பெங்களூரில் பிராய்லர் கோழிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

பரவிய செய்தி
எச்சரிக்கை : இன்று பெங்களூரில் கொரோனா வைரசால் கோழி பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியை தயவு செய்து அனைவருக்கும் பகிரவும் மற்றும் கோழியை உண்பதை தவிர்க்கவும்.
மதிப்பீடு
விளக்கம்
சீனாவில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்து வரும் கொரோனா வைரஸ் (2019nCoV) ஆல் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் உலாவத் தொடங்கியது. வைரஸ் பாதிப்பை விட வதந்திகளால் மக்களிடையே எழுந்த அச்சம் அதிகம் எனலாம்.
தற்பொழுது பெங்களூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிராய்லர் கோழியை கண்டறிந்து உள்ளதாக வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பால் கோழியை உண்ண வேண்டாம் என்ற அறிவுரையும் உடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்படி வைரல் செய்யப்படும் ஃபார்வர்டு செய்திக்கு பின்னால் உண்மை இல்லை. தவறான தகவலையே பரப்புகின்றனர்.
” அறிவியல் சார்ந்து மற்றும் மருத்துவ பார்வையில், இந்தியாவில் அல்லது பிற உலக நாடுகளில் கோழியில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை. இது போன்ற தகவல்களை ஷேர் அல்லது ஃபார்வர்டு செய்ய வேண்டாம் ” என கால்நடை மருத்துவர்கள் கல்வி நிறுவனத்தின் கோழி வளர்ப்பு தொழில்துறையின் தலைவர் டாக்டர் ஜி.தேவகௌடா தி நியூஸ் மின்ட் தளத்திற்கு தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நிகழும் நேரத்திலேயே சீனாவின் ஹுனான் மாகாணத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் உண்டாகி உள்ளதாக சீன அரசு உறுதிப்படுத்தி உள்ளது. H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பால் தெற்கு மாகாணமான ஹுனானின் சாவ்யாங் பகுதியில் 18,000 கோழிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக சீன அமைச்சகம் தெரிவித்து உள்ளது. எனினும், கொரோனா வைரஸ் மற்றும் H5N1 பறவைக் காய்ச்சல் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை.
நோவல் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. மேலும், பிராய்லர் கோழியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கு பின்னால் அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் இல்லை. குறிப்பாக இந்தியாவில் கோழிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை.
ஏனெனில், இந்தியாவில் கொரோனா வைரஸ் நேரடியாக தோன்றவில்லை. சீனாவில் இருந்து இந்தியா வந்தவர்களிடம் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறிப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் கேரள மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கோழி எனக் வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் பிராய்லர் கோழியின் புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாவே இணையத்தில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கோழியின் புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இல்லை. கையில் கிடைத்த புகைப்படத்தை வைத்து வதந்தியை பரப்புகின்றனர்.
இந்தியாவில் அல்லது பிற நாடுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கோழிகள் என வெவ்வேறு புகைப்படங்கள் வைரல் செய்யப்படுகின்றனர். அவைகள் அனைத்தும் தவறானவை அல்லது பிற வைரசால் பாதிக்கப்பட்ட கோழிகளாக இருப்பவை. ஆகையால், ஒரு செய்தியை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரும் முன்பாக அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொண்டு பகிரவும். தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம்.