This article is from Sep 18, 2019

தாய்லாந்தில் பிளாஸ்டிக்கு பதிலாக வாழை இலை பேக்கிங் !

பரவிய செய்தி

தாய்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலையை பேக்கிங் செய்ய பயன்படுத்துகிறார்கள். ஏன் இதை நாமும் பின்பற்றலாமே. விவசாயமும் வாழும், விவசாயியும் வாழ்வார்கள்.

மதிப்பீடு

விளக்கம்

மக்களின் அனைத்து தேவைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு முதன்மையாகி விட்டது. குறிப்பாக, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவு சார்ந்த விற்பனையிலும் ஒற்றை பயன்பாடு நெகிழி பைகளை பெரும்பாலானோர் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் காய்கறிகளை பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலைகளில் பேக்கிங் செய்து வைத்து இருக்கும் புகைப்படங்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பகிரப்பட்ட தகவலை குறித்து விரிவாக தேடினோம்.

அதில், பிரபல ஆங்கில பத்திரிகையான ” Forbes ” -ல் ” Thailand Supermarket Ditches Plastic Packaging For Banana Leaves ” என்ற தலைப்பில் வாழை இலை பேக்கிங் குறித்த கட்டுரையை 2019 மார்ச் 25-ம் தேதி வெளியிட்டு உள்ளனர். அதில்,

” தாய்லாந்து நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் பிளாஸ்டிக் பேக்கிங்கை குறைக்க மாற்று வழியாக வாழை இலைகளை பயன்படுத்தும் புத்திசாலித்தனமான வழியை கொண்டு வந்துள்ளனர். தாய்லாந்தில் உள்ள சியாங்மை பகுதியில் உள்ள ரிம்பிங் சூப்பர் மார்க்கெட்டில் வாழை இலை பேக்கிங்கை கொண்டு வந்துள்ளனர். சியாங்மையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வாழை இலையில் பேக்கிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டது. அந்த பதிவுகள் விரைவாக அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது ” என வெளியாகி இருக்கிறது.

ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக வாழை இலைகளின் பயன்பாடு உண்மையில் சிறந்த முடிவே. இதன் மூலம் உணவு பொருட்கள் இயற்கையோடு ஒன்றியதாக காட்சியளிக்கிறது. மேலும், ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிகளின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

2019 ஆகஸ்ட் மாதம் தாய்லாந்து நாட்டில் டுகோங் என்ற கடல்வாழ் உயிரினம் ஆனது வயிற்றில் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தது. அந்நேரத்தில், தாய்லாந்து நாட்டின் பிரதமர் Prayut Chan-o-cha கடல் விலங்குகளை கடலில் இருக்கும் குப்பைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கூறி இருந்தார்.

எனினும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதிக்கவில்லை. 2022-ம் ஆண்டிற்குள் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பைகள் உள்பட சில பிளாஸ்டிக்களின் பயன்பாட்டிற்கு அரசாங்கம் தடை விதிக்கும் எனக் கூறியதாக பாங்காக் போஸ்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஐ.நாவின் சுற்றுச்சூழல் பிரிவின் மதிப்பீட்டின்படி, 2050-ம் ஆண்டில் நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதி என அனைத்து இடங்களிலும் 12 பில்லியன் டன்கள் அளவிலான பிளாஸ்டிக் நிரப்பி காணப்படும் என கூறி இருந்தனர். அத்தகைய குப்பைகளில் சிகரெட் பட்ஸ், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிகள், உணவு ரேப்பர்கள், மளிகை பிளாஸ்டிக் பைகள் முதலியவை முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டு உள்ளனர்.

பிளாஸ்டிக் பேக்கிங் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வாழை இலைகளை பயன்படுத்துவது சிறிய முயற்சியாகவும், அவற்றின் பயன் அனைவருக்கும் நம்மை அளிக்கக்கூடியதே. இயற்கையோடு ஒன்றி வாழ்தலை ஊக்குவிக்க வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader