ராகுலுடன் இளம்பெண் எடுத்துக் கொண்ட பழைய படத்தை ஆபாசமாகப் பரப்பும் பாஜக ஆதரவாளர்கள்

பரவிய செய்தி
அந்த “பாத யாத்திரை “, பின் “பாதிரி யாத்திரை”யாகி இப்பொழுது “ஒரு மாதிரி யாத்திரை”யாக தொடர்கின்றது.
மதிப்பீடு
விளக்கம்
ராகுல் காந்தி வேனின் மீது நின்று ஒரு பெண்ணுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தினை வலதுசாரி ஆதரவாளர்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகளுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அப்பதிவுகளில், ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை, தற்போது வேறொரு திசை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டுப் பரப்புகின்றனர். பலர் அநாகரிகமான வார்த்தைகளையும் பயன்படுத்தி அப்புகைப்படத்தினை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும், ராகுல் காந்தி ஒரு பெண்ணுடன் வேனின் மீது நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த போது, அப்புகைப்படம் எடுக்கப்பட்ட நிகழ்வு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் 2017, நவம்பர் 1ம் தேதி வீடியோ ஒன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் குஜராத் மாவட்டத்தில் பருச்சில் என்ற பகுதியில் ராகுல் காந்தி வாகனத்தின் மீதேறி ஒரு பெண் புகைப்படம் எடுத்து கொண்டாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#WATCH: A girl gets onto Congress Vice President Rahul Gandhi’s vehicle during his roadshow in #Gujarat‘s Bharuch, takes a selfie with him pic.twitter.com/blEnRXS2FK
— ANI (@ANI) November 1, 2017
குஜராத் சட்டமன்ற தேர்தல் 2017ம் ஆண்டு நடைபெற்றது. அத்தேர்தல் நடைபெற்ற காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி செயல்பட்டார். அவர் குஜராத்தில் நடைபெற இருந்த தேர்தலுக்காக 2017, நவம்பரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
குஜராத் மாவட்டத்திலுள்ள பருச்சில் என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இளம் பெண் ஒருவர் ராகுல் காந்தியின் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டதுடன், அவருக்குப் பூங்கொத்தினையும் அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் ராகுல் காந்தி வாகனத்திலிருந்து கீழே இறங்கிச் சென்று அப்பெண்ணுடன் கை குலுக்கி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்வு குறித்து அன்றைய தேதியிலேயே தி எக்னாமிக்ஸ் டைம்ஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்றவற்றில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : தங்கை மகளுடன் இருக்கும் ராகுலின் படத்தை தவறாகப் பரப்பிய பாஜகவினர்.. பதிவை நீக்கிய நிர்மல் குமார் !
ராகுல் காந்தி குறித்து தவறான புகைப்படங்களையும், தகவல்களையும் சமூக வலைதளங்களில் பாஜகவினர் மற்றும் வலதுசாரிகள் பரப்புவது புதிதல்ல. இதே போன்று சிறிது நாட்களுக்கு முன்னர் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்தார்.
அதில் “குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த பப்புவை (ராகுல் காந்தி) கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டு இருந்தார். அப்புகைப்படத்தில் ராகுல் காந்தியுடன் இருப்பது பிரியங்கா காந்தியின் மகள் எனத் தெரிந்ததும், சிறிது நேரத்திலேயே அப்பதிவினை நிர்மல் குமார் நீக்கவும் செய்தார். இது குறித்து யூடர்ன் கட்டுரையினை வெளியிட்டுள்ளது.
இந்திய ஒற்றுமை யாத்திரையினை தொடங்கியதிலிருந்து ராகுல் காந்தி மீது பல்வேறு போலிச் செய்திகளை பாஜகவினரும் அதன் ஆதரவாளர்களும் பரப்பி வருகின்றனர். அவற்றின் உண்மைத் தன்மையினை கண்டறிந்து யூடர்ன் செய்திகளை வெளியிட்டுள்ளது .
முடிவு :
நம் தேடலில், இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஒரு பெண் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகப் பரப்பப்படும் புகைப்படம் 2017, நவம்பர் மாதம் குஜராத் தேர்தலின் போது எடுக்கப்பட்டது. அதை இந்திய ஒற்றுமை யாத்திரையுடன் இணைத்து அநாகரிகமான வார்த்தைகளுடன் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.