This article is from Jul 30, 2020

அயோத்தியில் டைம் கேப்சூல் புதைக்கப்பட போவதில்லை-அறக்கட்டளை மறுப்பு !

பரவிய செய்தி

அயோத்தியில் கட்டப்படவுள்ள ஸ்ரீராமர் கோயிலின் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும்  டைம் கேப்சூல். அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு அதற்கான பணிகள் துவங்கின. ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில், அயோத்தியில் கட்ட உள்ள ராமர் கோவிலில் 200 அடி ஆழத்தில் ” டைம் கேப்சூல் ” புதைக்கப்படும் என கோவில் அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் என்பவர் கூறியதாக செய்திகளில் வெளியாகி வைரலாகின.

எதிர்காலத்தில் கோவில் குறித்த குழப்பங்கள், சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் வரலாற்று தகவல்கள் அடங்கிய டைம் கேப்சூல் புதைக்கப்படும் என ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை முடிவை எடுத்து உள்ளதாக ஜூலை 27-ம் தேதி இந்திய அளவில் பல மொழிகளில் செய்திகள் வெளியாகின. அதனால் சமூக வலைதளங்களிலும் அத்தகவல் பரவியது. மேலும், டைம் கேப்சூல் என பல புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன.

மறுபுறம், இப்படி பரவிய புகைப்படமானது 2018-ல் வெளியான செய்தியில் இருந்து எடுத்து பரப்பி வருகிறார்கள் எனக் கூறி கிண்டல் உடன் வைரல் செய்யப்பட்டன. செய்தி நிறுவனங்கள் கூட இப்புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தனர். மாதிரி படத்திற்காக இதை பயன்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால், அதுவும் சர்ச்சையாகியது.

இப்படி இருக்கையில், ராமர் கோவிலில் டைம் கேப்சூல் புதைக்கப்படுவதாக பரவிய செய்திக்கு ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராம் ஜென்ம பூமி க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுமானத் தளத்தில் டைம் கேப்சூல் வைப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை. இதுபோன்ற எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் ” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராமர் கோவில் பகுதியில் ” தாம்ரா பத்ராஸ் ” எனும் செப்பு தகடுகளை வைக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதில் அயோத்தியின் முழுமையான வரலாறு மற்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ராமரின் விரிவான வாழ்க்கை ஆகியவை இடம்பெறும் என சம்பத் ராய் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

ராமர் கோவிலில் வரலாற்று தகவல் அடங்கிய டைம் கேப்சூல் 200 அடி ஆழத்தில் வைக்கப்படுவதாக வெளியாகி சமூக வலைதளங்களில் 2,000 அடி ஆழத்தில் வைக்கப்படுவதாக வதந்திகள் பரவின. இறுதியில், கோவில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் தரப்பில் மறுப்பு தெரிவித்ததோடு வதந்தியை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். வதந்தி பரவிய அளவிற்கு உண்மை தகவல் பரவாதக் காரணத்தினால் தொடர்ந்து சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader