அயோத்தியில் கூடிய கூட்டம் என வைரலாகும் பழைய வீடியோ, புகைப்படங்கள் !

பரவிய செய்தி
அடிக்கல் நாட்டுவது என்ற பெயரில் அயோத்தியில் கூடிய கூட்டமிது.இதற்கு காரணம் பிரதமர் மோடிதான். ஊரடங்கு விதிகளை அவரே மீறி இருக்கிறார்.அவரை முதல் குற்றவாளியாக்கி வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஊரடங்கை மீறினார்கள் என்று நாட்டில் எவர் மீதும் நடவடிக்கை எடுக்க கூடாது.
மதிப்பீடு
விளக்கம்
ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற போது ஊரடங்கை மீறி கூடிய கூட்டம் என மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை காண நேரிட்டது. இந்த கூட்டத்தால் இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் என பல பதிவுகள் வெளியாகி வருகின்றன.
ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று முகநூலில் வெளியான பதிவுகளில், ஊரடங்கு விதிகளை மீறி அயோத்தியில் கூடிய கூட்டம் என இப்புகைப்படத்தினை பகிர்ந்து இருந்தார்கள். ஆனால், ஆகஸ்ட் 4-ம் தேதி எஸ்.கே ரமேஷ் என்பவர் இந்து சேனை எனும் முகநூல் பக்கத்தில் ” 500 ஆண்டுகால தவம், வரலாற்று சிறப்பு மிகுந்த அயோத்தி ஸ்ரீராமர் கோவில், பூமி பூஜை விழா. அடுத்த திருப்பதி, சபரிமலை போல் அயோத்தியும் வரலாறாக மாற வேண்டும் ” என்ற வாசகத்துடன் பகிர்ந்த வீடியோவில் இருந்தே வைரலாகும் புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை அனைத்து ஊடகங்களும் நேரடியாக ஒளிபரப்பு செய்திருந்தன. அயோத்திக்கு மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஒருவேளை, தடையை மீறி பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தால் நிச்சயம் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும்.
வைரல் செய்யப்படும் 59 நொடிகள் கொண்ட வீடியோவில் 30-வது நொடியில் சுவரில் எழுதப்பட்டு இருக்கும் விளம்பர வாசகம் கன்னட மொழியில் இருப்பதை காண முடிந்தது. வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018-ம் ஆண்டு கர்நாடகாவின் கலபுராகி பகுதியில் நடைபெற்ற ராம நவமி பேரணிபோது எடுக்கப்பட்ட வீடியோ என தெரிந்து கொள்ள முடிந்தது.
2018-ம் ஆண்டில் கர்நாடகாவில் நடைபெற்ற ராம நவமி பேரணி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அயோத்தியில் விதிகளை மீறி அடிக்கல் நாட்டு விழாவிற்கு கூடிய கூட்டம் என வதந்தியை பரப்பி வருகிறார்கள். அயோத்தியில் நிகழும் பூமி பூஜைக்காக கலபுராகி பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்திகளில் வெளியாகி இருந்தது.
மேலும் படிக்க : கொரோனாவை பரப்பும் ராமர் மாநாடு என தவறாக பரவும் பழைய வீடியோ !
முடிவு :
நம் தேடலில், அடிக்கல் நாட்டுவது என்ற பெயரில் அயோத்தியில் கூடிய கூட்டமிது என வைரல் செய்யப்படும் புகைப்படம் 2018-ம் ஆண்டு கர்நாடகாவில் பேரணியின் எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.