பச்சிளம் குழந்தையை விற்ற கன்னியாஸ்திரி கைது!

பரவிய செய்தி
தொண்டு நிறுவனத்தில் இருந்த பச்சிளம் குழந்தைகளை விற்ற கன்னியாஸ்திரிகள் கைது. பல குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பாக விற்றுள்ளதாக தகவல்.
மதிப்பீடு
சுருக்கம்
ராஞ்சியில் உள்ள ஆதரவற்றோருக்கான காப்பகத்தில் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்றதாகக் கூறி ஒரு கன்னியாஸ்திரி மற்றும் காப்பக பணியாளர் ஒருவர் கைதாகி உள்ளனர்.
விளக்கம்
அன்னை தெரசா ஏற்படுத்திய “ மிசினரிஸ் ஆப் சாரிட்டி “ என்ற அமைப்பின் கீழ் இயங்கும் ஆதரவற்றோருக்கான காப்பகம் ஒன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் இயங்கி வருகிறது. நிர்மல் இருதய விடுதி என்ற இந்த காப்பகத்தில் பணிபுரியும் கன்னியாஸ்திரி மீது அதிர்ச்சி அளிக்கும் புகார் ஒன்று எழுந்துள்ளது.
காப்பகத்தில் பிறந்த 2 வார ஆண் குழந்தையை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு பணத்திற்காக விற்றதாக புகார் எழுந்ததை அடுத்து காப்பகத்தின் கன்னியாஸ்திரி மற்றும் ஊழியர் என 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
” ராஞ்சியில் உள்ள குழந்தைகள் நலக் குழுவின் தலைவரான ரூபா வர்மாவிடம் குழந்தையை பெற்றுக் கொண்ட தம்பதிகள் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், நிர்மல் இருதய காப்பகத்தில் உள்ள ஊழியர் ஒருவரிடம் ரூ.1.20 லட்சம் செலுத்தி ஆண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும், புகாரில் குழந்தையை திருப்பி பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பி அளித்ததாக தெரிவித்துள்ளனர் “.
இதை தொடர்ந்து காப்பகத்தில் நடப்பது பற்றி விசாரணை மேற்கொண்ட ரூபா வர்மா குழுவிற்கு, “ காப்பகத்தில் இருந்த ஆதரவற்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தையை ரூ.1.20 லட்சத்திற்கு உத்தரப்பிரதேசம் தம்பதிகளுக்கு விற்றது என்பது உறுதியானது, இதையடுத்து குழந்தையை விற்ற சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது “.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் அக்காப்பகத்தில் பணியாற்றும் கொன்சாலியாஎன்ற கன்னியாஸ்திரி மற்றும் பெண் ஊழியர் அனீமா ஹிந்த்வார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை குறித்து பேசிய போலீசார், “ பெற்றக் குழந்தை தனக்கு வேண்டாம் என்று தாய் கூறியதால் தம்பதினருக்கு குழந்தையை சட்டத்திற்கு புறம்பாக விற்றுள்ளனர். மே 15 -ம் தேதி குழந்தையை பதிவு ஏதும் செய்யாமல் தத்தெடுத்து கொண்டு சென்றுள்ளனர்” என்று கூறியுள்ளனர்.
மேலும், கோத்வாலி மாவட்ட இன்ஸ்பெக்டர் கூறுகையில், “ இந்த குழந்தையுடன் சேர்த்து மொத்தம் நான்கு குழந்தைகளை விற்றது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், உள்ளூர் மக்களுக்கும் தொடர்பு உள்ளது “ என்று தெரிவித்துள்ளார்.
தனி நபர், விவாகரத்து ஆனவர் மற்றும் திருமணம் ஆகாதவர் ஆகியோருக்கு குழந்தைகளை தத்துக் கொடுக்க கூடாது என்ற அரசின் விதிமுறையால் 2015-ல் இருந்து மிசினரிஸ் ஆப் சாரிட்டி குழந்தைகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்து வருகிறது. ஆனால், காப்பகத்தின் கன்னியாஸ்திரி ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக குழந்தையை தத்துக் கொடுத்ததை பதிவு ஏதும் செய்யாமல் பணத்திற்காக விற்றது அதிர்ச்சியை அளித்துள்ளது.
குழந்தைகளை விற்றதற்காக கைதாகிய கன்னியாஸ்திரி மற்றும் பெண் ஊழியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.