This article is from Nov 13, 2020

பீகாரில் EVM மெஷினை பாஜக இளைஞர் ஹக் செய்யும் போது பிடிபட்டாரா?

பரவிய செய்தி

பீகார் தேர்தலில் #EVM மெஷினை instant Hack செய்யும்போது பிடிபட்ட சங்கீ 2 நிமிடத்தில் 8000 வாக்குகள் போட முடியுமாம் இதுல என்னன்னா இவன் court ள வேலைப்பக்குற ஆளாம் #EVMfraud.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

அரசியல் நையாண்டி எனும் முகநூல் பக்கத்தில், பீகார் தேர்தலில் EVM மெஷினை ஹக் செய்த சங்கியை(பாஜகவினர்) அங்குள்ள மக்கள் பிடித்ததாகவும், கையில் வைத்திருக்கும் கருவியின் மூலம் 2 நிமிடத்தில் 8000 வாக்குகள் போட முடியும் என்றும், அதிலும் அந்த இளைஞர் நீதிமன்றத்தில் வேலை பார்ப்பதாகக் கூறி 4.33 நிமிடம் கொண்ட ஓர் வீடியோவைப் பதிவிட்டு இருந்தனர்.

பீகாரில் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹக் செய்து உள்ளதாக இவ்வீடியோ பல முகநூல் பக்கங்களில் வெளியாகி ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள நாம் ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ? 

பீகார் தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் நடந்து உள்ளதாக எதிர்க்கட்சியினர் தங்களை கருத்தைத் தெரிவித்தது செய்திகளில் வெளியாகி வந்தன. ஆனால், தேர்தல் ஆணையம் அதை மறுத்தது. அதேபோல், பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை(EVM) ஹக் செய்ததாகவோ அல்லது மேற்காணும் வீடியோ பீகார் மாநிலத்தில் நிகழ்ந்ததாகவோ செய்திகள் வெளியாகவில்லை. இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் தேசிய அளவிலான கவனம் பெற்று இருக்கும். ஆனால், அப்படி ஏதும் நிகழவில்லை.

வைரலாகும் வீடியோவின் தொடக்கத்தில்,ரூகி பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை இளைஞர் ஹக் செய்ததாக கூறுகின்றனர். ரூகி எனும் கிராமம் பீகார் மாநிலத்தில் இல்லை, ஹரியானாவின் பரோடா சட்டமன்ற தொகுதிக்கு கீழ் வருகிறது. பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி பல மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நிகழ்ந்து இருந்தன.

பரோடா தொகுதியின் எம்எல்ஏ ஸ்ரீ கிருஷ்ணன் ஹூடா டூட் இறந்த காரணத்தினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இந்து ராஜ் நர்வால் வெற்றி பெற்றுள்ளார்.

பரோடா தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹக் செய்த சம்பவம் அல்லது குற்றச்சாட்டு எழுந்ததா எனத் தேடுகையில், நவம்பர் 4-ம் தேதி amarujala.com எனும் இணையதளத்தில் பரோடா தொகுதி குறித்து இந்தியில் வெளியான செய்தி கிடைத்தது.

அதை மொழிமாற்றம் செய்து பார்க்கையில், ” வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியே வாக்காளர்களுக்கு சீட்டுகள்(இ-வோட்டர் ஸ்லீப்)  வழங்கி வந்த இளைஞர்களை வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹக் செய்வதாக நினைத்து மக்கள் தாக்கி உள்ளனர். ஒரு கிராமத்தில் மட்டும் இப்படி நிகழவில்லை, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இப்படி  நிகழ்ந்து இருக்கிறது.

பரோடா தொகுதியின் முந்தலான கிராமத்தில் இளைஞர் ஒருவர் செல்போன் வைஃபை உதவியுடன் வாக்காளர்களுக்கு வோட்டர் ஸ்லீப்களை சிறிய கருவி மூலம் கொடுத்து வந்துள்ளார். போலி வாக்குகளை செலுத்துவதாக நினைத்து அந்த இளைஞரை தாக்கி, ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். கருவியில் இருந்து ஸ்லிப்பை எடுத்துக் காண்பித்த பிறகே அவரை வெளியே விட்டுள்ளனர். இதேபோல், ரிவாடா, நிசாம்பூர், ரூகி உள்ளிட்ட கிராமங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹக் செய்வதாக வதந்திகள் பரப்பி உள்ளன. அந்த இளைஞர்கள் கையில் இருந்தது இ-வோட்டர் ஸ்லிப் கருவி என நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீஸ் தகவல் தெரிவித்து உள்ளதாக ” வெளியாகி இருக்கிறது.

பரோடா தொகுதி இடைத்தேர்தலில் பல கிராமங்களில் கையில் சிறிய கருவி உடன் இருந்த இளைஞர்களை பிடித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வீடியோ எடுத்து உள்ளனர். பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹக் செய்வதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அந்த இளைஞர்கள் கையில் இருந்தது இ-வோட்டர் ஸ்லிப் வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கருவி என பின்னர் தெரிய வந்ததாக ஹரிபூமி எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : பீகாரில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு எனப் பரவும் வீடியோ உண்மையா?

இதற்கு முன்பாக, பீகார் தேர்தலிபோது வாக்குப்பதிவு இயந்திரத்தில் யானை சின்னத்திற்கு வாக்களித்தால் தாமரை சின்னத்திற்கு  வாக்கு விழுவதாக தவறான வீடியோ பரப்பப்பட்டது. அதுகுறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம் தேடலில், பீகார் தேர்தலின் போது EVM மெஷினை ஹக் செய்த பாஜகவைச் சேர்ந்த இளைஞர் பிடிபட்டதாக பரப்பப்படும் வீடியோ மற்றும் தகவல் தவறானது. அந்த வீடியோ எடுக்கப்பட்டது பீகார் இல்லை, ஹரியானாவில் ரூபி கிராமம். அந்த இளைஞரின் கையில் இருந்தது இ-வோட்டர் ஸ்லிப் வழங்கப் பயன்படுத்தப்பட்ட சிறிய கருவி மட்டுமே என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader