வாழை இலை மூலம் நிபா வைரஸ் தாக்கி ஒரு குடும்பமே பலியா ?

பரவிய செய்தி
எச்சரிக்கை பதிவு : வாழை இலையை நன்கு கழுவாமல் உணவருந்திய ஒட்டு மொத்த குடும்பமே உயிரிழந்த பரிதாப சம்பவம்.. வாழையிலையின் அடியில் வௌவால்களின் மூலம் பரவிய வைரஸ் தாக்குதலே இந்த சம்பவத்திற்கு காரணம்.
மதிப்பீடு
சுருக்கம்
வாழை இலையில் உணவு உண்டதில் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தனர் என வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவுவது போன்று எந்த சம்பவமும் எங்கும் நிகழவில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
விளக்கம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பழந்திண்ணி வௌவால்களின் மூலம் பரவும் நிபா வைரஸ் தாக்கிய வாழை இலையில் உணவு உண்டதால் பரிதாபமாக உயரிழந்தனர் என ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் போன்ற சமூக வலைத்தளத்தில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பரவி வைரலாகியவை.
வாழை இலையில் உணவு உண்டதாக பரவும் புகைப்படத்தில் இறந்து கிடக்கும் நபர்கள் நிபா வைரஸ் தாக்கி இறக்கவில்லை. அவர்களின் மரணத்திற்கு காரணம் என்ன ? வாழை இலையில் நிபா வைரஸ் பரவுகிறதா என்பதையும் விரிவாக காண்போம்.
6 பேரின் மரணம் :
தெலுங்கானா மாநிலத்தில் சூர்யாபேட் அருகே உள்ள மாமில்லகட்டா என்கிற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 6 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பிஎஸ்என்எல் ஊழியர் கஸ்தூரி ஜனார்தன் என்பவர் குடும்பம் அதிகளவில் கடன் சுமை காரணமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தெலுங்கானாவில் விஷம் அருந்தி 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது 2017 செப்டம்பர் மாதம். அது பற்றி செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவர்களின் இறந்த உடல்கள் வரிசையாக உள்ள புகைப்படத்தையே நிபா வைரஸ் ஆல் இறந்ததாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.
வாழை இலையில் நிபா :
கேரளாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். வாழை இலையில் மடித்து அளிக்கப்பட்ட உணவு உண்டால் அதனால் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.
“ ஜூன் 2018-ல் சோசியல் மீடியாவில் பரவுவது பற்றி அம்மாநிலத்தில் நடந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் அப்படியொரு இறப்பு சம்பவம் ஏதும் நிகழவில்லை எனவும், இவ்வாறான தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் ” என சுகாதார இயக்குனர் காலித் இப்ராஹிம் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
வாழை இலையில் உணவு உண்டதால் நிபா வைரஸ் பரவி இறப்பு சம்பவம் நடந்ததாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. அதேபோன்று, தெலுங்கானாவில் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தை நிபா வைரஸால் இறந்தனர் என வீண் வதந்தியை பரப்பியுள்ளனர்.