பிபிஎஸ்சி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்காக இரயிலில் பீகார் வந்த மாணவர்கள் எனப் பரவும் பங்களாதேஷின் பழைய வீடியோ !

பரவிய செய்தி
மக்களுக்கான புதிய ரயில் சேவை போல பிபிஎஸ்சி ஆசிரியர் ஆட்சேர்ப்பு படிவத்தை பூர்த்தி செய்ய பீகார் வந்த மாணவர்கள் டிஜிட்டல் இந்தியா..
மதிப்பீடு
விளக்கம்
CMIE வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை சதவீதம் கடந்த மே மாதத்தில் 7.7% -ஆக உள்ளது. இந்நிலையில் பிபிஎஸ்சி ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு படிவத்தை பூர்த்தி செய்வதற்காக பீகார் வந்த மாணவர்கள் என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் அப்பதிவுகளில் “டிஜிட்டல் இந்தியா” என்றும், ‘மக்களுக்கான புதிய ரயில் சேவை’ என்றும் நையாண்டியாக குறிப்பிடப்பட்டிருந்தது.
View this post on Instagram
மேலும் பரவி வரும் இதே வீடியோவை, சிலர் உத்திரப்பிரதேசத்தில் நடந்தது என்று கூறி பரப்பி வருவதையும் காண முடிந்தது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2019-இல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது.
கடந்த 2018 ஜூன் 24 அன்றே Beautiful Places To See எனும் யூடியூப் சேனல் தன்னுடைய பக்கத்தில் இவ்வீடியோவை வெளியிட்டுள்ளதை அறிய முடிந்தது. அதில் “பங்களாதேஷ் ரயில்வேயின் மிகவும் கூட்டம் நிறைந்த ஈத் பண்டிகை சிறப்பு ரயில்” எனும் தலைப்பில் வீடியோ பதிவேற்றபட்டிருந்தது.
மேலும் ரயிலின் முன்புறத்தில் இடம்பெற்றுள்ள இலச்சினையை (logo) ஆய்வு செய்து பார்த்ததில், இது பங்களாதேஷ் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இலச்சினை தான் என்பதை தெளிவுப்படுத்த முடிந்தது.
ரயிலின் மேற்கூரையில் இனி பயணம் செய்யக்கூடாது என்று கடந்த 2022 ஜூலை 21 அன்று பங்களாதேஷ் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தொடர்பாக Bangladesh Post என்னும் ஊடகம் தன்னுடைய இணையதளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள ரயிலின் இலச்சினையும் (logo), பரவி வரும் வீடியோவில் உள்ள இலச்சினையும் ஒரே மாதிரியாக உள்ளது.
மேலும் அதில், “ரயில் மேற்கூரையில் பயணிகளை அனுமதிக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் (HC) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்று நீதிபதி எம்டி நஸ்ருல் இஸ்லாம் தாலுக்டர் மற்றும் நீதிபதி கிசிர் அகமது சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தமிழ்நாட்டு மசூதியின் உண்டியல் பணம் எனப் பரப்பப்படும் பங்களாதேஷ் வீடியோ !
மேலும் படிக்க : இந்தியாவில் உள்ள மதரஸாவில் ஆசிரியர் சிறுவனைக் கொடூரமாக தாக்குவதாகப் பரவும் பங்களாதேஷ் வீடியோ !
முடிவு :
நம் தேடலில், பிபிஎஸ்சி ஆசிரியர் பணி ஆட்சேர்ப்புக்காக இரயிலில் பீகார் வந்த மாணவர்கள் என சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ, கடந்த 2018-ல் பங்களாதேஷில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.