This article is from Jul 09, 2020

சுறா மீனை தூக்கிச் செல்லும் பறவையின் வைரல் வீடியோ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

கடலில் இருந்து சுறா மீனை தூக்கிச் செல்லும் அதிசய பறவை ! இணையத்தில் வைரலாகும் வீடியோ.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

கடல் பகுதியில் பெரிய பறவையொன்று தன் காலில் சுறா மீனை தூக்கிச் செல்வதாக கீழ்க்காணும் வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது. சில பதிவுகளில் பறவையின் பெயர் தெரியவில்லை என்றும், சில பதிவுகளில் கழுகு என்றும் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

Facebook link | archive link

 

” அமெரிக்காவின் மைர்டில் கடற்கரை ஓரத்தில் பிரமாண்டமான அளவில் உள்ள ஒரு பறவை பெரிய அளவிலான சுறா மீனையே கவ்விச் செல்வது வீடியோவாக படமெடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை கெல்லி புர்பாஜ் என்பவர் தந்து பேஸ்புக் பக்கத்தில், கழுகா.. பருந்தா… மைர்டில் கடற்கரையில் ஒரு சுறாவைப் பிடித்தும் செல்லும் பறவை எது ” என்கிற கேள்விகளுடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ட்ரக்கிங் சார்க்ஸ் (Tracking Sharks) எனும் ட்விட்டர் பக்கத்திலும் இவ்வீடியோ பதிவிட்டு உள்ளதாகவும், சிலரோ மீன்களை சாப்பிட்டு உயிர் வாழும்  ஓஸ்ப்ரே எனும் பறவை தான் இது எனத் தெரிவித்து வருவதாகவும் ” தினமலர் உள்ளிட்ட சில இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | archive link

பறவை & மீன் பெயர் ? 

பலரும் பல விதமான தகவல்களை பகிர்ந்து வருவதால் பறவை மீனை தூக்கிச் செல்லும் வீடியோ குறித்து தேடிப் பார்க்கையில், சவுத் கரோலினாவைச் சேர்ந்த WPDE ABC-15 எனும் அமெரிக்கன் டிவி உடைய தலைமை வானிலை ஆய்வாளர் எர்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். ஓஸ்ப்ரே எனும் பறவை ஸ்பானிஷ் மக்கெரேல் மீனை தூக்கிச் செல்வதாக குறிப்பிட்டு உள்ளார்.

Twitter link | archive link 

Facebook link | archive link 

பெரிய அளவிலான ஓஸ்ப்ரே பறவை ஸ்பானிஷ் மக்கெரேல் எனும் மீனை தூக்கிச் செல்லும் வீடியோவே சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஓஸ்ப்ரே ஆனது கடல் பருந்து, நதி பருந்து மற்றும் மீன் பருந்து என அழைக்கப்படுகிறது. இது மீன் உண்ணும் பறவை.

birdsoftheworld எனும் வலைதளத்தில் ஓஸ்ப்ரே பறவை மீனை தூக்கிச் செல்லும் புகைப்படம் முகப்பிலேயே இடம்பெற்று இருக்கிறது. ஓஸ்ப்ரே எனும் கடல் பருந்து பெரிய அளவில் உள்ள ஸ்பானிஷ் மக்கெரேல் மீனை தூக்கிச் செல்லும் வீடியோவே இணையத்தில் வைரலாகியதோடு அதிசய பறவை, சுறா மீன் என தவறான தகவலையும் இணைத்து உள்ளனர்.

முடிவு : 

நம்முடைய தேடலில், கடலில் இருந்து சுறா மீனை தூக்கிச் செல்லும் அதிசய பறவை என வைரலாகும் வீடியோவில் இருப்பது ஓஸ்ப்ரே பறவை மற்றும் ஸ்பானிஷ் மக்கெரேல் மீன் என்பதையும், ஓஸ்ப்ரே மீன்களை உண்ணும் பறவை என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader