This article is from Jun 28, 2019

தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் கல்லூரிக்கு ஸ்டெர்லைட் நிதியுதவி அளித்ததா ?

பரவிய செய்தி

தூத்துக்குடியில் உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரியில் வகுப்பறைகளை விரிவாக்கம் செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி அளித்து உள்ளதை திறப்பு விழா கல்வெட்டில் பொறித்துள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு இன்றும் தமிழக மக்களிடம் எதிர்ப்புகள் குறையாமல் இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், தற்போது அந்நிறுவனம் ஆலையை திறக்க நீதிமன்றத்தை நாடி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

சமீபத்தில் ஃபேஸ்புக் பதிவுகளில் தூத்துக்குடியில் உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரியின் வகுப்பறை விரிவாக்கத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை நிதியுதவி அளித்து இருப்பதாகவும், ஆதாரமாக கல்லூரி திறப்பு விழா கல்வெட்டை பதிவிட்டு இருந்தனர்.

தூத்துக்குடியின் மறவன்மடம் பகுதியில் இருக்கும் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் 2019 ஜூன் 14-ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட வகுப்பறைகளின் திறப்பு விழா கல்வெட்டில், கல்லூரியில் இரண்டு வகுப்பறைகளின் விரிவாக்கத்திற்கான கட்டுமானப் பணிக்கு வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூலம் ரூ.7.8 லட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டு உள்ளது எனப் பொறித்துள்ளனர்.


ஜூன் 18-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் Sterlite Copper ட்விட்டர் பக்கத்தில் திறப்பு விழா புகைப்படத்தை பதிவிட்டு நிதியுதவி அளித்ததை உறுதி செய்துள்ளனர்.


இதே போன்று பிப்ரவரி 28-ம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையின் ” Go – Green ” initiative-யின் ஒரு பகுதியாக பிஷப் கால்டுவெல் கல்லூரியில் மரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றதாக ஸ்டெர்லைட்யின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் கல்லூரியின் முதல்வர் ஜெயசிங் அவர்களை Youturn தொடர்பு கொண்டு பேசினோம். கல்லூரியின் புதிய வகுப்பறைக்கு ஸ்டெர்லைட் நிதியுதவி அளித்ததா என கேள்வி எழுப்பியதற்கு,

நான் புதிய முதல்வராக பதவியேற்று உள்ளேன். நிதியுதவி பெற்றது குறித்து கல்லூரியின் செயலாளருக்கே தெரியும். வகுப்பறையின் திறப்புவிழாவிற்கு கல்வெட்டு வைக்கப்பட்டது. பிறகு சில நாட்களில் ஸ்டெர்லைட் பெயர் நீக்கப்பட்டது ” என தெரிவித்து இருந்தார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து கல்லூரி பணம் பெற்றதா என கேட்டதற்கு, இது குறித்த விவரங்கள் செயலாளருக்கே தெரியும் என மழுப்பலான பதிலை கூறினார். ஆனால், கல்லூரியின் கல்வெட்டில் முதல்வர் ஜெயசிங் அவர்களின் பெயரும் இடம்பெற்று உள்ளது.

பிஷப் கால்டுவெல் கல்லூரியில் புதிய வகுப்பறைகளின் திறப்புவிழா கல்வெட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்யின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது சமூக வலைதளத்தில் சர்ச்சையாகியது. இதற்கு பல பதிவுகளில் கண்டங்கள் எழுந்தன.

இதையடுத்து, தற்பொழுது கல்லூரியின் வகுப்பறை திறப்புவிழா கல்வெட்டில் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பெயர் அழிக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்ற பொழுது ஆலைக்கு எதிராக பிஷப் கால்டுவெல் கல்லூரியின் மாணவர்கள் கல்லூரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader