Fact Check

ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறைக்கு தடை விதித்த பல வெளிநாடுகள்!

பரவிய செய்தி

ஹைட்ரோ கார்பன், ஷேல் வாயு எடுக்கும் திட்டத்தை உலகின் பல நாடுகளில் தடை செய்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

அமெரிக்காவில் இயற்கை வாயு எடுக்கும் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையால் நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறி தடை செய்துள்ளனர். மேலும், பல நாடுகளில் எழுந்த மக்கள் போராட்டத்தால் இயற்கை வாயு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை வாயு எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழக மக்களை பலி கொடுக்க மத்திய அரசு முனைவதாகப் போராட்டங்கள் எழுந்தன.

Advertisement

ஆனால், நாட்டின் வளர்ச்சி என்றால் சில விசயத்தை தியாகம் செய்வதில் தவறில்லை என்ற கருத்தை பாஜகவின் எம்.பி இல.கணேசன் கூறியது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்க்காதீர்கள், அவை நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் என்று கூறினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இவர்கள் வளர்ச்சி எனக் கூறும் இயற்கை வாயு எடுக்கும் திட்டத்திற்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் முழுமையாகவும், சில நாடுகளில் தற்காலிகமாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அயர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் தொடர்ந்து வலம் வருகிறது.

ஆஸ்திரேலியா :

செப்டம்பர் 2017-ல் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாகாணத்தில் இயற்கை வாயு எடுக்கப் பயன்படுத்தப்படும் டிரில்லிங் நுட்பம்,  ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையில் ஆபத்து இருப்பதால் தடை விதிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாகவே, ஷேல் வாயு போன்றவற்றை டிரில்லிங் செய்து எடுப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறைந்து பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள், சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தினர்.

எனவே, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், நார்தேர்ன் டெர்ரிடோரி, டாஸ்மானியா உள்ளிட்ட மாகாணங்களை தொடர்ந்து வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிலும் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடா :

கனடாவில் உள்ள Guysborough மாநகராட்சியில் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையால் ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் அல்லது கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் 2014 ஆம் ஆண்டில் தொடங்கத் திட்டமிட்டனர். Guysborough அமைந்துள்ள நோவா ஸ்கொடியா மாகாணத்தில் 20 முதல் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான இயற்கை வாயு வளம் இருப்பதாக energy department analysis கூறியிருந்தது.

ஆனால், இந்த ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையால் நிலத்தடி நீருடன் இரசாயணம் கலந்து மாசுப்படும் என எதிர்ப்புகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டிலேயே இதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், தற்போது தடை பற்றி மறுபரிசீலனை செய்வதாக Guysborough மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு ஆலோசனை கூட்டம் நடத்தியதில், அதில் கலந்து கொண்ட நகரத்தின் கவுன்சிலர்கள் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறை நோவா ஸ்கொடியா மற்றும் அன்டிகோனிஷ் அருகில் அமைப்பதற்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளனர். மேலும், தடையை நீக்கும் Guysborough மாநகராட்சியின் முயற்சியை நிராகரிப்பதாக அன்டிகோனிஷ் நகரம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா :

ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் வாயு போன்ற திட்டங்களுக்கு முன்னோடியாக அமெரிக்காவை கைக்காட்டும் இந்தியா, அந்த வளர்ச்சி அடைந்த நாடே ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறைக்கு தடை விதித்துள்ளது பற்றி அறிந்திருக்காதா என்ன? ஓக்லஹாமா, நியூயார்க் போன்ற மாகாணங்களில் இயங்கி வந்த எண்ணெய் கிணறுகளை மூடியுள்ளது அந்நாட்டு அரசு. அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்து வந்த சிறிய நிலநடுக்கங்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 20 ஆக இருந்த நிலையில், 2010-2013 ஆண்டுகளில் 100-ஐ தாண்டியது.

