முஸ்லீம்களுக்கு இப்தார் விருந்து வைத்த இஸ்கான் பக்தர் பங்களாதேசில் கொல்லப்பட்டவரா ?

பரவிய செய்தி
பங்களாதேஷ் இஸ்கான் கோவில் மீது சமீபத்திய தாக்குதலில் இறந்த சுவாமி நிதிதாஸ் பிரபு இவர்தான். கடந்த ரமலான் 30 நாட்களும் ரோசாவிற்கு பிறகு இப்தார் ஏற்பாடு செய்து முஸ்லீம்களுக்கு உணவளித்தார்.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த வாரம் பங்களாதேஷ் நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள குமிலாவில் நடந்த துர்கா பூஜையின் போது இந்துக்கடவுளின் பாதத்தில் குரானை வைத்துள்ளதாக காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து, வன்முறை வெடித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதும், இந்து வழிபாட்டு தலங்கள் மீதும் நடத்தப்பட்ட பல தாக்குதல் சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவாகின.
அக்டோபர் 18-ம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, பங்களாதேசில் நடத்தப்பட்ட மதவாத தாக்குதலில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அக்டோபர் 14-ம் தேதி நோகாலி மாவட்டத்தில் உள்ள இஸ்கான் அமைப்பின் கோவில் சூறையாடப்பட்டது மற்றும் பக்தர் ஒருவர் கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பங்களாதேஷ் நாட்டில் துர்கா பூஜையின் போது இந்துக்கள் மற்றும் இஸ்கான் கோவில் மீது நடத்தப்பட்ட வகுப்புவாத தாக்குதலில் உயிரிழந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த நிதிதாஸ் பிரபு இவர்தான் என முஸ்லீம்களுக்கு உணவுப்பரிமாறும் பக்தர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
பங்களாதேஷ் தாக்குதல் குறித்து இஸ்கான் அமைப்பின் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், ” இரண்டு பக்தர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒருவரின் பெயர் பிரந்த சந்திர தாஸ் மற்றும் மற்றொருவரின் பெயர் ஜதன் சந்திர சஹா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த பிரந்த சந்திர தாஸ் உடைய புகைப்படம் செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது. அக்டோபர் 16-ம் தேதி ஏஎன்ஐ செய்தியில் அவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016-ம் ஆண்டு ucanews இணையதளத்தில் மேற்கு வங்கம் மாநிலம் மாயாப்பூர் பகுதியில் இஸ்கான் அமைப்பின் சார்பில் முஸ்லீம்களுக்காக நடத்தப்பட்ட இப்தார் விருந்தில் உணவு பரிமாறும் போது எடுக்கப்பட்டதாக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், 2016-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி Prokerala எனும் இணையதளத்தில், மாயாப்பூரில் நடைபெற்ற இப்தார் விருந்தின் புகைப்பட தொகுப்பே வெளியாகி இருக்கிறது.
2016-ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து கடந்த ரமலான் போது 30 நாட்களும் முஸ்லீம்களுக்கு இப்தார் விருந்து கொடுத்தவர் கொல்லப்பட்டதாக தவறான புகைப்படத்தை இந்தியாவில் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், பங்களாதேஷ் நாட்டில் இஸ்கான் கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக பரவும் புகைப்படம் மற்றும் பெயர் தவறானது. இறந்த பக்தரின் பெயர் நிதிதாஸ் பிரபு அல்ல, இறந்தவர்களின் பெயர்கள் பிரந்த சந்திர தாஸ் மற்றும் ஜதன் சந்திர சஹா என இஸ்கான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. வைரல் செய்யப்படும் புகைப்படம் 2016-ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.