This article is from Aug 13, 2020

அயோத்தி ராமர் கோவிலில் தலித் அர்ச்சகர் நியமனமா ?| வி.எச்.பி-யின் கோரிக்கை!

பரவிய செய்தி

விஷ்வ ஹிந்து பரிக்‌ஷத் ராம ஜென்ம பூமிக்காக எல்லா புண்ணிய ஸ்தலங்களிலிருந்தும் புண்ணிய மண் எடுத்துச் சென்றது. மேலும் தலித் அர்ச்சர்களையும் தேர்ந்தெடுத்து அயோத்தி கோவிலில் பணியிலமர்த்துகிறது..! ஜெய் ஶ்ரீராம்..!

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு புரளிகள், தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிக்‌ஷத் அமைப்பு அயோத்தி கட்டப்படும் ராமர் கோவிலில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து அர்ச்சகரை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துவதாக அர்ச்சகரின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

“அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகர் இடம்பெற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்காக அந்த சமூகத்தினர் அளிக்கும் பணத்தை பயன்படுத்த வேண்டும் ” என விஷ்வ ஹிந்து பரிக்‌ஷத் அமைப்பு தெரிவித்து உள்ளதாக 2019 டிசம்பர் 21-ம் தேதி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

” அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய நாக்பூர், அவரின் பிறப்பிடமான மோவ், அவர்களின் சமூகத்தின் முக்கிய இடங்களான காசியில் உள்ள சாந்த் ரவிதாஸ் கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள தாந்தியா பில் கோவில், சீதாமாரியில் உள்ள மகர்ஷி வால்மீகி ஆசிரமம், மகாத்மா காந்தி ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்த இடங்களில் இருந்து மண் எடுத்து அயோத்திக்கு அனுப்பப்படும் ” என விஷ்வ ஹிந்து பரிக்‌ஷத் அமைப்பு கூறியதாக  2020 ஜூலை 31-ம் தேதி எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

அதே செய்தியில், அயோத்தியில் கட்ட உள்ள ராமர் கோவிலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என இதற்கு முன்பாக கோரிக்கை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினராக இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கர்சேவாக் காமேஷ்வர் சப்பால் அவர்களால் 1989-ம் ஆண்டில் ராம் ஜன்மபூமிக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை நினைவு கூறுவதாக வி.எச்.பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாகவும் இடம்பெற்று இருக்கிறது.

இருப்பினும், ராமர் கோவிலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகரை பணியில் அமர்த்துவதாக எந்தவொரு செய்தியோ அல்லது அதிகாரப்பூர்வமாக அறிவிப்போ வெளியாகவில்லை. கடந்த ஆண்டில் வி.ச்.பி அமைப்பு முன்வைத்த கோரிக்கையை தற்போது நிகழ்ந்ததாக பரப்பி வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வி.ச்.பி தங்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளது, எனினும் அர்ச்சகர் நியமனத்தில் கோவில் அறக்கட்டளையே முடிவெடுக்கும்.

கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகள் உடன் அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ளும் 200 முக்கிய பிரமுகர்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த துறவியும் அழைக்கப்பட வேண்டும் என உ.பியின் முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்து இருந்தார்.

அயோத்தியில் ஒடுக்கப்பட்ட சமூக அர்ச்சகர் நியமிக்கப்பட்டதாக வெளியான பதிவில் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018-ம் ஆண்டு ஏப்ரல் தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து வெளியான செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அதில், ” தெலங்கானாவின் சில்கூரில் உள்ள பகவான் பாலாஜி கோவிலின் தலைமை அர்ச்சகர்களின் ஒருவரான 60 வயதான சி.எஸ்.ரங்கராஜன் என்பவர் 400 ஆண்டுகள் பழமையான கோவிலில் ” முனி வாகனா சேவா ” என்ற அரிய சடங்கை ஏற்பாடு செய்தார். சடங்கின்படி, அர்ச்சகர் ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பக்தரை கோவிலின் கருவறைக்குள் அழைத்துச் சென்றார் ” என வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், விஷ்வ ஹிந்து பரிக்‌ஷத் ராம ஜென்ம பூமிக்காக எல்லா புண்ணிய ஸ்தலங்களிலிருந்தும் புண்ணிய மண் எடுத்துச் சென்றது எனும் தகவல் உண்மை. தலித் அர்ச்சர்களையும் தேர்ந்தெடுத்து அயோத்தி கோவிலில் பணியிலமர்த்த வேண்டும் என வி.எச்.பி கோரிக்கை வைத்தது. எனினும், அதுகுறித்த முடிவை அறக்கட்டளையே எடுக்கும். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அர்ச்சகரை நியமித்ததாக தகவல் இல்லை. அதனுடன் பகிரப்படும் புகைப்படம் தெலங்கானா மாநிலத்தின் கோவில் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader