வட இந்தியாவில் சிறுவன் நரபலியா | போலீஸ் அளித்த பதில் என்ன ?

பரவிய செய்தி
ஒடிசாவில் ஒன்பது வயது சிறுவனை தாய் மாமன் நரபலிக் கொடுத்தால் பணம் வருமென சிறுவனின் தலையை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
மதிப்பீடு
சுருக்கம்
ராஜஸ்தான் மாநிலத்தில் நவராத்திரி விழாவின் போது நடைபெற்ற நாடகத்தில் சிறுவன் இறந்தது போன்று மேஜிக் செய்து காண்பித்துள்ளனர். ஆனால், அந்த புகைப்படங்கள் தவறான கதைகளுடன் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
விளக்கம்
வட இந்திய மாநிலமான ஒடிசாவில் பணம் வரும் என்பதற்காக 9 வயது சிறுவனை நரபலிக் கொடுத்து தலையை ஊர்வலமாகக் கொண்டு செல்வதாகக் கூறி தமிழ்நாடு வரையிலும் இந்த செய்திகள் பரவி கிடக்கிறது. இதேபோன்று மற்ற மொழியில் ஹிந்து சிறுவன் உயிரை தியாகம் செய்தான் என பதிவிட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் போலீஸ் :
வைரலாகும் படங்கள் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம அல்ல. அது ராஜஸ்தான் மாநிலம் பில்வரா பகுதியில் நடைபெற்றது என்பதை முதலில் அறிய வேண்டும்.
இணையத்தில் வேகமாக பரவிய கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ராஜஸ்தான் மாநிலம் மற்றும் பில்வரா போலீஸ் ட்விட்டர் மற்றும் முகநூலில் பதில் அளித்துள்ளது.
“ சிறுவன் இறந்ததாகப் பரவும் வீடியோ பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டவை, அதை தவறான கதைகளுடன் சிலர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில், இது ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவில் நடைபெறும் மேஜிக் ஷோ. Khakhla கிராமத்தில் நடைபெற்ற இந்த நாடகத்தை தவறான கதைகளுடன் பரவி வருகிறது “ என ட்விட்டரில் ராஜஸ்தான் போலீஸ் தெரிவித்து உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது அக்டோபர் 18-ம் தேதியாகும். இரு தினங்களில் அதிவேகமாக தவறான செய்திகளுடன் இணையத்தில் பரவி உள்ளது.
பில்வரா போலீஸ் ட்விட்டர் பக்கத்தில், அக்டோபர் 20-ம் தேதி சிறுவன் உயிருடன் இருப்பதாக புகைப்படங்களை பதிவிட்டு உள்ளனர். அம்மாநிலத்தில் சிறுவன் இறந்ததாகக் பரவிய வதந்தியை ராஜஸ்தான் மாநில போலீஸ் தவறான செய்தி என வெளியிட்டும் தென் இந்தியா வரை பரவியுள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.