Fact Check

பீகாரில் சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரர்களை சுட்டுக் கொன்ற அதிகாரியா ? | உண்மை என்ன ?

பரவிய செய்தி

பீகாரில் பள்ளி சிறுமியை கற்பழித்த 3 காமுகர்களின் ஆணுறுப்பில் சுட்டு கொன்று விட்டு  தற்போது “மனித உரிமை ஆணையம்” விசாரணைக்கு அமர்ந்திருக்கும் பெண் அதிகாரி.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாய் இருக்கிறது. அப்படி, வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு உடனடியாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மக்களிடமும் முதன்மையானதாக இருக்கும்.

Advertisement

அவ்வாறான கொடூரர்களை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றதாகவும், அதற்கு பாராட்டு மழை பொழியும் பதிவை சமீபத்தில் பார்க்க முடிந்தது. பீகாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 கொடூரர்களை படத்தில் இருக்கும் பெண் காவல் அதிகாரி கொடூரர்களின் ஆண் உறுப்பில் சுட்டுக் கொன்று விட்டு மனித உரிமை ஆணையம் முன் அமர்ந்து இருப்பதாகக் கூறும் பதிவானது ஆயிரக்கணக்காக ஷேர், லைக்-களை பெற்று இருந்தது. மேலும், தங்களுடைய பாராட்டுகளை கம்மெண்ட்களில் குவித்து இருந்தனர்.இதைத் தவிர, பல முகநூல் குரூப்களில் இந்த பதிவு பகிரப்பட்டு அதிகம் வைரல் ஆகியுள்ளது.

பார்ப்பதற்கு சற்று நல்ல பதிவினைப் போன்று தெரிந்து இருந்தாலும் இந்த செய்தி உண்மையா என்பதை ஆராய வேண்டிய கடமை உள்ளது. ஏனெனில், தனிப்பட்ட கருத்தை உண்மையில் நடந்த நிகழ்வு என்றுக் கூறி மக்களை ஏமாற்றுவது தவறான செயலாகும்.

Janu Janushi என்ற முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 21-ம் தேதி வெளியான பதிவில் பெண் அதிகாரியின் பெயர் Si Pintu Akter எனக் குறிப்பிட்டு இருந்தனர். அந்த பெயரை கூகுளில் Si Pintu Akter எனத் தேடினால் எந்தவொரு பெண் அதிகாரி குறித்த தகவலும் கிடைக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்பு Twipu என்ற தளத்தில் ChowkidarUmagargh என்பவரின் பக்கத்தில் இதே செய்தியும், படமும் பகிரப்பட்டு இருந்தது. எனினும், படத்தில் இருப்பவரின் பெயர் குறித்த விவரங்கள் ஏதுமில்லை. பின் புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு செய்தியை தேடுவதற்கு கூகுளில் இமேஜ் சேர்ச் செய்த பொழுது இதை போன்ற சில பதிவுகள் மட்டுமே காண முடிந்தது. எனினும், அவற்றில் அதிகாரப்பூர்வ செய்தி என ஒன்றும் இல்லை.

இதைத் தவிர, Indian.police.service என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல ஐபிஎஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. அந்த பக்கத்தில் இதே படத்துடன் sapna kumari என்று அவரின் பெயர் இடம்பெற்று இருந்தது. அந்த படத்தில் இருப்பவரின் உடையில் பெயர் sapna என மங்கலாக தெரிகிறது. எனினும், இது அதிகாரப்பூர்வ பக்கமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த பக்கத்தில் பீகார் சம்பவம் குறித்த எந்தவொரு செய்தியும் இடம்பெறாமல் இருந்தது.

கூகுளில் sapna kumari என்ற பெயரில் காவல் அதிகாரி இருப்பதாக தேடிப்பார்க்கையில் இந்த படத்தில் உள்ளவரின் முகம் எங்கும் தென்படவில்லை.

புகைப்பட தேடல் சரியான விடையை அளிக்கவில்லை என, ஓர் பெண் அதிகாரி குற்றவாளிகளை சுட்டுக் கொன்று இருந்தால் இந்திய அளவில் மிகப்பெரிய செய்தியாக இருந்து இருக்கும். ஆகையால், பீகாரில் இப்படியொரு செய்தி நடந்து இருக்கிறதா என்று கூகுளில் தேடி பார்க்கும் பொழுது பல வன்கொடுமை சம்பவங்கள் கிடைத்துள்ளன. ஆனால் , பீகாரில் சிறுமியை வன்கொடுமை செய்த 3 கொடூரர்களை ஆண் உறுப்பில் சுட்டுக் கொன்றதாக எங்கும் செய்தி வெளியாகவில்லை.

புகைப்படம் குறித்தும், பீகார் செய்தி என எங்கு தேடினாலும் சமூக வலைதள பதிவுகள் தொடர்பான எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. படத்தில் இருப்பவருக்கு பின்னால் காலண்டரில் 2017 ஆம் ஆண்டு என தென்படுகிறது. ஆனால், இந்த படத்துடனான பதிவுகள் சென்ற ஆண்டில் இருந்து தற்போது வரை பரவி வருகிறது.

படத்தில் இருப்பவர் குறித்தும், செய்தி குறித்தும் எந்தவொரு தகவலும் இணையத்தில் இல்லை. நிகழாத ஒரு செய்தியை ஏதொவொரு பெண்ணின் படத்துடன் இணைத்து தவறான செய்தி என அறியாமல் பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து, இப்பதிவை எங்காவது கண்டால் தவறான செய்தி என மக்களுக்கு எடுத்துரையுங்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button