பீகாரில் பட்டியலினப் பெண்களுக்கு மலத்தைக் கொடுத்து நூதன தண்டனையா ?| நடந்தது என்ன ?

பரவிய செய்தி
இந்த நாட்டை எப்படி நாங்கள் தாய்நாடு என்று சொல்லுவோம்.. பிஹாரில் தலித் பெண்களுக்கு மனித மலத்தை கொடுத்து நூதன தட்டனை.
மதிப்பீடு
விளக்கம்
பீகார் மாநிலத்தில் பட்டியலின பெண்களுக்கு சிறுநீர், மலத்தைக் கொடுத்து மொட்டையடுத்து வன்கொடுமை செய்துள்ளதாக மூன்று பெண்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களுக்கு மலத்தைக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூட்டமாய் சூழ்ந்து இருக்கும் மக்கள் மூன்று பெண்களுக்கு மலத்தைக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற வீடியோவின் புகைப்படத்தை மட்டுமே பதிவிட்டு உள்ளோம். வீடியோவின் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது. புகைப்படத்தில் மொட்டை அடிப்பது உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.
பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்றும் அரங்கேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். எனினும், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவின் செய்தி குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மே 5-ம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமையில் வெளியான செய்தியில் அப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் முசாஃபர்புர் பகுதியில் உள்ள தக்ரமா கிராமவாசிகள் மந்திரவாதிகள் என சந்தேகித்து மூன்று பெண்களை தாக்கி, மொட்டை அடித்து, உடைகளை கிழித்து, மலத்தை கொடுத்து உள்ளதாக வெளியாகி இருக்கிறது.
Bihar: After a viral video emerges showing 3 women being beaten up & being paraded half-naked in Dakrama village in Muzaffarpur, SDO, East Muzaffarpur Kundan Kumar says, “This is a crime. The police after a thorough investigation will take an action against the accused”. pic.twitter.com/RLBP602iIH
— ANI (@ANI) May 5, 2020
முசாஃபர்புர் பகுதியில் உள்ள தக்ரமா கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வெளி உலகிற்கு தெரிய வந்தது. இது தொடர்பாக கிழக்கு முசாஃபர்புரின் சப் டிவிசினல் மஜிஸ்ரேட் குந்தன் குமார், ” இது குற்றமாகும். போலீஸ் விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ” எனத் தெரிவித்ததாக வெளியாகி இருக்கிறது.
மே 5-ம் தேதி வெளியான தி ஹிந்து ஆங்கில செய்தியில், ” மே 4-ம் தேதி முசாஃபர்புர் மாவட்டத்தில் மூன்று பெண்கள் மந்திரவாதிகள் என குற்றம்சாட்டி கும்பலால் தாக்கப்பட்டு, மொட்டை அடிக்கப்பட்டனர். சமூக வலைதளத்தில் வைரலான வீடியோவால் உள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளது ” என இடம்பெற்று உள்ளது.
இந்த சம்பவம் திங்கட்கிழமை நிகழ்ந்து உள்ளது.. முக்கிய குற்றவாளி ஷியாம் சஹானி என்பவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஏஎஸ்பி அமிதேஷ் குமார் கூறியுள்ளார்.
” ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கிராமத்தில் சில சடங்குகளைச் செய்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் சூனியத்தில் ஈடுபடுவதாக சந்தேகத்தின் பேரில் கோபமடைந்த கிராமவாசிகள் அவர்களை அடித்து, அரை நிர்வாணப்படுத்தியதாக கூறப்படுகிறது ” என்று தி ஹிந்து செய்தியில் இடம்பெற்று உள்ளது.
தக்ரமா கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். செய்திகளில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடவில்லை. ஆனால், பட்டியலின பெண்களுக்கு எதிரான நூதன தண்டனை என அந்த வீடியோவும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2016-ல் இதேபோல் சம்பவம் பீகாரில் நிகழ்ந்து இருக்கிறது. பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள பிப்ரா கிராமத்தில் பட்டியலின பெண்ணை மந்திரவாதி என முத்திரை குறித்து, குற்றம்சாட்டியர்கள் சிறுநீரை குடிக்க வைத்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. அந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளில் சம்பந்தப்பட்ட பெண்ணை தலித் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் அப்படி ஏதும் குறிப்பிடவில்லை.
2017-ல் பீகாரில் 70 வயது பட்டியலின மூதாட்டி சூனியத்தில் ஈடுபட்டதாக சந்தேகித்து உயிருடன் எரித்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக 2 ஆண்டுகளில் மட்டும் 250 பெண்கள் மந்திரவாதிகள் என்ற சந்தேகத்திலேயே தாக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தரவுகள் தெரிவிப்பதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
பீகாரில் இது தொடர் கதையாக இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தவறான செய்திகளை பரப்பாமல் இருப்பது நல்லது. தவறான செய்திகளே இதுபோன்ற சம்பவங்களுக்கு அடித்தளமாக அமைகிறது.
முடிவு :
நமது தேடலில், பீகாரில் தலித் பெண்களுக்கு மனித மலத்தைக் கொடுத்து நூதன தண்டனை என வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படம் தவறாக பரப்பப்பட்டு வருகிறது, சூனியத்தில் ஈடுபட்டதாக சந்தேகித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களை கிராமவாசிகள் தாக்கி, அரை நிர்வாணப்படுத்தி, மலத்தை கொடுத்ததாக கிடைத்த தகவலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.