இவர் பீகாரில் பலாத்கார குற்றவாளியை என்கவுண்டர் செய்தாரா ?

பரவிய செய்தி
பீகாரில் சிறுமியை கற்பழித்து கொன்றவனை சிறைக்கு கொண்டு செல்லாமல் அந்த இடத்திலேயே எங்கவுண்டர் செய்து சுட்டு கொன்ற அதிகாரி பூஜாவுக்கு ஒரு லைக் உண்டா??
பாராட்ட நினைத்தால் ஷேர் பன்னுங்க மக்களே.
மதிப்பீடு
விளக்கம்
பீகார் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றவனை சிறைக்கு அழைத்து செல்லாமல் பெண் போலீஸ் அதிகாரி பூஜா என்கவுண்டர் செய்து உள்ளதாக பெண் போலீஸ் ஒருவரின் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஆயிரக்கணக்கில் ஷேராகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ரவிச்சந்திரன் என்பவர் தன்னுடைய முகநூலில் வெளியிட்ட இப்பதிவு 11 ஆயிரத்திற்கும் மேல் ஷேராகி தற்போது வரை பகிரப்பட்டு வருகிறது. பெண் போலீஸ் அதிகாரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பகிரப்பட்டு வரும் பதிவின் உண்மைத்தன்மையை தேடிப் பார்க்கத் தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நிகழ்வதால் அக்குற்றத்தைச் செய்பவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை அளிக்க வேண்டும், என்கவுண்டர் மூலம் தண்டிக்க வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தப்பிக்க முயற்சித்ததாக போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். அதுபோன்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்ததா எனத் தேடிப் பார்க்கையில் அப்படி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
வைரலாகும் பதிவில் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்கையில், IPS-Indian Police Service எனும் முகநூல் பக்கத்தில் 2018-ல் ஐபிஎஸ் பூஜா யாதவ் என வைரலாகும் பதிவில் இடம்பெற்ற புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎஸ் பூஜா யாதவ் குறித்து தேடிப் பார்க்கையில், உத்தரப் பிரதேச மாநில காவல்துறையின் இணையதளத்தில் பூஜா யாதவ் உடைய விவரங்கள் அளிக்கப்பட்டு உள்ளதை அறிய நேர்ந்தது. பூஜா யாதவ் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் எஸ்.பி ஆக பணியாற்றி வருகிறார். பூஜா யாதவ் பாலியல் குற்றவாளியை என்கவுண்டர் செய்ததாக எந்த தகவலும் இல்லை.
மேலும் படிக்க : பீகாரில் சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரர்களை சுட்டுக் கொன்ற அதிகாரியா ? | உண்மை என்ன ?
இதற்கு முன்பாக பீகாரில், குஜராத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றவனை பெண் போலீஸ் அதிகாரி ஆணுறுப்பில் சுட்டுக் கொன்றதாக நிகழாத செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தது குறித்து பல கட்டுரையை நாம் வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : குஜராத்தில் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை சுட்ட பெண் போலீஸ் டிஸ்மிஸ் என வதந்தி !
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் பணியாற்றி வரும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் புகைப்படத்துடன் பீகாரில் நிகழாத சம்பவத்தை இணைத்து தவறானச் செய்தியை பரப்பி வருகிறார்கள் என நம்மால் அறிய முடிகிறது.