கரடியின் குகையில் ஒரு மாதம் இரையாக இருந்த ரஷ்ய வேட்டைக்காரரா ?

பரவிய செய்தி

ரஷ்யாவில் இரைக்காக ஒருவரை தூக்கிச் சென்ற கரடி அவரது முதுகெலும்பை உடைத்து குகையிலேயே ஒரு மாதமாக வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

இளகிய மனம் கொண்டவர்களால் பார்க்க முடியாதவாறு வெண்ணிறத்திலான சதையற்ற உடலில் ஆங்காங்கே ரத்த காயங்கள், தலை முதல் கால் வரையில் தொற்றுக்கள் சூழ்ந்து, முகமே அழுகிய நிலை போன்று இருக்கும் ஒருவர் உயிருடன் கண்களை அசைத்து பார்க்கும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை சோதிக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோவே உலகம் முழுவதிலும் வைரலாகியது.

ரஷ்யாவில் உள்ள துவா என்ற மலைப்பகுதிக்கு சென்ற வேட்டைக்காரர்கள் குழு அங்கிருந்த குகை ஒன்றில் கரடி உண்பதற்காக வைத்திருந்த மனித உடலை கண்டுள்ளனர். ஆனால், அந்த உடலில் உயிர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அவரின் பெயர் அலெக்ஸ்சாண்டர் என்பதும், இரைக்காக அவரை கரடி தூக்கி சென்று ஒருமாத காலமாக கரடியின் குகையில் வைத்திருந்ததாகவும், முதுகெலும்பு உடைந்ததால் ஒருமாதம் சிறுநீரை மட்டுமே குடித்து உயிருடன் இருந்ததாக அந்த நபர் மருத்துவர்களிடம் கூறியதாக தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்பட சர்வதேச அளவில் வைரலான செய்தியாகும்.

Timesnownews Link | Kalaignar Link

இந்தியாவில் டைம்ஸ்நவ்நியூஸ் முதல் கலைஞர் செய்திகள் வரையில் கரடியின் குகையில் மீட்கப்பட்ட மனிதர் என புகைப்படங்கள் உடன் செய்திகள் ஜூன் முதல் ஜூலை வரையிலான இடைப்பட்ட காலங்களில் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வீடியோவில் இருப்பவரை சித்தர் என்று கூறியும் பகிர்ந்து வருகின்றனர்.

கேட்பதற்கு Revenant என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் நடிகர் Leonardo Di Caprio’s கரடியால் தாக்கப்பட்ட காட்சியை போன்று பலருக்கும் தோன்றி இருக்கக்கூடும்.

செய்தியின் நம்பகத்தன்மை ?

சமூக ஊடகங்கள் மட்டுமில்லாமல் முதன்மை ஊடகங்களிலும் செய்தியாக வெளியான கரடி மனிதர் குறித்து ஆராய்ந்து பார்க்க முயற்சித்தோம். அனைத்து செய்தியிலும் வீடியோ, புகைப்படத்தில் இருப்பவர் கரடி குகையில் மீட்கப்பட்டதாகவே குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால், ” Man lives after bear breaks his spine and keeps him as food inside den ” என்ற தலைப்பில் perma.cc என்ற இணையதளத்தில் வெளியான செய்தியில் updated நியூஸ் ஆக ஓர் தகவலை தெரிவித்து இருந்தனர்.

” கரடி மனிதர் தொடர்பான கதையானது ரஷ்யாவின் முதன்மை செய்தித்தாளான Izvestia மற்றும் செய்தி நிறுவனமான EADaily மூலம் வெளியாகியது. ஆனால், துவா குடியரசின் சுகாதர அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் துவாவில் நடந்ததாக எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. இந்த பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் அல்லது எந்தவொரு அதிகாரப்பூர்வ துறையால் இந்த சம்பவம் பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவம் துவா பகுதிக்கு வெளியே நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். அந்த வீடியோவின் பின் பகுதியில் பேசுவது துவா மொழியல்ல ” என தெரிவித்து இருந்ததாக பதிவிட்டு இருந்தனர்.

ஆக, இந்த தகவலில் இருந்து வீடியோவில் இருக்கும் மனிதர் ரஷ்யாவின் துவா பகுதியில் உள்ள கரடி குகையில் இருந்து மீட்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எந்த பகுதி ? எதனால் ?

கரடி மனிதர் குறித்து updated நியூஸ் அளிக்கப்பட்டு இருப்பதால் மற்ற செய்தித்தளத்தில் விவரங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும் என மேற்கொண்டு தேடியதில் ” Doctor says Russian man ‘in bear attack’ was actually Kazakhstani suffering from severe psoriasis ” என்ற தலைப்பில் வெளியான dailymail தளத்தின் செய்தியை காண முடிந்தது.

கரடியால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ரஷ்ய மனிதர், உண்மையில் கஜகஸ்தானை சேர்ந்தவர் ஆவார். அவர் கடுமையான சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டதே அவரின் நிலைக்கு காரணமாகும் என்ற கூடுதல் தகவல் கிடைத்தது.

கஜகஸ்தான் நாட்டின் வடமேற்கு நகரமான அஃடோப் நகரில் உள்ள Aktobe Medical Centre-ல் அலெக்ஸாண்டருக்கு சிகிச்சையளித்த தலைமை மருத்துவர் Rustem Isayev , வீடியோவில் பார்த்த நபர் தன்னுடைய கண்காணிப்பில் இருந்த நோயாளி என்றும், கரடியால் தாக்கப்பட்டவர் அல்ல என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், அலெக்ஸாண்டர் psoriasis எனும் தோல்வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். 15 நாட்கள் முன்பு எங்களிடம் வந்தார். அவருக்கான சிகிச்சையை அளித்தோம். தற்பொழுது அவரின் உடல்நிலை தேறி வருகிறது. அவர் கஜகஸ்தான் நாட்டு குடிமகன், அஃடோப் பகுதியை சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோவானது அலெக்ஸாண்டர் Aktobe Medical Centre-ல் அனுமதிக்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்டது. வீடியோ உடன் வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தியே என்றும், இதனை வெளியிட்ட ஊழியரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர் Rustem Isayev கூறியுள்ளார்.

கூடுதல் தகவல் :

ஆர்க்டிக் பகுதியில் போலார் கரடி மனிதர் ஒருவர் கரடியால் தாக்கப்பட்ட பிறகு அங்கிருந்து அழைத்து வரப்பட்டார். அங்கு கரடியால் தாக்கப்பட்ட நபர் தான் வீடியோவில் இருப்பவர் என்றும் சில பதிவுகளில் கூறப்படுகிறது.

ஆனால், அது உண்மையில்லை, ஆர்க்டிக் பகுதியில் போலார் கரடி தாக்கியது தொடர்பான ஆவணப்படம் 2014-ல் மூன்று பகுதிகளாக Youtube-ல் Polar Bear Man Returns to the Arctic: VICE Reports என வெளியாகி இருக்கிறது.

அதன் மூன்றாம் பக்கத்தில் கரடியால் தாக்கப்பட்டவரின் உடல் ஸ்டக்சரில் வைத்திருக்கும் பொழுது அவரின் முகத்தில் காயங்கள் இருப்பதை பார்க்கலாம். ஆனால், வீடியோவில் இருவருக்கும், அவருக்கும் வேறுபாடுகள் உள்ளதை தெளிவாக பார்க்க முடிகிறது.

முடிவு :

நம்முடைய தேடலில் இருந்து, சமூக ஊடகங்கள் முதல் இந்திய முதன்மை செய்தி ஊடகங்கள் வரையில் கரடி குகையில் ஒரு மாதம் சிக்கியிருந்த மனிதரின் நிலை என பரவிய வீடியோ தவறான செய்தியுடன் வைரலாகியது என நிரூபணமாகியுள்ளது. அவர் ரஷ்யர் அல்ல, கஜகஸ்தானை சேர்ந்தவர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button