” Beti bachao ” திட்ட நிதியில் 56% விளம்பரத்திற்கு செலவிட்ட அரசு.

பரவிய செய்தி
“பேட்டி பச்சோ பேட்டி பதோ ” திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 56% நிதி விளம்பரத்திற்கே செலவிட்டுள்ளனர். மேலும், திட்டமானது தோல்வியடைந்தது என நிரூபிக்கப்பட்டது.
மதிப்பீடு
சுருக்கம்
2014-ல் இருந்து 2019 நிதியாண்டு வரையில் ” பேட்டி பச்சோ பேட்டி பதோ ” திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 56% விளம்பரத்திற்காக பயன்படுத்தி உள்ளனர், 25% நிதி மட்டுமே மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது, 19% நிதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
விளக்கம்
இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பிரதமர் மோடி அவர்களால் 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே “பேட்டி பச்சோ பேட்டி பதோ ” எனும் ” பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் ” திட்டம். இந்த திட்டத்தின்படி, குழந்தைகளின் பாலின விகிதத்தை(Child sex ratio) அதிகரிக்க, தேசிய அளவில் விழிப்புணர்வு, பிரச்சாரங்கள், உதவிகள் செய்ய தொடங்கப்பட்டது.
2015 ஜனவரியில் பெண் குழந்தைகள் சதவீதம் மிகக்குறைவாக இருக்கும் ஹரியானா மாநிலத்தின் பானிபட் இல் “பேட்டி பச்சோ பேட்டி பதோ “(beti bachao beti padhao) திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இதற்காக மத்திய அரசு 2014-2015 இல் 18.91 கோடி, 2015-16-ல் 24.54 கோடி, 2016-17 இல் 29.79 கோடி, 2017-18 இல் 135.71 கோடி மற்றும் 2018-19 நிதியாண்டில் 155.71 கோடியும்(டிசம்பர் 31, 2018) விளம்பரத்திற்கு செலவிட்டு உள்ளனர். மொத்தம் 364.66 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
பெண் குழந்தைகள் வேண்டாம் என நினைக்கும் சூழல் இந்தியாவில் இன்றும் இருப்பதால் அந்த எண்ணத்தை மாற்றவே இத்திட்டத்தை தொடங்கினர். மேலும், திட்டத்தை விளம்பரப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வருவதே அரசு நோக்கமாக இருந்தது. எனினும், அதற்கான நிதியில் 25% நிதி மட்டுமே மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன, மீதமுள்ள 19% நிதி இன்னும் பயன்படுத்தாமல் உள்ளனர்.
2018-2019-ல் மத்திய அரசு ” பேட்டி பச்சோ பேட்டி பதோ ” திட்டத்திற்கு ஒதுக்கிய 280 கோடியில் 70 கோடி மட்டுமே மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது, 155.71 கோடி திட்டத்தை பல வழிகளில் விளம்பரப்படுத்த பயன்படுத்தி உள்ளனர்.
“பேட்டி பச்சோ பேட்டி பதோ ” திட்டத்தை விளம்பரப்படுத்தி பெண் குழந்தைகள் மீதான விழிப்புணர்வு கொண்டு வர அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததாக லோக் சபாவில் ஐந்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான மாநில யூனியன் அமைச்சர் விரேந்திர குமார் அளித்த பதிலில் , ” மத்திய அரசு இந்தியாவில் 650 மாவட்டங்களிலும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்து, 2015-ல் 100 மாவட்டங்களில் தொடங்கி செயல்படுத்தி வருவதாகவும், அந்தந்த மாவட்டத்தில் குழந்தை பாலின விகிதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார்”.
ஆனால், முதல் நிலையில் தேர்ந்தெடுத்த 100 மாவட்டங்களில் 32 மற்றும் இரண்டாம் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 61 மாவட்டங்களில் 21 என மொத்தம் 53 மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம் குறைந்து உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. இவை விரேந்திர குமார் லோக் சபாவில் அளித்த பதில் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவுகள்.
அரசின் நோக்கம் “பேட்டி பச்சோ பேட்டி பதோ ” திட்டத்தை விளம்பரப்படுத்துவதில் மட்டுமே முக்கியமாக இருந்துள்ளது. ஆனால், குழந்தை பாலின விகிதம் திட்டம் செயல்படுத்திய பல மாவட்டத்தில் தோல்வியை சந்தித்து உள்ளது.
பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு எனும் திட்டத்தின் நிதி முழுவதும் பெண் பிள்ளைகளுக்கு கல்வி, மருத்துவம் வழங்குவதாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.