மேற்கு வங்கத்தில் தொழுகைக்கு இடையூறாக இருந்ததால் ரயில் நிலையம் தாக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
மமம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில் நவாப்ரோ மகிசாசூர் என்ற ஊரில் உள்ள மக்கள் ரயில் தண்டவாளத்தையும் பெயர்த் தெடுத்து ரயில்வே நிலையத்தையும் உடைத்தார்கள். காரணம் தெரியுமா? அவர்கள் நமாஸ் செய்வதற்கு ரயில் சத்தம் இடையூராக இருக்கிறதாம்.
மதிப்பீடு
விளக்கம்
சமீப நாட்களாக இந்தியாவில் வகுப்புவாத மோதல்கள், புல்டோசர் நடவடிக்கை அதிகம் அரங்கேறி வருவதை பார்த்து வருகிறோம். அதேபோல், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கோவில், மசூதி போன்ற வழிப்பாட்டு தளங்களில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நவாப்ரோ மகிசாசூர் என்ற ஊரில் நமாஸ் செய்வதற்கு ரயில் சத்தம் இடையூறாக இருப்பதன் காரணாமாக அங்குள்ள முஸ்லீம் மக்கள் ரயில் தண்டவாளத்தை பெயர்த்து எடுத்தும், ரயில் நிலையத்தை உடைத்து உள்ளதாக 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மமம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில் நவாப்ரோ மகிசாசூர் என்ற ஊரில் உள்ள மக்கள் ரயில் தண்டவாளத்தையும் பெயர்த் தெடுத்து ரயில்வே நிலையத்தையும் உடைத்தார்கள். காரணம் தெரியுமா? அவர்கள் நமாஸ் செய்வதற்கு ரயில் சத்தம் இடையூராக இருக்கிறதாம். 🤔🤔🤔🤔🤔🤔🤔 pic.twitter.com/fDzNph1cip
— Narayanan R (@rnsaai) April 27, 2022
உண்மை என்ன ?
மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை தாக்கிய சம்பவம் குறித்து தேடுகையில், 2019 டிசம்பர் 14-ம் தேதி ntvwb news எனும் யூடியூப் சேனலில் நவாப்ரோ மகிசாசூர் ரயில் நிலையத்தின் தண்டவாள பாதையை போராட்டக்காரர்கள் அகற்றுவதாக வெளியிட்ட செய்தியில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற காட்சி இடம்பெற்று இருக்கிறது.
2019-ல் என்ஆர்சி-க்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்சிதாபாத் நடைபெற்ற போராட்டங்களின் போது நவாப்ரோ மகிசாசூர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தை மக்கள் சூறையாடிய சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில், செய்திகள் ஊடங்களில் வெளியாகியும் உள்ளது.
வீடியோ 2 :
மேற்கு வங்கத்தில் ரயில் நிலையம் உடைப்பு என இதே தகவல் உடன் ரயில் மீது கல்லெறியப்படும் மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த வீடியோ சமீபத்தில் தமிழ்நாட்டின் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்லெறிந்து தாக்கிக் கொண்ட சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், மேற்கு வங்க மாநிலத்தில் தொழுகையின் போது இடையூறாக இருப்பதாகக் கூறி முஸ்லீம் மக்கள் நவாப்ரோ மகிசாசூர் ரயில் நிலையத்தை உடைத்ததாக பரவும் தகவல் வதந்தியே.
அந்த வீடியோ கடந்த 2019-ல் என்ஆர்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது மகிசாசூர் ரயில் நிலையம் உடைக்கப்பட்ட பழைய வீடியோ என்றும், மற்றொரு வீடியோ தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.