பெங்களூரில் இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்கக் கூடாது என முஸ்லீம்கள் பேசியதாகப் பரவும் ராஜஸ்தானின் பழைய வீடியோ !

பரவிய செய்தி
பெங்களூரு முஸ்லீம்கள் கூட்டத்தில், இந்துக்களிடம் எதுவும் வாங்க வேண்டாம். எங்களுக்கு 5 ஆண்டு அதிகாரம் உள்ளது. இந்து பம்புகளில், பெட்ரோல் வாங்கக்கூடாது, இந்து மெடிக்கல் கடைகளில் மருந்து சாப்பிடக்கூடாது இந்துக்களுக்கு வியாபார லாபம் தரக்கூடாது என்று முடிவு செய்தனர். ஜாகோ சனாதன…
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முஸ்லீம்கள் நடத்திய கூட்டம் ஒன்றில், இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம். இந்துக்களின் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வாங்க வேண்டாம். இந்துக்களின் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்க வேண்டாம். இந்துக்களுக்கு வியாபார லாபம் தரக்கூடாது எனப் பேசியுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வலதுசாரிகளால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோ குறித்து இணையத்தில் தேடியதில், அது ராஜஸ்தானில் நடந்த பழைய நிகழ்வு என்பதை அறிய முடிந்தது. 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி பேஸ்புக் பக்கம் ஒன்றில் பரவக் கூடிய வீடியோவுடன், வேறொரு வீடியோவையும் ஒப்பிட்டுப் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், ‘இந்தியாவில் மதச்சார்பின்மைக்காக இந்துக்கள் செலுத்தும் விலை இதுதான்! இது பற்றிய குறிப்பு எதுவும் தேவை இல்லை. அந்த நபரைப் பற்றி உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவரது தயாரிப்பை வாங்காதீர்கள். இது உங்களுடைய பணம், உங்களுடைய விருப்பம். ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து வாங்க யாரும் உங்களை வற்புறுத்த முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வீடியோவை ‘Hindu Thoughts’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் 2019, ஜூலை 2ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் உள்ள அப்பதிவின் தலைப்பை மொழிப்பெயர்த்துப் படிக்கையில், இந்துக்களைப் புறக்கணிக்கவும், அவர்களின் கடைகளில் எதையும் வாங்க வேண்டாம் என முஸ்லீம்கள் அறிவித்துள்ளனர் என்றுள்ளதை அறிய முடிகிறது.
மேலும் இது குறித்துத் தேடியதில், ராஜஸ்தானில் உள்ள பார்மர் (Barmer) காவல்துறை அவர்களது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் 2023, மார்ச் 14ம் தேதி அளித்திருந்த விளக்கம் ஒன்றினை காண முடிந்தது. அதில், ராஜஸ்தானில் உள்ள பார்மரில் ஜாட்கள், குர்ஜார்களிடம் இருந்து எதையும் வாங்க வேண்டாம் என்று மௌலானா ஒருவர் பேசிய வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அந்த சம்பவம் 2019ம் ஆண்டு பிஜ்ராத் காவல் பகுதிக்கு உட்பட்ட போஜாரியா என்னும் கிராமத்தில் நிகழ்ந்தது. 2019, ஜூன் 28ம் தேதி ககாரியா (Gagaria) கிராமத்தில் உள்ள பெட்ரோல் பேங்கின் முன் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் மூவர் காயமடைந்ததுடன் ஒருவர் இறந்தும் விட்டார்.
1/2 इस घटना के विरोध में मृतक के परिजनों द्वारा उनके घर पर जनाजे के दौरान विरोध प्रदर्शन के दौरान मांगे की गई थी गई थी। उसी दौरान मृतक के परिजन द्वारा इस तरह का भाषण भी दिया गया था। तत्समय नियमानुसार कार्यवाही की गई थी।
— Barmer Police (@Barmer_Police) March 15, 2023
இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இறுதிச் சடங்கின் போது அவர்களது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் இறந்தவரின் உறவினர் ஒருவர் இப்படிப் பேசி உள்ளார். இந்த வீடியோ பரவியபோதே அவ்வாறு பேசியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது” என குறிப்பிட்டுள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், 2019ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோவை, கர்நாடகாவின் பெங்களூரில் நடந்ததாகத் தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர். அவ்வாறு பேசியவர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.