பாஜக சார்பில் 70,000 டிவிக்களைப் பொருத்தி அமித்ஷா விர்ச்சுவல் பேரணி.

பரவிய செய்தி
பிஜேபியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக டிவிக்கள் பீகார் முழுவதும் நிறுவப்பட்டு அமித்சா பிரச்சாரம் செய்து வருகிறார். மக்களின் நிலை என்ன, இவர்களின் குறிக்கோள் என்ன என்பதை இந்த படம் சொல்லும். நமது பக்கத்திலும் வாட்ஸ் அப் பார்வேர்ட்களை எடுத்து வந்து மோடிக்கு ஜே போடும் ஆட்களெல்லாம் இப்படி மூளை சலவை செய்யப்பட்ட மக்களே !
மதிப்பீடு
சுருக்கம்
பாஜக கட்சியின் சார்பில் பீகாரில் தொடங்கிய விர்ச்சுவல் பேரணி மேற்கு வங்க மாநிலம் வரை தொடர்கிறது. ஆனால், விர்ச்சுவல் பேரணிக்காக டிவிக்கள் பொருத்தப்பட்டதாக வெளியான புகைப்படம் பீகார் இல்லை, மேற்கு வங்க மாநிலம்.
விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இடையே பாரதிய ஜனதா கட்சி தங்களின் ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்க பேரணியைத் தொடங்கி இருக்கும் செய்திகளை காண முடிந்தது. இம்முறை விர்ச்சுவல் முறையில் மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா.
இவ்வருடம் நடைபெற உள்ள பீகார் தேர்தல் மற்றும் அடுத்த வருடம் வர உள்ள மேற்கு வங்கம், ஒடிசா தேர்தலுக்காகவே பாஜக கட்சி இம்முறையை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது. பீகாரில் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கிய அக்கட்சி அதற்காக டிவிக்கள், எல்இடி ஸ்க்ரீன்கள் போன்றவற்றை அமைத்து உள்ளனர்.
பீகார் மாநிலத்தில் அமித்ஷாவின் விர்ச்சுவல் பேரணிக்காக 10,000 எல்இடி ஸ்க்ரீன்கள், 50,000க்கும் அதிகமான ஸ்மார்ட் டிவிக்கள் மாநிலம் முழுவதும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மூலம் நிறுவியதாகவும், 40 லட்சம் பேர் பரப்புரையைக் கண்டதாகவும் அம்மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாக அவுட் லுக் இந்தியா தளத்தில் வெளியாகி இருக்கிறது.
” அமித்ஷாவின் விர்ச்சுவல் பேரணிக்காக மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 70,000 பிளாட் ஸ்க்ரீன் டிவிக்கள், பெரிய அளவில் 15,000 எல்இடி ஸ்க்ரீன்க்களை பொருத்தியுள்ளதாக பாஜக தெரிவித்து உள்ளது ” என ஜூன் 10-ம் தேதி இதே புகைப்படங்கள் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தொலைத்தூர கிராமங்களில் கூட டிவிக்களை அமைத்து பேரணி ஒளிபரப்பச் செய்யப்பட்டுள்ளது. இப்புகைப்படம் ட்விட்டரில் பாஜக கட்சிக்கு எதிராக வைரல் செய்யப்பட்டது. பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
This is a defining image from Home Minister Amit Shah’s virtual rally in Bengal yesterday. People with modest means in interiors of Bengal watched him live! Just to give a sense of the reach, the live feed on @BJP4Bengal’s Facebook page alone has been shared approx 32,000 times! pic.twitter.com/u4vwDOtfPs
— Amit Malviya (@amitmalviya) June 10, 2020
பீகாரில் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமித்ஷா மேற்கொண்ட விர்ச்சுவல் பேரணிக்காக மாநில முழுவதும் ஆயிரக்கணக்கில் எல்இடி ஸ்க்ரீன்கள், டிவிக்களை நிறுவி உள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராமத்தில் மக்கள் அமித்ஷா பேச்சை கேட்கும் மேற்காணும் புகைப்படம் ட்விட்டர் தளத்தில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.