பெங்களூரில் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட காய்கறி சூப்பர் மார்க்கெட்டா ?

பரவிய செய்தி
பெங்களூரில் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட காய்கறி சூப்பர் மார்க்கெட் வரவேற்கலாம் !!அருமை
மதிப்பீடு
விளக்கம்
சந்தையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டியில் காய்கறிகள் நிரப்பி வைக்கப்பட்டுள்ள சில புகைப்படங்களை ஒன்றிணைத்து பெங்களூரில் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட காய்கறி சூப்பர் மார்க்கெட் எனும் முகநூல் பதிவுகள் அதிக அளவில் வைரலாகியும், மக்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
உண்மை என்ன ?
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் விவசாயிகள் உருவாக்கி உள்ள சூப்பர் மார்க்கெட் என இப்புகைப்படங்கள் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
வைரலாகும் புகைப்பட தொகுப்பில் காய்கறி சூப்பர் மார்க்கெட்டின் முகப்பில் ” Humus ” எனும் பெயர் இடம்பெற்று உள்ளது. Humus Bangalore எனும் கீவார்த்தைகளைக் கொண்டு தேடுகையில், வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்ற சில புகைப்படங்கள் www.humus.co.in எனும் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை காண முடிந்தது.
பெங்களூரைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப நிறுவனமான Humus உடைய இணையதளத்தில், இந்திய விவசாய விநியோக சங்கிலியில் எதிர்கொள்ளக்கூடிய இடைத்தரகர்களின் பிரச்சனைகளை அகற்றுவதே நிறுவனத்தின் நோக்கம் எனக் கூறியுள்ளனர். Humus நிறுவனம் மஞ்சுநாதா மற்றும் அவரின் மனைவிக்கு சொந்தமானதாகும்.
Humus சந்தையின் புகைப்படங்களை டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்ப்படுத்தி கூறப்படும் கூற்றை மறுத்த அந்நிறுவனத்தின் நிறுவனர் மஞ்சுநாதா, இது பெங்களூரில் விவசாயிகளால் திறக்கப்பட்ட சந்தை அல்ல. 2019-ம் ஆண்டில் நானும் என் மனைவியும் நிறுவியதே ” என பூம்லைவ் இணையதளத்திற்கு தெரிவித்து உள்ளார்.
முடிவு :
நம் தேடலில், பெங்களூரில் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட காய்கறி சூப்பர் மார்க்கெட் என வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் விவசாயிகளால் திறக்கப்பட்டது அல்ல, Humus எனும் நிறுவனத்துடையது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.