மேற்கு வங்கம் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட குழந்தையா ?| உண்மை அறிக.

பரவிய செய்தி
இந்த தேசத்திற்க்காக நாங்கள் வாழ்கிறோம். நாங்கள் தாக்க பட்டால் கேக்க ஒரு ஊடகம் இல்லை இந்த திருநாட்டில் மேற்கு வங்கம் முஸ்லிம்களால் தாக்கப்பட்ட குழந்தைகள்.
மதிப்பீடு
விளக்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கலவரத்தில் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட குழந்தை என இரத்தத்துடன் இருக்கும் புகைப்படம் மற்றும் காயத்திற்கு சிகிச்சை அழைக்கப்பட்ட பின் இருக்கும் மற்றொரு புகைப்படம் என குழ்நதையின் இரு புகைப்படங்கள் முகநூலில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
முகநூலில் பகிரப்பட்டு வரும் குழந்தையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில்,UNB இணையதளத்தில் ” 16 dead, over 100 injured in fatal train collision in Brahmanbaria ” என்ற தலைப்பில் பங்காளதேஷ் நாட்டில் பிரமண்பரியா பகுதியில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்த வெளியான செய்தி கிடைத்தது. அந்த செய்தியில், மேற்காணும் குழந்தை தலையில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
பங்களாதேஷ் நாட்டில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்த வார்த்தைகளை கொண்டு தேடிய பொழுது நவம்பர் 12-ம் தேதி தி பிசினஸ் ஸ்டாண்டர்டு இணையதள செய்தியில் இருந்து, ” தலையில் அடிபட்டு பிரமண்பரியா மருத்துவமனையின் படுக்கையில் இருக்கும் இரண்டரை வயது குழந்தை தனது தாயை தேடி அழுதுக் கொண்டிருக்கிறாள். எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தால் குழந்தை தாயிடம் இருந்து பிரிந்து உள்ளது. எனினும், குழந்தையின் பெயர் மஹிமா, காக்கோலி எனும் பகுதியில் இருந்து தனது தாயுடன் உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து உள்ளார் ” எனும் தகவலை அறிந்து கொள்ள முடிகிறது.
நவம்பர் மாதத்தில் பங்களாதேஷ் நாட்டில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டு ரத்தத்துடன் இருக்கும் குழந்தைக்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க : மும்பையில் CAB, NRC-க்கு எதிராக முஸ்லீம் மக்களின் போராட்டமா ?
பங்களாதேஷ் நாட்டில் விபத்தில் சிக்கிய குழந்தையின் புகைப்படமும், தற்பொழுது மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட குழந்தை என பரவி வரும் புகைப்படமும் ஒன்றே. இந்த குழந்தையின் புகைப்படம் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, தவறான புகைப்படங்கள் மற்றும் தகவலை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.