5 கோடி பக்தர்கள் ராமர் கோயிலுக்கு சென்றால் உ.பி ரூ.4 லட்சம் கோடி வருமானம் பெறுமென எஸ்பிஐ கூறியதா ? உண்மை என்ன ?

பரவிய செய்தி

அயோத்தி ராமர் கோவில் மூலம், உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என்றும், வரி வருமானம் மட்டுமே ரூ.25,000 கோடி அம்மாநில அரசுக்கு வரும் என்றும், ஸ்டேட் பாங்க் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் பல, புகழ்பெற்ற மசூதிகள், தேவாலயங்கள் இருக்கும் ஆன்மீக பூமியான தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு இது போன்று வரவிருக்கும் வருமானத்தை அறநிலையத் துறை தடுக்கிறது. தமிழகத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை இணைத்தால் இதை விட அதிகமான வருமானம் வரும். அறநிலையத் துறை உண்டியல் வருமானத்தில் மட்டுமே குறியாக இருக்கிறது –  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரவள்ளூர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று (பிப்ரவரி 15) நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “5 கோடி பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதன் மூலம், உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என்றும், வரி வருமானம் மட்டுமே ரூ.25,000 கோடி அம்மாநில அரசுக்கு வரும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வு குழு கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனப் பேசியுள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவாக வெளியிட்டுள்ளார். 

உண்மை என்ன ?

அண்ணாமலை கூறியது போன்று அயோத்தி ராமர் கோவிலினால் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என்று SBI ஏதாவது அறிக்கை வெளியிட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்து பார்த்தோம். Business Standard இது தொடர்பாக கடந்த மாதம் 24 அன்று “ராமர் கோயில் திறப்பு: உ.பி.யில் சுற்றுலாப் பயணிகளின் மொத்த செலவு இந்த ஆண்டில் ரூ.4 டிரில்லியனைத் தாண்டும்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், எஸ்பிஐ-யின் ECOWRAP அமைப்பு இந்த தரவுகளை மதிப்பிட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே எஸ்பிஐ-யின் ECOWRAP பற்றியும், இது வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும் தேடியதில், ஜனவரி 21 அன்று “லத்தீன் அமெரிக்கா ஸ்காண்டிநேவியாவை சந்திக்கும் இடம்: இரட்சிப்புக்கான பாதை உத்தரப் பிரதேசம் வழியாக செல்கிறது” (“WHERE LATIN AMERICA MEETS SCANDINAVIA: THE ROAD TO SALVATION PASSES THROUGH UTTAR PRADESH”) என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

அதில், “2022 ஆம் ஆண்டில், 32 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் உ.பிக்கு வருகை தந்தனர் (இதில் 2.21 கோடி சுற்றுலாப் பயணிகள் அயோத்தியாவில் மட்டும்), கிட்டத்தட்ட 200% அதிகரித்துள்ளது. NSS வழங்கும் செலவினத்தின் அடிப்படையில் (அனைத்து இந்திய அளவில்), உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த செலவு சுமார் ரூ.2.2 லட்சம் கோடி ஆகும். உ.பி.யில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செலவு செய்த ரூ.10,000 கோடியையும் சேர்த்து, உ.பி.யில் சுற்றுலாப் பயணிகளின் மொத்தச் செலவு ரூ.2.3 லட்சம் கோடி.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டதையும், சுற்றுலாவை மேம்படுத்த உ.பி அரசு எடுத்துள்ள முயற்சிகளையும் கருத்தில் கொண்டு உ.பி.யில் சுற்றுலா பயணிகளின் மொத்த செலவு இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.4 லட்சம் கோடியை தாண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். சுற்றுலாப் பயணிகளின் பெருக்கத்தின் காரணமாக உ.பி அரசு ரூ.20,000-25,000 கோடி கூடுதல் வரி வருவாயைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், 5 கோடி பக்தர்கள் அயோத்தியா கோயிலுக்கு செல்வதன் மூலம் 4 லட்சம் கோடி வருமானம் வரும் என எங்கும் குறிப்பிடவில்லை. 

இந்த அறிக்கையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 32 கோடி சுற்றுலா பயணிகளின் செலவினங்கள் ரூ.2.3 லட்சம் கோடி எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறித்து தேடுகையில், 2022 சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறித்து உத்தரப் பிரதேச அரசு, மாவட்டங்கள் அளவிலான எண்ணிக்கையுடன் மொத்தம் 31.7 கோடி எனத் தெரிவித்து உள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ள NSS Report no 580 இந்தியாவின் உள்நாட்டு சுற்றுலா குறித்த அறிக்கை கடந்த 2017ல் வெளியிடப்பட்டது. அதில் வகைப்படுத்தப்பட்ட செலவினங்களின்(சராசரி தொகை) தொகையை குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இவ்வறிக்கையில், கடந்த 30 நாட்களில் பக்தர்கள் மற்றும் மதம் சம்பந்தமான சுற்றுலாப் பயணிகளின் பங்கு வெறும் 2% எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 365 நாட்களில் உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலா செலவினங்களில் விடுமுறைக்காக, மருத்துவம், ஷாப்பிங் உள்ளிட்டவையே முக்கிய அங்கமாக அமைந்துள்ளதை பார்க்கலாம். இவற்றின் அடிப்படையில் பார்த்தால், அயோத்தியாவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலால் மட்டுமே 4 லட்சம் கோடி சுற்றுலா செலவினங்கள் வரும் எனக் கூறுவது தவறான தகவல். அதுமட்டுமின்றி, 4 லட்சம் கோடி சுற்றுலா செலவினங்கள் வரும் என்பது நம்பிக்கை அடிப்படையிலான எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.

