அயோத்தி ராமர் கோவிலில் குரங்கு தினமும் மணி அடிக்கும் வீடியோவா ?

பரவிய செய்தி
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தினமும் பூஜை நேரத்தில் மனிதனால் அசைக்க முடியாத ஆலய மணியை அடிக்கின்றது இந்தக்குரங்கு.
மதிப்பீடு
விளக்கம்
அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் தினமும் பூஜை நடைபெறும் நேரத்தில் மனிதனால் அசைக்க முடியாத ஆலய மணியை குரங்கு அடிக்கிறது பாருங்கள் என கீழ்காணும் வீடியோ கடந்த 2019-ல் இருந்து தற்போது வரை வைரலாகி வருகிறது.
1.16 நிமிடம் கொண்ட வீடியோவில், கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கும் கொடி மரத்தின் உச்சில் அமர்ந்து இருக்கும் குரங்கு கொடி மரத்தை அசைக்க அசைக்க மணிகளில் இருந்து ஒலி எழுப்பப்படுகிறது. கீழே மனிதர்கள் அதைப் பார்த்தபடியே நடந்து செல்வதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் குரங்கு மணி அடிப்பதாக கூறி பரப்பும் வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம். கொரோனா வைரஸ் நெருக்கடியால் அயோத்தியில் புதிதாக கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் பணிகள் முழுமை அடையவில்லை. மேலும், கடந்த ஆண்டில் இருந்து பரவுவதால் எந்த ராமர் கோவிலை குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்ற குழப்பமும் உண்டாகியது.
இந்து கோவிலின் மகாமண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு இருக்கும் கொடி மரம் பெரும்பாலும் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள கோவில்களில் மட்டுமே பொதுவாக காணப்படுகிறது. எனவே, குரங்கு கோவில் கொடி மரத்தில் உள்ள மணியை அடித்தது தென்னிந்தியாவில் உள்ள கோவிலாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம்.
இதையடுத்து, ” Monkey ringing bell in the temple ” என்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடுகையில் யூடியூப் வீடியோக்கள் சில கிடைத்தன. அதில், 2018-ல் செப்டம்பர் 10-ம் தேதி Manjunath G எனும் யூடியூப் சேனலில் வைரலாகும் வீடியோ தேவராயணாதுர்கா கோவில், கர்நாடகா எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், இந்த வீடியோவின் தரம் உயர்ந்ததாக இருப்பதையும் கவனிக்கலாம்.
கர்நாடகாவில் உள்ள தேவராயணாதுர்கா மலைக் கோவிலில் குரங்கின் நடவடிக்கை என குறிப்பிட்டு வெளியிட்ட வீடியோவில் பிற தகவல்கள் ஏதுமில்லை. கிடைத்த தகவலை வைத்து மேற்கொண்டு தேடிய பொழுது, தேவராயணாதுர்கா கோவில் கர்நாடகாவின் தும்கூர் பகுதியின் அருகே உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மலைப்பகுதியின் அடிவாரத்தில் போக நரசிம்மா என்ற கோவிலும், மலையில் யோக நரசிம்மா எனும் கோவிலும் அமைந்துள்ளது.
வைரலான வீடியோவில் உள்ள கொடி மரத்தினை கீழ்காணும் தேவராயணாதுர்கா மலையில் உள்ள போக நரசிம்மா கோவிலின் வீடியோவில் காணலாம்.
கொடி மரத்தின் உச்சியில் குரங்கு மணியை அடிக்கும் நிகழ்வு பூஜைக்காக அடித்ததா அல்லது விளையாட்டாக அடித்ததா எனத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் அதை ஆராய முடியவில்லை. எனினும், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் குரங்கு மணி அடிப்பது தினமும் நிகழ்வதாக தவறாக பரவி வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் தினமும் பூஜையின் போது குரங்கு மணி அடிப்பதாக வைரலாகும் வீடியோ கர்நாடகாவின் தேவராயணாதுர்கா மலையில் உள்ள போக நரசிம்மா கோவிலில் எடுக்கப்பட்ட வீடியோ. மேலும், இது சமீபத்திய வீடியோ அல்ல என்பதை அறிய முடிகிறது.