2019-20 நிதியாண்டின் முதல் பாதியில் வங்கி மோசடி 1.13 லட்சம் கோடியைத் தாண்டியது : ஆர்.பி.ஐ

பரவிய செய்தி

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே வங்கி மோசடி 1 லட்சம் கோடியை தாண்டி விட்டதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவில் வங்கி மோசடி வழக்குகளும், அதில் தொடர்புடைய தொகையும் கோடிக்கணக்கில் உயர்ந்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2019 நிதியாண்டில் மட்டும் பதிவான 6,801 வங்கி மோசடி வழக்குகள் 71,543 கோடி அளவிலான தொகையை கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

Advertisement

ஆனால், ஆர்.பி.ஐ வெளியிட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையின்படி (FSR), தற்போதைய நிதியாண்டின் முதல் பாதிலேயே 1 லட்சம் கோடிக்கு அதிகமான தொகையில் வங்கி மோசடிகள் நடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2019-20 நிதியாண்டின் முதல் பாதியில் பதிவான 4,412 மோசடி வழக்குகளில் 1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வங்கிகளின் தகவலின் படி, 50 கோடிக்கும் மேற்பட்ட தொகையை கொண்ட 398 வழக்குகளில் மட்டும் 1.05 லட்சம் கோடி அளவிலான மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அதில் 1000 கோடி தொகையை கொண்ட 21 கடன் வழக்குகளில் மொத்த மதிப்பு 44, 951 கோடியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.பி.எப்.சி மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் மோசடி அறிக்கையை அதன் மத்திய மோசடி பதிவு தரவுத்தளத்தில் ஒருங்கிணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 90.6 சதவீத வங்கி மோசடிகளும், நடப்பு நிதியாண்டில் 97.3 சதவீத மோசடிகளும் கடனால் மட்டுமே ஏற்பட்டவை.

வங்கிகள் கடனை வழங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கி வகுத்த, வங்கிகள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதது மற்றும் கடன் திரும்பப் பெறும் முறையை உறுதியாக கடைபிடிக்காதவையே வங்கி மோசடிகள் ஏற்படக் காரணமாகி உள்ளன. இதில், கூட்டுறவு வங்கிகள் , வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் படிக்க : கடந்த நான்கு ஆண்டில் வங்கி கடன் மோசடி ரூ.77,500 கோடி – RTI தகவல்.

Advertisement

இந்திய வங்கிகளில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்யும் ஏராளமான வழக்குகள் குறித்து சமீப காலமாக மக்கள் அறிந்து வருகின்றனர். சாமானிய மக்களிடம் காட்டும் கண்டிப்பை கோடிக்கணக்கில் கடன் பெறுபவர்களிடம் வங்கிகள் காட்டுவதில்லை என்ற குரல்கள் மக்களிடம் இருந்து எழுகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button