ஏற்கனவே அயோத்தியாவிற்கு 2.21 கோடி சுற்றுலாப் பயணிகள் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அறிக்கையைப் போன்றே ஒவ்வொரு மாதமும் பல அறிக்கைகளை ECOWRAP வெளியிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. 

இது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்த அறிக்கையை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது அதிகாரப்பூர்வ நிலைபாடாக தெரிவிக்கவில்லை. மாறாக, இது Ecowrap என்னும் ஆராய்ச்சி குழுவின் ஒரு அறிக்கை மட்டுமே. மேலும் இந்த அறிக்கையின் பொறுப்பு துறப்பில் பின்வருமாறு கூறியுள்ளது.

அதில், “இந்த அறிக்கை வங்கியின் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு வெளியீடு அல்ல. வெளிப்படுத்தப்பட்ட கருத்து ஆராய்ச்சி குழுவின் கருத்து மட்டுமே மற்றும் இது வங்கி அல்லது அதன் துணை நிறுவனங்களின் கருத்தை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. சரியான ஒப்புதலுடன் உள்ளடக்கங்களை மீண்டும் உருவாக்க முடியும். இவை பொருளாதாரம் மற்றும் நிதி வளர்ச்சிகள் பற்றிய பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் தரவை அடிப்படையாகக் கொண்டது மற்றும் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் துல்லியத்திற்கு எந்தப் பொறுப்பும் ஏற்கப்படாது. இந்த அறிக்கையில் காணப்படும் பார்வைகள், கருத்துகள் அல்லது உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் ஏதாவது கருத்துகள் சொல்லியிருந்தால், அதற்கு வங்கி அல்லது ஆராய்ச்சிக் குழு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பொறுப்பு துறப்பு மூலமாக நமக்கு தெரியவரும் தகவல் என்னவெனில், ’Ecowrap என்னும் ஆராய்ச்சி குழு’ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஒரு அங்கமாக செயல்பட்டாலும் அதன் அறிக்கைக்கும் வங்கிக்கும் எந்த நேரடி தொடர்பும் அல்ல. இது வங்கியின் அதிகாரப்பூர்வ நிலைபாடும் அல்ல. இது Ecowrap ஆராய்ச்சி குழுவின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. இந்த Ecowrap அறிக்கையின் பார்வைகள், கருத்துகள் அல்லது தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் யாரேனும் செயல்பட்டால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு வங்கியோ அல்லது இந்த ஆராய்ச்சி குழுவோ பொறுப்பேற்காது.

ஆனால் இது குறித்து வெளியிடப்படும் செய்திகளில் Ecowrap என்னும் சொல் தவிர்க்கப்பட்டு “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை” என்று மட்டும் தலைப்புகளில் வைக்கப்பட்டு பரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Ecowrap என்னும் ஆராய்ச்சி குழு எத்தனை ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கியது, எந்த மாதிரியான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது என்பது பற்றிய தகவல்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணையதளத்தில் இடம்பெறவில்லை.

மேலும் படிக்க: 2029ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என எஸ்பிஐ கூறவில்லை.

இதற்கு முன்னதாகவும் Ecowrap அறிக்கைகள் பலவும், Ecowrap சொல்லை மட்டும் தவிர்த்து SBI அறிக்கை என்று குறிப்பிட்டு பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்தும் அப்போதே ஆய்வு செய்து நமது யூடர்ன் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

இந்திய சுற்றுலாத்துறை வருமானம் குறித்து ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகம் ஏதாவது அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியிட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். ராஜ்ய சபாவில் சுற்றுலாத்துறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலத்துள்ள ஒன்றிய அரசு, இது தொடர்பாக 03.08.2023 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுற்றுலா அமைச்சகம் தேசிய மற்றும் மாநில அளவில் சுற்றுலா மற்றும் சுற்றுலா தொடர்புடைய நடவடிக்கைகளின் வருமானத் தரவுகளைப் பராமரிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதில், சுற்றுலா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (TGDP) படி, 2021-22 ஆம் நிதியாண்டில் சுற்றுலாத்துறையின் நேரடி ஜிடிபி ரூ. 2,16,185.43 கோடியாகவும், சுற்றுலாத்துறையின் மறைமுக ஜிடிபி ரூ.1,99,503.60 கோடியாகவும், சுற்றுலாத்துறையின் மொத்த ஜிடிபி ரூ.4,15,689.03 கோடியாகவும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுற்றுலாத்துறையின் மொத்த ஜிடிபியே 4.15 லட்சம் கோடி தான் என்பதை அறிய முடிகிறது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலால் உத்திரபிரதேசத்துக்கு ஆண்டுக்கு 4 லட்சம் கோடி வருவாய் வரும் என்பது முரணாக உள்ளது.

முடிவு :

நம் தேடலில், அயோத்தி ராமர் கோயிலால் உ.பியில் சுற்றுலா பயணிகளின் மொத்த செலவு இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று எஸ்பிஐயின் ECOWRAP வெளியிட்டுள்ள தகவல்கள் என்பதையும், அதேபோல் அண்ணாமலை கூறுவது போல் அது எஸ்.பி.ஐ வங்கியின் நேரடி அறிக்கை இல்லை, 5 கோடி பக்தர்கள் ராமர் கோயிலுக்கு செல்வதால் ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என அறிக்கையில் கூறவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader