பீகாரில் பெண்ணை நிர்வாணப்படுத்திய சம்பவம்.. நடந்தது என்ன ?

பரவிய செய்தி
நெஞ்சம் துடிக்கிறது நண்பர்களே.. பீகார் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்துத்துவா சக்திகள் தலித் பெண்மணியை பொது இடத்தில் நிர்வாணப்படுத்தி தாக்கும் கொடூரம் சுதந்திர இந்தியாவில்.. என்ன ஈடு செய்யப் போகிறது மோடி அரசு ? வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மதிப்பீடு
சுருக்கம்
பீகாரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கும் வீடியோ காட்சிகளுடன் தவறான கதைகள் இணைக்கப்பட்டுள்ளன.
விளக்கம்
இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடக்கும் தாக்குதல் பற்றி கேள்விபடுவது வழக்கமான நிகழ்வாகவே மாறி விட்டது. இத்தனை வருட சுதந்திரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களை உயர் சாதியினர் எனக் கூறி கொள்பவர்கள் தாக்குவது மாறியபாடில்லை என்பது பொதுக் கருத்து.
சமீபத்தில் பீகாரில் தலித் பெண் ஒருவரை சிலர் ஒன்று கூடி நிர்வாணப்படுத்தி தெருவில் ஓடவிட்டு தாக்கியதாக கூறியும், அவை இந்து அமைப்பை சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் ஒரு வீடியோ காட்சிகள் பரவி சமூக வலைத்தள வாசிகளை கோபமடையச் செய்துள்ளது. அச்செய்தியினை பற்றி அறிய முற்படும் போதே கூடுதலாக பல உண்மைத் தகவல்கள் கிடைத்துள்ளன.
” ஆகஸ்ட் மாதம் பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தின் அர்ராஹ் நகரின் தெருவில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி அடித்தும், கற்களால் தாக்கியும் ஓட விட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணம் பீகியா ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ரயில்வே ட்ராக்கில் 19 வயதான விமலேஸ் என்பவரின் இறந்த உடல் கிடைத்ததே. அவரின் மரணத்திற்கு காரணம் அப்பெண் என சந்தேகப்பட்ட கும்பல் இவ்வாறான கொடூர சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர் ”
விமலேஸ் தாமோதர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனை அடுத்து அக்கிராமத்தை சேர்ந்த கும்பல் வன்முறையில் இறங்கி உள்ளனர். தெருக்கில் இருந்த வாகனங்கள், கடைகளை அடித்து நொறுக்கி, தீ வைத்துள்ளனர். உடல் கிடைத்த பகுதிக்கு அருகில் உள்ள ரெட் லைட் ஏரியாவான பீகியா பகுதியில் தங்கிருந்த பெண்ணை பிடித்து இழுத்து உடைகளை கிழித்து உள்ளனர். பின் அப்பெண்ணை நிர்வாணப்படுத்தி கிடைத்த பொருட்களை கொண்டு அடித்து துரத்தி உள்ளனர். இதனால் அப்பெண் படுகாயமடைந்துள்ளார்.
நிகழ்ந்த சம்பவம் குறித்து பேசிய போஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் அவகாஷ் குமார், “ இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரை கைது செய்து உள்ளோம். இந்த வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள உள்ளூர் தலைவர் குஷால் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையை சரியாக செய்யாத காரணத்தினால் 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு உடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது “ என்றுள்ளார்.
பீகாரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டது உண்மையே..!! சந்தேகத்தின் பெயரில் இந்த கொடூரத்தை செய்துள்ளனர். ஆனால், தலித், பாஜக என்று தவறான கதைகள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரியாக நிர்வகிக்கவில்லை என்பதை எடுத்துரைப்பதாக சிலர் குற்றம்சாற்றியுள்ளார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.