அண்ணாமலையால் கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வி என பசவராஜ் பொம்மை கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
“பின்னடைவை எதிர்பார்க்கவில்லை” இந்தப் பின்னடைவை எதிர்பார்க்கவில்லை. அரசியல் அனுபவமில்லாத அண்ணாமலை போன்றவர்களைப் பொறுப்பாளராக்கியது எங்களது தவறுதான். – பசவராஜ் பொம்மை.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணை பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். நடந்து முடிந்த அம்மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
அரசியல் அனுபவமில்லாத அண்ணமலை போன்றவர்களை பொறுப்பாக்கியது தவறு.😂
– பசவராஜ் பொம்மை
— Dr.Aravind Raja (@AravindRajaOff) May 14, 2023
இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தங்கள் கட்சியின் பின்னடைவை எதிர்பார்க்கவில்லை, இதற்கு அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாதவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்ததே காரணம் எனக் கூறியதாக நியூஸ் 7 கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இதே கருத்தினை திமுகவினரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அரசியல் அனுபவமில்லாத அண்ணமலை போன்றவர்களை பொறுப்பாக்கியது தவறு.😂
– பசவராஜ் பொம்மை pic.twitter.com/gvwetJI9an
— கே.எஸ்.மணி சின்னங்குடி (@ksmanirithvik) May 14, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய நியூஸ் 7 கார்டில் ‘13 May 23’ என்ற தேதி உள்ளது. எனவே அந்த நியூஸ் கார்டு குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். ”பின்னடைவை எதிர்பார்க்கவில்லை” என்ற தலைப்பில் நியூஸ் கார்டு ஒன்றினை கர்நாடகா மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையன்று (மே, 13ம் தேதி) வெளியிட்டுள்ளனர்.
”பின்னடைவை எதிர்பார்க்கவில்லை”https://t.co/CnV8a4haau | #ElectionCommission | #KarnatakaAssemblyElections2023 | #votecounting | #KarnatakaElection | #Karnataka | #Congress | #BJP | #JDS | #AAP | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/UXVGXzJs4a
— News7 Tamil (@news7tamil) May 13, 2023
அதில், “தேர்தலில் ஏற்பட்ட இந்த பின்னடைவை எதிர்பார்க்கவில்லை; ஏன் இந்த பின்னடைவு ஏற்பட்டது என்பது குறித்துப் பரிசீலிப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலை முழு பலத்துடன் எதிர்கொள்வோம் – பசவராஜ் பொம்மை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரவக்கூடிய நியூஸ் கார்டுக்கும், உண்மையான கார்டுக்கும் எழுத்துரு (Font) வித்தியாசம் இருப்பதை காண முடிகிறது.
மேற்கொண்டு தேடியதில், பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசியது குறித்து ‘நியூஸ் 7′ மற்றும் ‘தினகரன்’ இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பாஜக ஏற்றுக் கொள்கிறது. இத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை எதிர்பார்க்கவில்லை. முடிவுகள் முழுவதுமாக வந்ததும் தோல்வி குறித்து ஆராய்வோம் என்றுள்ளது.
அவர் செய்தியாளர்களைச் சந்தித்த வீடியோவும் நியூஸ் 7 யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் அண்ணாமலை குறித்து எந்த கருத்தையும் பசவராஜ் பொம்மை கூறவில்லை. இவற்றில் இருந்து பரவக் கூடிய தகவல் உண்மை அல்ல என்பதையும். நியூஸ் 7 கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் படிக்க : பாஜக 4ம் இடம் பிடித்த சல்லகெரே தொகுதி கர்நாடகாவில் இல்லையா ? அதற்கு அண்ணாமலை பொறுப்பாளரா ?
கர்நாடக தேர்தல் குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகளின் உண்மைத் தன்மையினை யூடர்ன் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : கர்நாடகாவில் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !
முடிவு :
நம் தேடலில், அரசியல் அனுபவமற்ற அண்ணாமலையைப் பொறுப்பாளராக நியமித்ததினால் பாஜக தோல்வி அடைந்ததாகக் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.