பெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி
பெங்களூரில் நடக்கும் போராட்டங்களை சீர்குலைக்க முஸ்லீம் பெண் வேடத்தில் புர்கா அணிந்து வந்த ஆர்எஸ்எஸ் தீவிரவாதி பொதுமக்களால் பிடிக்கப்பட்ட காட்சி !
மதிப்பீடு
விளக்கம்
பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரத்தை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர் முஸ்லீம் பெண்களை போன்று பர்தா உடை அணிந்து வந்த பொழுது பொதுமக்களால் பிடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக வீடியோ ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rahmathullah Thulasiyappattinam என்ற முகநூல் பக்கத்தில் வெளியான 3.44 நிமிடம் கொண்ட வீடியோவில், பர்தா அணிந்த ஆண் ஒருவரை பொதுமக்கள் பிடித்து யார் என விசாரிப்பதும், பர்தா உடையை கழற்றச் செய்வதும் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ பதிவு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
எனவே, இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்த பொழுது, அது தவறான தகவல் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. மேலும், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இதே வீடியோவை, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அல்லது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் முஸ்லீம் பெண்களின் பர்தா உடையில் அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்ட பொழுது பிடிக்கப்பட்டதாக பிற மொழிகளில் பரப்பிய பதிவுகளை பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
பர்தா உடையில் பிடிபட்ட ஆண் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆராய்ந்த பொழுது 2019 பிப்ரவரி மாதம் கோவாவின் பனாஜி பகுதியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான செய்திகள் பல கிடைத்தன.
2019 பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ஏஎன்ஐ நியூஸ் ஏஜென்சியில் வெளியான தகவலில், ” 35 வயதான நபர் பர்தா உடையை அணிந்து கொண்டு பனாஜி பேருந்து நிலையத்தில் இருந்த பெண்கள் கழிவறைக்கு சென்ற பொழுது பொதுமக்களால் பிடிக்கப்பட்டு கோவா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியான விர்ஜில் பாஸ்கோ பெர்னாண்டஸ் பெண் வேடத்தில் கழிவறைக்கு உள்ளே சென்று விட்டு வரும் பொழுது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். அதன்பின், அவர் அணிந்து இருந்த பர்தா உடையை அடித்து கழட்ட வைத்து உள்ளனர். இதையடுத்து, பெர்னாண்டஸ் மீது IPC பிரிவு 419 கீழ் கோவா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் ” எனக் கூறப்பட்டுள்ளது. வீடியோவில் இடம்பெற்ற காட்சியே செய்தியில் புகைப்படமாக வைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், 2019 பிப்ரவரி 20-ம் தேதி Goa prism என்ற இணையதளத்தில் வெளியான செய்தியில், தற்பொழுது வைரலாகும் வீடியோ பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் நிகழ்ந்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
ஆங்கில செய்திகள் மட்டுமின்றி தமிழ் செய்திகளிலும் கூட இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. 2019-ல் கோவாவில் பர்தா உடையில் பெண்கள் கழிவறைக்குள் சென்ற நபர் குறித்த வீடியோ செய்தியும், இணையதள செய்தியும் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : CAB-க்கு எதிராக பெண் வேடத்தில் வந்த போலியான போராட்டகாரரா ?
எனினும், எதற்காக அப்படி செய்தார் என்பது குறித்து விவரங்கள் கிடைக்கவில்லை. மேலும், கைது செய்யப்பட்ட நபர் பிணையில் வெளியே வந்துள்ளார். அவர் அரசு ஊழியர் என்றும், அவரை மனநல பாதிப்பிற்கான சிகிச்சையில் ஈடுபடுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, 2019-ம் ஆண்டில் கோவாவில் பர்தா உடை அணிந்த ஆண் பேருந்து நிலையத்தில் இருந்த பெண்கள் கழிவறைக்குள் சென்றதால் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட பொழுது எடுத்த வீடியோ காட்சியை 2020-ல் பெங்களூரில் போராட்டத்தை சீர்குலைக்க பர்தா அணிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் நபர் என தவறான செய்தியை பரப்பி வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.