இதற்கான காரணங்களை அறிய அமைக்கப்பட்ட ஆய்வு குழுக்களின் அறிக்கையில், இயற்கை வாயு எடுக்கப் போடப்படும் டிரில்லிங் மற்றும் ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையால்தான் நிலநடுக்கம் உருவாகியதாகக் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்வு, மண், நீர் மற்றும் காற்றின் முக்கியத்துவம் அறிந்து நியூயார்க், வேர்மொன்ட் மற்றும் சில சிறிய நகரங்களில் உள்ள இயற்கை வாயு எடுக்கும் பிராக்கிங்கை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளனர்.

நெதர்லாந்து :

நெதர்லாந்து நாட்டில் ஷேல் வாயு எடுக்கும் பிராக்கிங் பணியை தொடங்குவது குறித்து 18 மாதங்களில் தகுந்த ஆராய்ச்சிகளுக்கு பிறகே முடிவெடுக்கப்படும் என்று 2013-ல் டச்சு நாடாளுமன்றத்தில் பொருளாதார விவகாரம் அமைச்சர் ஹென்க் கேம்ப் கூறியிருந்தார்.

இந்த தற்காலிகத் தடை அறிவிக்கப்பட்ட பிறகு டச்சு வங்கியான ராபோபேங்க் ஷேல் வாயு அல்லது பிற எண்ணெய் எடுப்பது தொடர்பான தொழில்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தனர். 2020-ல் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை 14% அளவிற்கு இலக்கு வைத்துள்ளது அந்நாட்டு அரசு.

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பூமிக்கடியில் இருந்து இயற்கை வாயு எடுக்கும் திட்டத்தை தடை செய்வதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர். பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இயற்கை வாயு எடுக்கும் அபாயகரமான ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் முறையை தடை செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

பல நாடுகளில் இயற்கை வாயு என்கிற பெயரில் மண்ணின் வளத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் திட்டத்திற்கு மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் வாயு என தனித்தனி பெயர்களில் எதுவாக இருந்தாலும் அவை இயற்கை வாயுதான் என்பதை மக்கள் தெளிவாக அறிந்துள்ளனர். இவற்றை எடுக்க இந்திய அரசு 100%  தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டுள்ளது.

மீத்தேனோ,  ஹைட்ரோ கார்பனோ எதுவாக இருந்தாலும் அவர்கள் பயன்படுத்தப்போவது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தி, ஆபத்து என தடை செய்த ஹைட்ராலிக் ஃப்ராக்ச்சரிங் போன்ற முறையைதான். வளர்ந்த நாடுகளே அச்சம் கொள்ளும் திட்டங்களை தமிழகத்தில் விவசாய பூமியில் திணிப்பது, நாட்டின் வளர்ச்சி என்கிற பெயரில் சொந்த நாட்டு மக்களையே அழிக்க நினைக்கும் செயலாகும். நெற்களஞ்சியம் என பெருமையுடைய தஞ்சை, டெல்டா மாவட்டங்களை தற்போது பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் எதிர்கால விவசாயத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது மத்திய அரசு!

இதையே முறையை நாம் நாட்டிலும் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். எம்முறையேன்றோ, இதற்கு முன் இந்த முறையில் செய்தவை அதன் நிலை என்ன என்ற வெள்ளை அறிக்கை தராமல் , இதை செய்வது எப்படி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியும். கெயில் விபத்து ஆந்திராவில் நடந்து, அதில் உயிர்கள் பல இறந்ததும் நினைவில்லாமல் இருக்குமா? பாதுகாப்பை உறுதி செய்ய யார் பொறுப்பேற்பார்கள். வளர்ச்சி வேண்டாம் என்றோ, திட்டம் வேண்டாம் என்றோ சொல்லவில்லை, மாற்று சக்திகளான சூரிய மின்சாரம் போன்றவற்றை ஊக்குவிப்பதே மண்ணுக்கு கேடின்றி வளர்சிக்கும், மக்கள் தேவைக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button