This article is from Feb 10, 2021

“பாஷ்யம்” கோயம்பேடு மெட்ரோ.. சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரா ?

பரவிய செய்தி

வெள்ளையன் ஆட்சியில் 1932 ஆம் ஆண்டில் தனி ஆளாக சென்னை கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றிய பாஷ்யம் நினைவாக !!

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ” பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ ” எனப் பெயர் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ” யார் இந்த பாஷ்யம், தமிழகத்திற்கு செய்த தியாகம் என்ன ” என மெட்ரோ ரயில் பெயர் மாற்றத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, யார் இந்த “பாஷ்யம்” ?. பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா 1932-ம் ஆண்டில் வெள்ளையன் ஆட்சியில் தனி ஆளாக சென்னை கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றியவர் என்றும், அவரின் நினைவாக கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு பெயர் மாற்றப்பட்டு உள்ளதாக நீண்ட ரைட்-அப்கள் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

” பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ ” எனும் பெயர் மாற்றம் வைரலாகும் ரைட்-அப்களில் உள்ளது போன்ற கதையை மையப்படுத்தியோ, சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை வைத்தோ மாற்றவில்லை. அது விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்ட பாஷ்யம் எனும் நிறுவனத்தின் பெயரே. மெட்ரோ நிலைய பெயரின் இருபுறமும் பாஷ்யம் நிறுவன லோகோ மற்றும் மெட்ரோ ரயில் லோகோ இருப்பதை காணலாம்

பிப்ரவரி 7-ம் தேதி ” Branding strategy pays off for Metro ” எனும் தலைப்பில் வெளியான தி ஹிந்து ஆங்கில செய்தியில், ” நந்தனம் மற்றும் ஏஜி-டிஎம்ஸ் மெட்ரோ நிலையங்களுக்கு அடுத்து கோயம்பேடு நிலையத்திற்கும் விளம்பரதாரர் கிடைத்து உள்ளதால், செமி நேமிங் உரிமம்(ரயில் நிலையத்துடன் நிறுவனத்தின் பெயரை சேர்த்து விளம்பரம்) கிடைத்துள்ளது.

கோயம்பேடு நிலையத்திற்கான செமி நேமிங் உரிமத்திற்கான ஒப்பந்ததை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக ” வெளியாகி இருக்கிறது.

பிராண்டிங் விளம்பரம் மூலம் மெட்ரோவிற்கு வருவாய் ஈட்டுவது குறித்து தி ஹிந்துவில் வெளியான செய்தியை சென்னை மெட்ரோ ரயில் உடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.

Twitter link | Archive link 

இதேபோல், முத்தூட் நந்தனம் நிலையம், ஏஜி-டிஎம்எஸ் லலிதா ஜூவல்லரி நிலையம், ஷெனாய் நகருக்கு பில்ரூத் ஹாஸ்பிடல் மற்றும் சைதாப்பேட்டைக்கு சிட்டி யூனியன் பேங்க் ஆகியவை செமி நேமிங் உரிமத்தை பெற்று உள்ளதாக செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களின் வருவாயை பெருக்க அனைத்து மெட்ரோ நிலையத்திலும் விளம்பர ஓப்பந்தங்கள் போடப்படுகிறது. அதன் அடிப்படையில், 25 லட்சம் முதல் 1 கோடி வரை ஒப்பந்த தொகை பெற்றுக் கொண்டு விளம்பரம் செய்து கொள்ள அனுமதி அளிக்கின்றனர். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒப்பந்தத்தை பெற்ற பாஷ்யம் கன்ஸ்டர்க்சன் ஆண்டிற்கு 1 கோடி வீதம் 3 ஆண்டுகளுக்கு டெண்டர் எடுத்து உள்ளதாக நியூஸ்18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.

சென்னை மெட்ரோ இணையதளத்தில், ” 23 மெட்ரோ நிலையங்களுக்கு ” செமி நேமிங் உரிமம்” ஒப்பந்தம் தொடர்பாக 50 லட்சம் முதல் 1 கோடி வரை ஒப்பந்த தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்கான விண்ணப்பமும் வழங்கப்பட்டு உள்ளது.  இது தொடர்பாக, சென்னை மெட்ரோ நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது, பதில் அளிக்கவில்லை. பின்னர் பதில் அளிக்கையில் அதையும் இணைக்கிறோம்.

2015-ம் ஆண்டு தி ஹிந்து ஆங்கில இணையதளத்தில் ” The flagstaff and the freedom fighter ” எனும் தலைப்பில் சுதந்திர போராட்ட வீரர் ஆர்யா கே பாஷ்யம் குறித்து பிரத்யக கட்டுரை வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், கோயம்பேடு மெட்ரோ நிலையத்தின் பெயரை ” பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ ” என மாற்றியதற்கு காரணம் விளம்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஷ்யம் கன்ஸ்டர்க்சன் நிறுவனத்தின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை சென்னை மெட்ரோ நிர்வாகம் சூட்டவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader