This article is from Aug 26, 2019

பிச்சை எடுப்பவரின் பையில் 1.8 கோடியா ? |உண்மை என்ன ?

பரவிய செய்தி

கர்நாடகாவில் மரணமடைந்த ஒரு #பிச்சைக்காரரின் பையில் இருந்த தொகை அங்கேயே காவல்துறையினரால் எண்ணிக் கணக்கிடப்பட்டது. அதிகம் ஒன்றுமில்லை…..#ரூ. ஒரு கோடியே எண்பத்தாறு லட்சத்து நாற்பத்தி மூவாயிரத்து முன்னூற்று அறுபத்து நான்கு மட்டும்.(ரூ1,86,43,364/-)!!!

மதிப்பீடு

விளக்கம்

கர்நாடக மாநிலத்தில் பிச்சை எடுத்து வந்தவர் இறந்த நிலையில், அவர் வசித்து வந்த சிறிய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பைகளில் 1.86 கோடி இருந்தாக வீடியோ உடன் செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

பிச்சை எடுப்பவர் வசித்த இடங்களில் லட்சங்களில் பணம் இருப்பது தொடர்பான செய்திகள் பல கேட்டு இருப்போம். ஆனால் கோடி என பரவுவது சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.. ஆகையால் அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தோம்.

எங்கெல்லாம் பரவியது ?

பிச்சை எடுப்பவரின் பையில் 1.8 கோடி இருந்தாக பரவும் செய்தி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மாநிலங்களில் பரவி இருப்பதை காண முடிந்தது.

ஒன்றில் பெங்களூர் என்றும், மற்றொன்றில் மும்பை பகுதியில் என்றும் பரவி இருக்கிறது. மேலும், தினமலர் செய்தியில் மும்பையில் நிகழ்ந்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

இந்த சம்பவம் தற்போது நடந்தவை அல்ல. 2016-ம் ஆண்டிலேயே யூட்யூப் தளத்தில் வீடியோ வைரலாகி இருக்கிறது. ஆனால், சில பதிவுகளில் 1.30‌ கோடி என இடம்பெற்றுள்ளன.

கோடி கணக்கில் பணம் என்றால் அனைத்து முதன்மை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கும் ஆனால் யூட்யூப் தளத்தில் மட்டுமே பெரிதாக பரவியிருக்கிறது.

அனைத்து வீடியோக்களும் ஆகஸ்ட் 2016-ல் பரவி இருக்க, எங்கிருந்து பரவியது என தொடர்ந்து தேடிய பொழுது 2016 ஜுலை 24-ம் தேதி பதிவான வீடியோ கிடைத்தது. அதில் காட்சிகள் தெளிவாக இருந்தன.

அந்த யூட்யூப் வீடியோவில் கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி பகுதியில் இறந்த பிச்சை எடுக்கும் பெண்ணின் பைகளில் அதிக அளவில் பணம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு தொகை என கூறவில்லை. அந்த வீடியோவில் கன்னட மொழியில் பேசுவதை உறுதி செய்ய முடிந்தது. மேலும் தொகை எண்ணிக்கை குறித்து பேசப்படவில்லை.

முடிவு :

நம்முடைய ஆய்வில், பிச்சை எடுப்பவரின் பையில் 1.8 கோடி இருந்தாக முதன்மை ஊடகங்களில் செய்திகள் வெளியாகவில்லை.

பரவும் வீடியோ கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் எடுக்கப்பட்டது‌. 2016-ல் நிகழ்ந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

பரவும் பதிவுகளில் கூறுவது போல 1.8 கோடி இருக்க வாய்ப்பில்லை. அதில் ரூபாய்10, 20, 50, 100 எண்ணிக்கை கொண்ட நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மட்டுமே அதிகம் உள்ளன. ஒருவேளை 1 லட்சத்து 80 ஆயிரம் வேண்டுமானால் இருக்கலாம். 1.80 கோடி அளவுக்கு அங்கு பணம் குவிந்து இல்லை.

2019 ஜனவரியில் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில், பிச்சை எடுத்து வந்தவரின் இறந்த உடலில் இருந்த செயற்கை காலில் 96,000 ரூபாய் இருந்ததாக வெளியாகி உள்ளது.

இதே போன்று, ஜூன் 2019 ஆந்திரப் பிரதேசத்தில் இறந்த பிச்சைக்காரரிடம் 3.22 லட்சம் கிடைத்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader