Fact Check

நீட் தேர்வில் மோசடி..பீகாரில் விண்ணப்பித்தவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமா ?

பரவிய செய்தி

2018 நீட் தேர்வில் மோசடி. சிபிஎஸ்இ வெளியிட்ட விவரங்களின்படி பீகார் மாநிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 35,641 பேர். ஆனால், தேர்வு முடிவு அறிக்கையின்படி, பீகார் மாநிலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் 37,899 பேர். அப்படியானால், பீகார் மாநிலத்தில் 2258 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமலேயே தேர்ச்சிப் பெற்றவர்களா ? இல்லையென்றால் கூடுதலாக உள்ள 30,430 விண்ணப்பங்கள் போலியாக இணைக்கப்பட்டவையா ?

மதிப்பீடு

விளக்கம்

மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்விற்கு இந்திய அளவில் 13 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 7,14,562  பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பிற்கு தகுதி பெற்றனர். இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாகவும், மோசடி செய்வதாகவும் குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது.

Advertisement

அதில், பீகார் மாநிலத்தில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சில ஆதாரங்களை சுட்டிக்காட்டி கருத்துக்கள் பதிவிடுகின்றனர். அவ்வாறு பரவும் செய்தியில் இருந்த நீட் விண்ணப்பித்த மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் பற்றி பார்ப்போம்.

” பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 66,071 பேர், இதில் தேர்வு எழுதியவர்கள் 63,003 பேர் ஆகும்” . இதில் 37,899 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ வெளியிட்ட தேர்ச்சி விவரத்தில் உள்ளன. இந்த 66,071 மாணவர்களில் பலருக்கு தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காரணத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அருகில் உள்ள வெளிமாநில தேர்வு மையங்களை ஒதுக்க விண்ணப்பித்து இருக்கலாம்.

2018 நீட் தேர்வு மையங்கள் பற்றிய தரவுகளில் பீகாரில் அமைக்கப்பட்ட ” 47 தேர்வு மையங்களில் தேர்வு எழுத தெரிவு செய்யப்பட்டோர் 35,641 பேர் மட்டுமே”. 66,071 பேரில் மாணவர்களின் விருப்பத்தேர்வு செய்யப்பட்ட மையம் அடிப்படையில் பீகார் மாநிலத்திலும் வேறு மாநிலத்திலும் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளனர். ஆகையால், 30,430 பேர் அருகில் உள்ள பிற மாநிலத்தில் நீட் தேர்வை எழுதி இருப்பர்.

உதாரணமாக, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 1,20,000 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 1,14,602 மட்டுமே தேர்வை எதிர் கொண்டதில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 170 தேர்வு மையங்களில் 1,07,288 பேருக்கு மட்டுமே தேர்வு எழுதினர். இவர்களில் வெளிமாநில மாணவர்களும் அடங்கும்.

ஆக, தமிழ்நாட்டில் விண்ணப்பித்த மீதமுள்ள பல ஆயிர மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. குறிப்பாக கேரளாவில் உள்ள தேர்வு மையங்களுக்கு தமிழகத்தில் இருந்து 3,000-க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால், பீகாரில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பித்தவர்கள் பற்றிய விவரங்களை தவறாக புரிந்து கொண்டு போலியான விண்ணப்பங்கள் அல்லது தேர்வு எழுதாமலே 2258 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர் என்று முன்வைக்கும் குற்றச்சாட்டு தவறானவை ஆகும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button