உயிருடன் குழியில் புதைத்து கொல்லப்படும் நிலகை இன மாடு| காரணம் என்ன ?

பரவிய செய்தி
கொடூரம் நிறைந்த மனிதர்களின் பூமி இது. பீகாரில் நிலகை எனும் வகை காட்டு மாடுகள் மக்களின் விவசாய நிலங்களைப் பாழ்படுத்துவதாக அரசே அவைகளை அழிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. வனங்களை ஆக்கிரமித்து விலங்கினங்களை அழித்தொழிக்கும் மனிதனுக்கு தண்டனை தருவது யார்?? வாயில்லா ஜீவன் உயிரோடு புதைப்பது எந்த வகையில் நியாயம்?
மதிப்பீடு
சுருக்கம்
பல ஆண்டுகளாக பீகார் மாநிலத்தில் நிலகை இன மாடுகள் அரசின் அனுமதியுடன் கொல்லப்பட்டு வருகிறது. வைரலாகும் வீடியோ எங்கு நிகழ்ந்தது என்பது குறித்து விரிவாக காண்போம்.
விளக்கம்
நிலகை எனும் இனத்தை சேர்ந்த காட்டு மாடு ஒன்றை குழியில் இறக்கி ஜேசிபி இயந்திரம் கொண்டு மண்ணை தள்ளி கொல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தனை கொடூரமான செயலை கண்டித்து பலரும் கண்டனங்கள் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது, எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து பார்த்தோம். பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் நிலகை இன காட்டு மாட்டை உயிருடன் குழியில் வைத்து ஜேசிபி கொண்டு மண்ணை தள்ளி புதைப்பதாக செப்டம்பர் 5-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்தில் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது.
60 நொடிகள் கொண்ட வீடியோ இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கண்டங்களை பெற்று வருகிறது. துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்டு காயமடைந்த காரணத்தினால் மாட்டினால் அசைய முடியவில்லை என செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
நிலகை இன மாடுகளை கொல்வதற்கு புகார் அளித்து அதற்கான விதிமுறைகள் படியே அனைத்தும் நடைபெறும். ஆனால், வைஷாலி மாவட்டத்தில் நிலகை மாடுஉயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு அனுமதி :
நிலகை (nilagai or blue bull) இன மாடுகள் பல ஆண்டுகளாக அரசின் அனுமதி உடன் கொல்லப்பட்டு வருகின்றன. 2016-ல் பீகார் அரசாங்கம் நிலகை இன காட்டு மாடுகளை தேர்ச்சி பெற்ற ஷூட்டர்ஸ் மூலம் சுட்டுக் கொல்ல மத்திய அரசாங்கத்திடம் அனுமதி கோரினர்.
விவசாயிகள் பயிரிடும் கோதுமை மற்றும் பருப்பு உள்ளிட்ட பயிர்களை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக சேதப்படுத்தி வருவதாகவும், அப்படி பயிரிடப்படும் பகுதிகளில் நிலகை இன மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விவசாய நிலங்களை பாதுகாக்க நிலகை இன மாடுகளை கொல்வதற்கு அனுமதியை கோரினர்.
இது குறித்து 2016-ல் பீகாரில் ஆளும் தரப்பு ஜனதா தளம் யூனிடேட் கட்சியின் தலைவரும், மோகமா மாவட்டத்தில் அனுமதி உடனான வேட்டைக்கு ஏற்பாடு செய்தவருமான நீரஜ் குமார் கூறுகையில், ” இந்த நீல மாட்டின் அச்சுறுத்தல் ஆண்டுகள் கடந்தும் விவசாயிகளை அழித்து வருகிறது. இது தேவையானது ” எனத் தெரிவித்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, இதுவரை வைஷாலி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிலகை இன மாடுகள் கொல்லப்பட்டு இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 2016-ல் பீகாரில் 6 நாட்களில் மட்டும் 200 நிலகை இன மாடுகள் சுட்டுக் கொல்லப்பட்டன.
சேதத்தை ஏற்படுத்தும் நிலகை மாடுகள் குறித்து உள்ளூர் விவசாயிகள் புகார்கள் தெரிவித்தால் வனத்துறையின் சார்பில் ஷூட்டர்ஸ் அனுப்பி வைக்கப்பட்டு அச்சுறுத்தும் மாடுகளை சுட்டுக் கொல்கின்றனர்.
பீகார் மாநிலத்தில் நிலகை இன மாடுகளுக்கு மட்டும் இவ்வாறு அனுமதி அளிக்கப்படவில்லை. இதேபோன்று, உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டு பன்றி மற்றும் நிலகை மாடுகள், ஹிமாச்சலப் பிரதேசத்தில் சிறிதாய் இருக்கும் குட்டைவால் குரங்குகளுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். குஜராத்தில் நிலகை மாடுகளுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது, மகாராஷ்டிரா மாநிலத்தில் காட்டு பன்றி மற்றும் நிலகை மாடுகளுக்கு அனுமதி கொடுக்க யோசித்து வருகின்றனர். குட்டை வால் குரங்குகளை கொல்வதற்கான அனுமதி அளிக்கும் கோரிக்கை சிம்லா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.