ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய போது காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடையில் நாடாளுமன்றம் சென்றதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி
ஒருபோதும் மறக்காதே. ஒருபோதும் மன்னிக்காதே. ஆகஸ்ட் 5, 2020 அன்று, ஸ்ரீ ராம் ஜென்மபூமியின் அடிக்கல் நாட்டப்பட்டபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு சென்றனர்.
X post link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட போது காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்திற்கு சென்றதாகக் கூறி ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை, கையில் பதாகை உடன் நாடாளுமன்றம் பகுதியில் செல்லும் போது எடுக்கப்பட்ட படத்தை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஒருபோதும் மறக்காதே. ஒருபோதும் மன்னிக்காதே….
ஆகஸ்ட் 5, 2020 அன்று, ஸ்ரீ ராம ஜென்மபூமியின் அடிக்கல் நாட்டப்பட்டபோது, #காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து #பாராளுமன்றத்திற்கு சென்றனர்…#ஜெய்ஸ்ரீராம் 🏹🏹🏹 🙏🙏🙏🛕🛕🛕🚩🚩🚩#JaiShreeRam #JaiShriRam #jaihanuman pic.twitter.com/GO8Bdxmw33
— Kavitha Suresh (@suravitha) November 15, 2023
ஒருபோதும் மறக்காதே.
ஒருபோதும் மன்னிக்காதே. 🤬🤬ஆகஸ்ட் 5, 2020 அன்று, ஸ்ரீ ராம் ஜென்மபூமியின் அடிக்கல் நாட்டப்பட்டபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு சென்றனர்😱😱 🙆♂️🙆♂️
ஜெய் ஸ்ரீ ராம்🚩 pic.twitter.com/WrYpgV5UGS
— Jayaramachandran🇮🇳 (@Jayaram9942Blr) November 15, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பவர்களின் கையில் உள்ள பதாகையில், GST , PRODUCTS போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அவர்களின் கழுத்தில் காய்கறி மாலையை அணிந்து உள்ளனர். இதைப் பார்ப்பதற்கு விலைவாசி உயர்விற்காக போராடியது போன்று உள்ளது.
ஆகையால், வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2022 ஆகஸ்ட் 5ம் தேதி விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவைக்காக ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ராஷ்டிரபதி பவனை நோக்கி செல்ல முயன்ற போது காவல்துறையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக தி டெலிகிராப் ஆன்லைன் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
மேலும், 2022 ஆகஸ்ட் 5ம் தேதி ராகுல் காந்தி கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஜீ நியூஸ் சேனலில் வெளியாகி இருப்பதை காணலாம்.
காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடையில் போராட்டம் நடத்தியதை எதற்காக ராமர் கோயில் உடன் தொடர்புபடுத்தப்பட்டது என்பது குறித்து தேடுகையில், இவ்விரண்டையும் இணைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்தை பார்க்க முடிந்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ” காங்கிரஸ் தினமும் சாதாரண உடையிலேயே போராட்டத்தில் ஈடுபடுவர். ஆனால், இன்று கருப்பு உடை அணிந்து வந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராம ஜென்மபூமிக்கு அடிக்கல் நாட்டிய நாள் என்பதால் அதை மறைமுக செய்தியை அனுப்ப அவர்கள் அவ்வாறு செய்தனர் ” என அமித்ஷா ஏஎன்ஐ செய்தி முகமைக்கு பேட்டி அளித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.
A blessed day in Ayodhya.
This day will remain etched in the memory of every Indian.
May the blessings of Bhagwan Shree Ram always be upon us. May India scale new heights of progress. May every Indian be healthy and prosperous. @ShriRamTeerth pic.twitter.com/4JbHYcTv0b
— Narendra Modi (@narendramodi) August 5, 2020
2020 ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியினர் 2022 ஆகஸ்ட் 5ம் தேதி விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், இரண்டையும் இணைத்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : திமுக அரசு தாம்பரத்தில் ராமர் கோயிலை இடித்ததாகப் பழைய வீடியோவைப் பரப்பும் பாஜகவினர்
மேலும் படிக்க : ராமர் கோவிலுக்கு அஸ்திவாரம் தோண்டிய போது தாமிர கேப்சூல் கிடைத்ததாக வதந்தி !
முடிவு :
நம் தேடலில், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டப்பட்ட போது காங்கிரஸ் எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு சென்றதாகப் பரப்பப்படும் தகவல் பொய்.
வைரல் செய்யப்படும் புகைப்படம் கடந்த 2022 ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.