பிபிசி மீதான ஐடி ரெய்டு காரணமாக மோடிக்கு எதிராக லண்டன் பாலத்தில் வைக்கப்பட்ட பேனரா ?

பரவிய செய்தி
ஐடி ரெய்டு விட்டா உடனே பயந்துட்டு அம்மாஞ்சியா இருக்க BBC என்ன தயிர் சாத இந்தியா ஊடகம்னன்னு நினைச்சிங்கடா சங்கிகளா… லண்டன் தேம்ஸ் நதிக்கரையில்..
மதிப்பீடு
விளக்கம்
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட மோடி குஜாரத் ஆவணப்படத்திற்கு ஆளும் பாஜக அரசு தடை விதித்தது. பிபிசியின் ஆவணப்படம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலங்களில் வருமான வரித்துறையால் 3 நாட்கள் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. பிபிசி மீது நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனைக்கு பல்வேறு கண்டனங்களும் எழுந்தன.
இந்நிலையில், பிபிசி மீது மோடி அரசு வருமான வரித்துறை சோதனை நடத்தியன் விளைவால் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் ” பிரதமர் மோடியை பதவி விலகக் கொல்லி ” பேனருடன் போராட்டம் நடைபெற்றதாக 28 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐடி ரெய்டு விட்டா
உடனே பயந்துட்டு அம்மாஞ்சியா இருக்க BBC என்ன தயிர் சாத இந்தியா ஊடகம்னன்னு நினைச்சிங்கடா சங்கிகளா…
லண்டன் தேம்ஸ் நதிக்கரையில்… pic.twitter.com/rPkvgJTYFl
— TAMIZHAN JEYAKUMAR (@jaikumar0431974) February 17, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில், ” Resign Modi ” என எழுதப்பட்ட பேனர் தொங்கவிடப்பட்டு உள்ளது. லண்டன் பாலத்தில் மோடியை பதவி விலகச் சொல்லி நடத்தியப் போராட்டம் குறித்து தேடுகையில், வைரல் செய்யப்படும் வீடியோ கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி Cloud 7 TV சேனல் எனும் முகநூல் பக்கத்தில் வெளியாகி இருப்பதை பார்க்க முடிந்தது.
2021 ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் மோடியை ராஜினாமா செய்யச்சொல்லி பேனர் தொங்கவிடப்பட்டதாக தி கேரவன் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
Noticeboard | “Resign Modi”: Independence Day banner dropped from London’s Westminster Bridge: https://t.co/p3yy7oBxnC pic.twitter.com/m0RMxECbK9
— The Caravan (@thecaravanindia) August 15, 2021
பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பது, தலித் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகள், கோவிட் 19 பாதிப்பை திறன்பட கையாளாமல் விட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு “ மோடி ராஜினாமா ” செய்யும் நாளே இந்தியாவிற்கு சுதந்திர நாள் என எழுதப்பட்ட பேனரை புலம்பெயர்ந்த இந்தியர்கள் தொங்கவிட்டதாக தெற்காசிய ஒற்றுமை குழு யூடியூப் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : மோடி ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாக பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாகப் பரவும் வதந்தி !
மேலும் படிக்க : லண்டனில் பிபிசிக்கு எதிராக போராடிய சங்கிகளை பொதுமக்கள், காவல்துறை தாக்கும் வீடியோவா ?
இதற்கு முன்பாக, பிபிசி ஆவணப்படம் தொடர்பாக அரசியல் ரீதியாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பல தவறான தகவல்கள் குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், பிபிசி மீது ஐடி ரெய்டு நடத்தியதால் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள பாலத்தில் ” ராஜினாமா மோடி ” என எழுதப்பட்ட பேனர் தொங்கவிடப்பட்டதாக பரவும் வீடியோ சமீபத்தில் நடந்தது அல்ல. வைரல் செய்யப்படும் வீடியோ 2021 இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு லண்டன் பாலத்தில் வைக்கப்பட்ட பேனர் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.