This article is from Apr 15, 2020

வௌவால்களுக்கு கொரோனா வைரசா ?| ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல்.

பரவிய செய்தி

தமிழகம், புதுச்சேரி, கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவால்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய வௌவால்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளதாக தமிழ் முன்னணி ஊடங்களில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் என பொதுவாக அழைத்து வருவதால் மனிதர்களுக்கு பரவி வரும் நோவல் கொரோனா வைரஸ் வௌவால்களுக்கும் பரவி இருப்பதாக தவறாக நினைக்கத் தோன்றும். ஆகையால், செய்தியின் விளக்கம் மற்றும் ஐசிஎம்ஆர் ஆய்வுக் குறித்து விரிவாக காண்போம்.

உலக அளவில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு இருக்கையில், கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வௌவால் இனங்களில் வௌவால் கொரோனா வைரஸ்(bat-CoV) எனும் வித்தியாசமான கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தன்னுடைய ஆய்வின் மூலம் தெரிவித்து உள்ளது.

Indian Journal of medical research-ல் ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரூசெட்டஸ் மற்றும் ஸ்டெரோபஸ் இனங்களின் இருபத்தைந்து வௌவால்களில் Bat-CoV இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த Bat-CoV கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்றுக் கூற எந்த ஆதாரமும் மற்றும் ஆராய்ச்சியும் இல்லை என புனேவின் நேஷனல் வைராலஜி இன்ஸ்டீடியூட்-ஐ சேர்ந்த விஞ்ஞானி மற்றும் ஆய்வின் முதல் எழுத்தாளர் டாக்டர் பிரக்யா டி யாதவ் தெரிவித்து உள்ளார்.

” அதேபோல் இந்த வௌவால் கொரோனா வைரசுக்கும் கோவிட்-19 தொற்றுக்கு காரணமான வைரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை ” என்றும் யாதவ் கூறியுள்ளார். ஸ்டெரோபஸ் வௌவால் இனங்கள் முன்னதாக 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் கேரளாவில் நிபா வைரசுக்கு சாதகமாக காணப்பட்டன என்பது கூடுதல் தகவல்.

ஆய்வுக் குறித்து விரிவாகக் கூறிய டாக்டர் யாதவ், ஏழு மாநிலங்களைச் சேர்ந்த ரூசெட்டஸ் மற்றும் ஸ்டெரோபஸ் ஆகிய இரண்டு வௌவால் இனங்களின் தொண்டை மற்றும் மலக்குடல் பகுதிகளில் இருந்து மாதிரிகள் கொரோனா வைரஸ் சோதனைக்காக எடுக்கப்பட்டன. அப்பொழுது, கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடில் இருந்து சேகரிக்கப்பட்டவை நேர்மறையாகவும், கர்நாடகா, சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவை எதிர்மறையாக வந்தன எனக் கூறியுள்ளார்.

Reverse-transcription polymerase chain reaction (RT-PCR) சோதனைகள் மற்றும் வரிசைப்படுத்துதல் ஆகியவை உறுதிப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன. வௌவால்களில் நிபா வைரஸ் பரவுவதைப் புரிந்து கொள்வதற்கான தொடர்ச்சியான ஆய்வு இது எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் கேரளாவில் உள்ள வௌவால்களில் நிபா வைரஸ் பரவுவதாக கண்டறியப்பட்டது போன்று தற்போது கொரோனா வைரஸ்(Bat-CoV) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வௌவால்களில் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என ஆதாரங்கள் மற்றும் ஆய்வு இல்லை.

செய்திகளில் வெளியான தகவலால் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 தொற்று வௌவால்களுக்கு பரவி இருக்கும் என்று தவறாக நினைக்கத் தோன்றும். செய்தியின் முழு விவரத்தையும் அறிந்து கொள்வதே நல்லது. கொரோனா வைரஸ் குடும்பத்தில் பல வைரஸ்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader