தஞ்சைப் பெரியக் கோவில் கோபுரத்தின் நிழல் தென்படாதா ?

பரவிய செய்தி
தஞ்சைப் பெரிய கோவில் கோபுரத்தின் நிழலானது நிலத்தில் விழாதவாறு கோவில் கட்டப்பட்டுள்ளது. பிற்பகலில் கோபுரத்தின் நிழலை தன்னுள்ளே விழும் வகையில் கோவில் அமைக்கப்பட்டு இருக்கும்.
மதிப்பீடு
சுருக்கம்
பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கருத்தில் உண்மையில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூற்றுகளும், புகைப்படங்களும் எடுத்துரைக்கின்றன.
விளக்கம்
சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் உருவாகி, 1000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாய் நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவில் என்றென்றும் அம்மண்ணிற்கு சிறப்பே. தஞ்சைப் பெரியக் கோவில் பல அற்புதங்களை கொண்ட கட்டிடக்கலை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அத்தகைய, தஞ்சைப் பெரியக் கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக கோவில் கோபுரத்தின் நிழலானது நிலத்தில் விழாதவாறு அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும். சில கூற்றுகளில், கோபுர பகுதியை விட கோவிலின் அடிப்பகுதி பெரிதாக இருப்பதால் நண்பகலில் கோபுரத்தின் நிழலானது கோவிலில் மறைந்து நிலத்தில் விழாமல் இருக்கும் எனக் கூறுவதுண்டு.
இத்தகைய கருத்துக்கள் நீண்டகாலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால், ஆராய்ச்சி அறிஞர் மற்றும் கோவில்களின் நிபுணரான குடவாயில் பாலசுப்ரமணியன் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் கட்டிடப் பொறியாளருமான எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் மாறுபட்ட கருத்தைக் கூறுகின்றனர். பெரியக் கோவில் கோபுரத்தின் நிழல் குறித்த தகவல்கள் உண்மை இல்லை என்கிறார்கள்.
மாணவர்கள், வரலாற்றாசிரியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் தவறான தகவலை தெரிவிக்கின்றன. டிஜிட்டல் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் கோவில் விமானத்தின் நிழலானது நிலத்தில் விழுவதை பார்க்கலாம். மேலும், காலையில் இருந்து மாலை வரை என அனைத்து நேரங்களிலும் சிகரம், கலசம் உடன் விமானத்தின் நிழல் நிலத்தில் விழுகிறது என்கிறார்கள்.
பெரியக் கோவில் கோபுரத்தின் நிழல் நிலத்தில் விழாது என்பார்கள். இன்னும் சிலர் கோபுரம் 80 டன் எடை கொண்டது என்பதால் நிழல் கீழே விழாது என்றும், சிலர் கலசத்தின் நிழல் நிலத்தில் தென்படாது என்றும் கூறுவதுண்டு. ஆனால், அவற்றில் உண்மை இல்லை என குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்து உள்ளதாக 2004-ல் தி ஹிந்து செய்தியில் வெளியாகி உள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோவில் கோபுரத்தின் நிழல் நிலத்தில் விழும் புகைப்படங்களின் மூலம் கூறப்படுவது கட்டுக்கதை என அறிந்து கொள்ள முடியும்.
கம்பீரமாய் காட்சி அளிக்கும் 1000 ஆண்டுகள் பழமையான சோழனின் கட்டிடக்கலைக்கு கட்டுக்கதைகள் தேவையற்றதே. கட்டுக்கதைகள் இன்றி கோவிலில் இருக்கும் சிறப்புக்களை பற்றி எடுத்துரையுங்கள். மேலும் கோபுர நிழல் தரையில் விழத்தான் செய்கிறது. அங்கு சென்று வருபவர்களுக்கு தெரிந்தது தான். செவி வழிக்கதையாக இது பரவி விட்டது . மிகப்பெரிய, மிகப்பழைய கோவில் அது, தமிழர்களின் கட்டடக்கலையில் முக்கியத்துவத்தை உலகம் முழுக்க பறை சாற்றுகிறது என்பதே போதாதா !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.