ஆர்.எஸ்.எஸ் உடையில் இருப்பது முப்படைகளின் தலைமை தளபதியா ?

பரவிய செய்தி
முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் என மத்திய அரசு அறிவிப்பு. பிபின் ராவத் ஆர்எஸ்எஸ் உடையில் இருப்பதாக வைரலாகும் புகைப்படங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் மத்திய அரசினால் நியமிக்கப்பட்டார். மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஜெனரல் பிபின் ராவத் குறித்து செய்திகளில் வெளியான நியூஸ் கார்டு உடன் ஆர்எஸ்எஸ் உடையில் இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை இணைத்து, அவரே தற்போதைய முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டு இருப்பதாக மீம்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த மீம்களை பகிர்ந்து, அவற்றின் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், இரண்டு படத்திலும் ஆர்.எஸ். உடையில் இருப்பது முப்படை தலைமை தளபதியா என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
மீம் பதிவில் மேடையில் இடம்பெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், 2019 அக்டோபர் 9-ம் தேதி நியூஸ்பாரதி என்ற இணையதளத்தில் ” With ‘right education’ India can become a game changer: Shiv Nadar ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் அப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
அதில், ” ஆண்டுதோறும் நிகழும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் அரசியல், மதம் மற்றும் சமூகத் துறை சார்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜெனரல் விகே சிங், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் உடையில் இருந்தாக குறிப்பிட்டு உள்ளனர். புகைப்படத்தில் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ள நபர் முன்னாள் ராணுவ ஜெனரல் விகே சிங் ஆவார்.
விஜய் குமார் சிங் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பதவி வகித்தவர். 2012-ல் ராணுவ பதிவியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸியாபாத் தொகுதியில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். தற்பொழுது, மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இணை அமைச்சராக உள்ளார்.
மற்றொரு புகைப்படம் :
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் என மேடையில் ஆர்எஸ்எஸ் உடையில் உள்ளவர்கள் மத்தியில் இருக்கும் நபரை வட்டமிட்டு காண்பித்து பகிரப்படும் மற்றொரு புகைப்படத்தில் இருப்பவரும் பாஜக அமைச்சரும், முன்னாள் ராணுவ தலைமை தளபதி விகே சிங் அவர்களேதான்.
By donning the uniform of the RSS, which is opposed to a secular State, Gen VK Singh (who tried to manipulate his age, to extend his date of retirement) has disgraced his army uniform pic.twitter.com/3PwCUouT2L
— Prashant Bhushan (@pbhushan1) February 27, 2018
வழக்கறிஞரும், ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் தன் ட்விட்டர் பக்கத்தில், ” மதச்சார்பற்ற அரசை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் உடைய சீருடையை அணிவதன் மூலம் , ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வுபெறும் தேதியை நீட்டிக்க, தனது வயதினை கையாள முயன்றவர்) தனது இராணுவ சீருடையை இழிவுபடுத்தி உள்ளார் ” என 2018 பிப்ரவரி மாதம் தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் பிபின் ராவத் ஆர்எஸ்எஸ் உடையில் இருப்பதாக பகிரப்படும் புகைப்படங்கள் தவறானவை. அதில் இருப்பது ஜெனரல் பிபின் ராவத் இல்லை. ஆனால், புகைப்படங்களில் இருப்பது ஓய்வுப்பெற்ற ராணுவ தலைமை தளபதி ஜெனரல் விஜய் குமார் சிங். தற்பொழுது அவர் மத்திய அரசில் இணை அமைச்சராக உள்ளார்.