This article is from Sep 14, 2019

பேனர் விழத்தான் செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா ?

பரவிய செய்தி

ஆயிரம் பேனர் வைத்தால் ஒரு பேனர் விழத்தான் செய்யும். வாகன ஓட்டிகள் தான் கவனமாக செல்ல வேண்டும்.

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் விதிகளை மீறி சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் சாய்ந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பேனர்கள் குறித்து சமூக வலைதளங்களில் கண்டனப் பதிவுகள் அதிகளவில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ” ஆயிரம் பேனர் வைத்தால் ஒரு பேனர் விழத்தான் செய்யும். வாகன ஓட்டிகள் தான் கவனமாக செல்ல வேண்டும் ” என மக்களுக்கு அறிவுரை கூறியதாக நியூஸ் 7 தமிழ் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி எதிர்ப்பை பெற்று வருகிறது. அதனை வைத்து மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

பேனர்கள் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் சர்ச்சைக்குரிய கருத்தினை கூறினாரா என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம். அதில், பரவிய நியூஸ் கார்டில் செப்டம்பர் 13-ம் தேதி 2.00 மணியைக் குறிக்கிறது. நேரடியாக, முகநூலில் உள்ள நியூஸ் 7 செய்தியின் பக்கத்திற்கு சென்று பார்க்கையில் 13-ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக அப்படியான செய்தியே வெளியாகவில்லை.

மேலும், இது தொடர்பாக தேடிய பொழுது ” toptamilnews.com ” என்ற இணையதளத்தில் மட்டும் அமைச்சர் ஜெயக்குமார் பேனர் குறித்த சர்ச்சை கருத்தை கூறியதாக வெளியிட்டு உள்ளனர். இதைத் தவிர்த்து முதன்மை ஊடங்களில் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை.

செப்டம்பர் 13-ம் தேதி சுபஸ்ரீ மரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தந்தி டிவி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்து உள்ளார். அதில், இனி தொண்டர்கள் மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேனர்களை வைக்கக் கூடாது என அதிமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையையே குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மேலும் படிக்க : இளம்பெண் சுபஸ்ரீ உயிரை பறித்த பேனர் கலாச்சாரம்| கேள்வி கேட்கும் மக்கள் !

முடிவு :

நம்முடைய தேடலில், ஆயிரம் பேனர் வைத்தால் ஒரு பேனர் விழத்தான் செய்யும். வாகன ஓட்டிகள் தான் கவனமாக செல்ல வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் செய்திக்கு ஆதாரமில்லை. மேலும், பரவும் நியூஸ் 7 சேனலின் நியூஸ் கார்டு போலியானவை.

ஆகையால், பரபரப்பான சூழ்நிலையில் அரசியல் சார்ந்து பரப்பப்படும் போலியான செய்திகளை உண்மை என பகிராமல், அதன் உண்மைத்தன்மையை அறிய முயற்சி செய்யுங்கள். போலியான செய்திகளை பகிர்பவர்களிடம் நம்முடைய கட்டுரையை பகிர்ந்து உண்மை செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Please complete the required fields.




Back to top button
loader