இந்தியாவில் நிகழ்ந்ததாக தவறாகப் பரப்பப்படும் பங்களாதேஷ் நாட்டில் முஸ்லீம்கள் சிலரைத் தாக்கும் வீடியோ !

பரவிய செய்தி

இவங்க தான் இந்தியாவில் மைனாரிட்டியா …? இ.தே.வ.உ.கூ எவனாவது மனசாட்சி உள்ளவன் இருந்தா வந்து பேசுங்க..

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

முஸ்லீம்கள் சிலர் சாலையின் நடுவே ஒருவரைக் கடுமையாகத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அப்பதிவுகளில் ‘இவங்க தான் இந்தியாவில் மைனாரிட்டியா?’ இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணியில் (இ.தே.வ.உ.கூ) மனசாட்சி உள்ளவர்கள் பேசுங்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.

Archive link 

உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் அச்சம்பவம் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேசத்தில் நடந்தது என்பதையும், அத்தாக்குதலில் அடிபட்டு இறந்தவரும் முஸ்லீம் என்பதையும் அறிய முடிகிறது.

தற்போது பரவக் கூடிய இதே வீடியோவினை 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். அப்பதிவுகளில் ‘இது ஆணவக்கொலை இல்லையா??? இறப்பவன் இந்து, கொலை செய்பவன் முஸ்லீம். ஒரு வேளை அதனால்தான் அறிவுஜீவிகளின் பார்வைக்கு இது தெரியவில்லை’ என்றுள்ளது.

Facebook

2019ல் பரவிய அந்த வீடியோ பற்றி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அப்போதே கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ‘தற்போது பரவக் கூடிய வீடியோ 2017, ஏப்ரல் 2ம் தேதி ‘ராணா முகமது ரசல்’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் அந்த வீடியோவின் நிலைத் தகவலில் வங்கதேச அரசியல்வாதி மோனிர் ஹொசைன் சர்க்கார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அபு சயீத் மற்றும் முகமது அலி தாக்கப்பட்டனர். அத்தாக்குதலில் சயீத் கொல்லப்பட்டார் மற்றும் முகமது அலி பலத்த காயமடைந்தார் என்று இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த யூடியூப் வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு இதுகுறித்துத் தேடியதில் Union Parishad தலைவர் மோனிர் ஹொசைன் சர்க்கார் 2016, நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட செய்தி வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் Dhaka Tribune, New Age தளங்களில் வெளியாகியுள்ளதைக் காண முடிந்தது.  

இந்த சம்பவம் தொடர்பாக, அபு சயீத் மற்றும் முகமது அலி பெயர்களைக் கொண்டு தேடியதில் ‘kalerkantho’ என்னும் பெங்கால் மொழியில் இயங்கும் செய்தி ஊடகத்தில் 2017, ஏப்ரல் மாதம் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் படித்ததில் இக்கொலைச் சம்பவம் கொமிலா டவுட்கண்டியின் (Comilla, Daudkandi) Gomti பாலம் அருகே உள்ள கௌரிபூர் பஜாரில் நடந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவற்றில் இருந்து இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்பதும், கொலை செய்யப்பட்டவரும் முஸ்லீம் என்பதும் அறிந்து கொள்ள முடிகிறது. இதனை இந்தியா என்றும் கொலை செய்யப்பட்டவர் இந்து என்றும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : இந்து எனக் கூறி லவ் ஜிகாத் செய்ய முயன்ற முஸ்லீம் இளைஞர்களுக்கு போலீஸ் தடியடி எனப் பரவும் பொய் !

இதேபோல் இஸ்லாமியர்கள் தொடர்பாக பரப்பப்பட்ட பொய் செய்திகள் குறித்து யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : டெல்லி அரசுப் பள்ளியில் பாரத மாதா கிரீடத்தை கழட்டி நாமஸ் செய்ய கற்பிப்பதாகப் பரப்பப்படும் வதந்தி !

முடிவு : 

நம் தேடலில், இந்தியாவில் சாலையின் நடுவே இஸ்லாமியர்கள் ஒருவரை அடிப்பதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது. அது 2017ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்தது. அதனை இந்தியா எனத் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader