இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இந்துக் கோவிலை இஸ்லாமியர்கள் எரித்ததாகப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி

இங்கிலாந்தின் பர்மிங்காம் கோவில் முஸ்லிம்களால் எரிக்கப்பட்டது. இந்துக்கள் தாக்கப்பட்டனர். இங்கிலாந்து காவல்துறை செயலற்றது. இந்தியாவில் மதவெறி தொடர்ந்தால், சகிப்புத்தன்மையுள்ள இந்துக்கள் என்று அழைக்கப்படும் நாம், இதுபோன்ற கொடூரமான சம்பவங்களை நம் கண்முன்னால் பார்க்க நம் கண்களில் இருந்து ரத்தம் வழிய வேண்டும். வலிமையான இந்துக்களாக இருக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணம் இது!

மதிப்பீடு

விளக்கம்

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம்(Birmingham) நகரில் உள்ள இந்துக் கோவிலை நவராத்திரியின் போது இஸ்லாமியர்கள் எரித்துள்ளதாகவும், அங்கிருந்த இந்துக்களையும் அவர்கள் தாக்கினர் என்றும் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

Facebook Link

Archive Link

Twitter Link

உண்மை என்ன ?

வைரலாகி வரும் வீடியோவை பார்க்கையில் எரிந்துகொண்டிருக்கும் கட்டிடம் கோவில் போன்று இல்லை. கட்டிடத்தின் முன் “Supermarket” என்று மின்விளக்குகளுடன் பெயர்ப்பலகை இருந்தது.

மேலும், வைரலாகி வரும் வீடியோவில் இருப்பது இந்துக் கோவில் இல்லை எனவும், அது ஒரு சூப்பர்மார்கெட் எனவும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ்(West Midlands) போலீசார் ஒரு பதிவிற்கு விளக்கமளித்துள்ளனர். வீடியோவில் நடக்கும் சண்டை கார் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தகராறின் நீட்சி எனவும் அதற்கும் எரிந்துகொண்டிருந்த கட்டிடத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை எனப் பதிலளித்து உள்ளனர்.

Tweet Link

வைரலாகி வரும் வீடியோவில் இருக்கும் சம்பவம் 2022ம் ஆண்டுச் செப்டம்பர் 19ம் தேதி  பர்மிங்காமில் உள்ள ஒரு சூப்பர்மார்கெட்டில் நடந்த ஒரு தீ விபத்து என வெஸ்ட் மிட்லாண்ட்ஸ்(West Midlands) போலீசார் தெரிவித்து இருந்தனர்.

ஆகையால், இதுகுறித்து இணையத்தில் தேடியபொழுது “Dailymail” எனும் செய்தித்தளம் செப்டம்பர் 20ம் தேதி “Moment Large group of men brawl in the streets” எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. சூப்பர்மார்கெட்டில் நடந்த தீ விபத்து தற்செயலாக நடந்தது என அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ம் செப்டம்பர் 20ம் தேதி “Mirror” செய்தித்தளம் வைரலான வீடியோ குறித்து “Shocking moment watermelons thrown as fight breaks out near fire-hit supermarket ” எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுருந்தது. அதில் அந்த சூப்பர்மார்கெட்டின் பெயர் ‘Zeenat store’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை இணையத்தில் தேடியபொழுது சூப்பர்மார்க்கெட்டின் புகைப்படம் கிடைத்தது. வைரலான வீடியோவில் இருக்கும் கட்டிடமும் இதுவும் ஒன்று எனத் தெரியவருகிறது.

இதன்மூலம், வைரலாகி வரும் வீடியோவில் இருப்பது இந்துக் கோவில் இல்லை என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் வீடியோவில் நடந்த சண்டை கார் நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறால் நடந்தது எனத் தெரியவருகிறது.

முடிவு:

நம் தேடலில், இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இருக்கும் இந்துக் கோவில் இஸ்லாமியர்களால் எரிக்கப்பட்டதாக பரவும் வீடியோ தகவல் வதந்தியே. மேலும் இஸ்லாமியர்கள் இந்துக்களைத் தாக்கவில்லை எனவும், அந்தச் சம்பவம் கார் நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறின் நீட்சி என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader