கேரளாவில் வாலுடன் குழந்தை பிறந்து உள்ளதா ? | சாத்தியம் தானா ?

பரவிய செய்தி
கேரள மாநிலம் தலச்சேரி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை வாலுடன் பிறந்து உள்ளது. இயற்கை நமக்கு ஏதோ சொல்ல நினைக்கிறது. புரிந்து கொள்ள நமக்கு நேரமில்லை.
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியாவில் வாலுடன் குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், சமீபத்தில் பரவும் படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல. எதனால் குழந்தைகள் அரிதாக வாலுடன் பிறக்கின்றன என்பது குறித்த மருத்துவ விளக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்.
விளக்கம்
சில நாட்களுக்கு சமூக வலைதளங்களில், கேரளாவில் பிறந்த ஆண் குழந்தை வாலுடன் இருப்பதாகக் கூறி பரவிய புகைப்படங்கள் குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருந்தது. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேரளா அல்லது கடப்பா என வெவ்வேறு பகுதியை குறிப்பிட்டு குழந்தையின் படங்கள் பகிரப்பட்டன.
படத்தின் உண்மைத்தன்மை :
வாலுடன் இருக்கும் குழந்தையின் படம் உண்மைதானா ? அதற்கான தகவலையும், காரணத்தையும் பற்றி ஆராய, குழந்தையின் புகைப்படம் கொண்டு இமேஜ் தேடல் செய்கையில், குழந்தையின் புகைப்படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல, கொலம்பியாவைச் சேர்ந்தவை என அறிய முடிந்தது.
ஜூன்14, 2019-ல் கொலம்பியாவில் வாலுடன் பிறந்த குழந்தையின் பல புகைப்படங்களை இணைத்து பதிவிட்ட El Indio Lempira முகநூல் பதிவை காண முடிந்தது. அந்த முகநூல் பதிவை அடிப்படையாக வைத்து ஓர் இணையதளத்தில் கட்டுரையும் வெளியாகி இருக்கிறது.
மேலும், கேரளாவில் குழந்தை வாலுடன் பிறந்ததாக எந்தவொரு முதன்மை செய்தி ஊடகத்திலும் வெளியாகவில்லை. ஆதாரம் இல்லாமல் ஒரு சில இணையதளங்களில் படங்களை மட்டும் வைத்து கட்டுரையை எழுதி இருக்கின்றனர்.
வால் எதனால் முளைக்கிறது ?
குழந்தைகள் பிறக்கும் பொழுதே வாலுடன் இருப்பது அரிதாக சில முறை ஏதாவது ஒரு பகுதியில் நிகழத்தான் செய்கிறது. அதற்கான மருத்துவ விளக்கத்தை மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
” கர்ப்பத்தின் ஆறாவது வாரத்தில், மனித கருவானது(கருமுட்டை) பல முதுகெலும்புகள் நிறைந்த ஒரு வாலினை பெற்றிருக்கிறது. இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களில் முதுகெலும்புகள் உருவாகுவதால் வால் மறைந்து வால் எலும்பு உருவாகிறது. அரிதான சந்தர்ப்பங்களில், மனிதக் குழந்தைகள் ஒரு வெஸ்டிஷியல் வால் உடன் பிறக்கின்றனர். எனினும், அத்தகைய வால்கள் முதுகெலும்பு இல்லாதவை மற்றும் பாதிப்புகள் இல்லாதவை. இதுபோன்ற சில நிகழ்வுகள் ஸ்பைனா பிஃபிசா உடன் தொடர்புடையவை. உதாரணமாக, அதாவது தண்டுவடம் முழுவதுமாக இணைக்கத் தவறியதால் நிகழ்கிறது. எனினும், குழந்தையின் உடலில் இருந்து வாலினை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றுவதில் சிக்கல் இல்லை ”
தொடர்புடைய சம்பவங்கள் :
இந்தியாவில் இதற்கு முன்பாகவே வாலுடன் குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 2002-ல் பஞ்சாபில் உள்ள காரார் எனும் பகுதியில் முஸ்லீம் குடும்பத்தில் வாலுடன் குழந்தை பிறந்தது. 4 இன்ச் வால் உடன் பிறந்த குழந்தையை ஹிந்து மத கடவுளான அனுமனின் அவதாரம் என மக்கள் நினைத்து உள்ளனர்.
இதேபோன்று 2015-ல் சீனாவில் யங் யங் எனும் குழந்தை பிறகும் பொழுதே 6 இன்ச் நீளமுடைய வாலுடன் பிறந்தது. அக்குழந்தையை பெற்றோர்கள் ” லிட்டில் மங்கி “ என அழைத்தனர். யங் யங் 11 மாதக் குழந்தையாக இருக்கும் பொழுது அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உடலில் இருந்த வால் நீக்கப்பட்டது.
முடிவு :
அரிதாக குழந்தைகள் பிறகும் பொழுது வாலுடன் பிறக்கின்றன. எனினும், அதற்கு மருத்துவ விளக்கங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. மேலும், அந்த வால் பகுதியானது எந்தவித சிரமமும் இன்றி அறுவைச் சிகிச்சை செய்து நீக்கி விடலாம்.
ஆனால், கேரளாவில் வாலுடன் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், இயற்கை ஏதோ சொல்ல நினைக்கிறது என பரவிய செய்தியானது தவறானது என கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டு உள்ளது.