோண்டும் போது பழங்கால சிற்பங்கள், தூண்கள் கிடைத்ததாக செய்திகள் வெளியாகியது மே மாதத்தில், அதற்கு முன்பே இவ்வீடியோ பகிரப்பட்டு உள்ளது.
வீடியோவில் காண்பிக்கப்பட்ட ஆவணத்தில் இருக்கும் அடையாளங்கள், குறியீடுகள் இந்தியாவைச் சேர்ந்தது போல் இல்லை. கலைப்பொருளில் எழுதப்பட்டு இருக்கும் மொழி சமஸ்கிருதம் இல்லை, ஹீப்ரு எனும் மொழியாகும். காண்பிப்பவர் இந்தியரோ அல்லது இந்துவோ அல்ல, யூதர் ஆவார். ஹீப்ரு மொழி இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தது.
இஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த ஹீப்ரூ எனும் மொழி மற்றும் குறியீடுகள் இடம்பெற்ற தாமிர குப்பியை இந்தியாவில் அயோத்தியில் கிடைத்ததாக வதந்தியை பரப்பி உள்ளார்கள். ” Define Avcisi ” இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபோன்ற பல வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. அனைத்தும் வெவ்வேறு இஸ்ரேலிய அடையாளங்களை கொண்டவையாக உள்ளன.
மேலும் படிக்க : அயோத்தியில் டைம் கேப்சூல் புதைக்கப்பட போவதில்லை-அறக்கட்டளை மறுப்பு !
இதற்கு முன்பாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பகுதியில் 200 அடி ஆழத்தில் ” டைம் கேப்சூல் ” புதைக்கப்படுவதாக வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது வரலாறு அடங்கிய தாமிரத்தகடு அடங்கிய கேப்சூல் கிடைத்ததாக வைரலாகும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல, தவறான வீடியோ என்பதை அறிய முடிகிறது.