சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்கு பிபிசி ஆவணப்படம் வெளியிடவில்லை என ஜெய்சங்கர் சொன்ன பொய் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படங்ககளுக்கு இந்தியாவில் தடை விதித்தது மோடி தலைமையிலான பாஜக அரசு. தற்போது வரை ஆளும் அரசின் மீது பிபிசி ஆவணப்படங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியின் போது பிபிசி ஆவணப்படம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ” ஏன் திடீரென்று இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகி கவனம் பெறுகின்றன ? 1984-ல் டெல்லியில் பல விசயங்கள் நடந்தன. ஏன் எந்த ஆவணப்படங்களும் வெளியாகவில்லை ” என 1984ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து, 1984-ல் நடத்தப்பட சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஏன் எந்த ஆவணப்படங்கமும் வெளியாகவில்லை என வலதுசாரி ஆதரவு இணையதளமான Opindia கட்டுரை வெளியிட்டு இருந்தது. இதை பாஜக ஆதரவாளர்களும் பகிர்ந்து வருகின்றனர்.
Why no documentary on 1984 anti-Sikh riots? EAM Dr Jaishankar calls BBC documentary on PM Modi a hatchet job https://t.co/IUAeXmVYft
— OpIndia.com (@OpIndia_com) February 21, 2023
உண்மை என்ன ?
1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படம் மட்டுமின்றி பாட்காஸ்ட் முதற்கொண்டு வெளியிட்டு இருக்கிறது.
சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சீக்கிய பிரிவினைவாதிகளை பிடிக்க பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் 1984ம் ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் ஆப்ரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் 83 இராணுவ வீரர்கள், 492 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், தம்தாமி தக்சலின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயும் கொல்லப்பட்டார்.
ப்ளூஸ்டார் நடவடிக்கையின் காரணமாக 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்களால்(இரு சீக்கியர்கள்) படுகொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதியில் வசித்து வந்த சீக்கியர்கள் மற்றும் அவர்களது சொத்துக்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 3,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
” 1984 ஒரு சீக்கியக் கதை ” எனும் தலைப்பில் 1 மணி நேரம் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் 2010 ஜனவரி 10ம் தேதியன்று வெளியிட்டது. பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தில், 1984 ஜூனில் பொற்கோவிலில் நடந்த தாக்குதல் பற்றியும், 1984 நவம்பரில் நாடு முழுவதிலும் நடந்த கலவரங்கள் பற்றியும் பேசப்பட்டு உள்ளது. பிபிசியின் இந்த ஆவணப்படத்தின் வீடியோ 2013ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி “உராஜ் சிங் ” என்ற யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2015 நவம்பர் 10ம் தேதியன்று ” இந்தியா சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் ” என்ற தலைப்பில் 9 நிமிடங்கள் கொண்ட பாட்காஸ்ட் ஒன்றையும் பிபிசி வெளியிட்டு இருக்கிறது.
1984ம் ஆண்டில் பொற்கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனமே ஆவணப்படம் வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆவணப்படம் மன்மோகன் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஆண்டில் தான் வெளியிட்டது.
முடிவு :
நம் தேடலில், 1984-ல் டெல்லியில் பல விசயங்கள் நடந்தன. ஏன் எந்த ஆவணப்படங்களும் வெளியாகவில்லை என சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்து ஏன் ஆவணப்படங்கள் வெளியாகவில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய தகவல் தவறானது. 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான நடந்த வன்முறை குறித்து பிபிசி 2010ல் ஆவணப்படம் வெளியிட்டு இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.