பெண்ணுக்கு ஆதரவாக சென்ற போலீசை பாஜக எம்எல்ஏ அனில் உபத்யா தாக்கினாரா ?

பரவிய செய்தி

இப்படியான ஒரு நிலை தமிழ்நாட்டிலும் வேண்டுமா? சங்கிகள் ஆளும் மாநிலங்களில் இதே நிலை.. பெண்ணுக்கு ஆதரவாக சென்ற போலீஸை தாக்கும். பி.ஜே.பி எம்.எல்.ஏ அனில் உபத்யாவின் அராஜகம்!

மதிப்பீடு

விளக்கம்

ஒரு பெண்ணிற்கு ஆதவராக பேச சென்ற போலீசை பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ அனில் உபத்யா தாக்கியதாகக் கூறி 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

வீடியோவில், இருவருக்கிடையான வாக்குவாதத்தில் போலீஸ் உடையில் இருக்கும் நபரை ஒருவர் தாக்கி விட்டு பேசிக் கொண்டிருப்பது இடம்பெற்று இருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

பாஜக எம்எல்ஏ அனில் உபத்யா போலீசை தாக்கியதாக பரவும் வீடியோ குறித்து தேடுகையில், ” வீடியோவில் போலீசை தாக்கியவர் பாஜக எம்எல்ஏ அல்ல, மீரட் பகுதியின் பாஜக கவுன்சிலர் மனிஷ் செளத்ரி. மேலும், அனில் உபத்யா என்ற பெயரில் பாஜகவில் எம்எல்ஏவாக யாரும் இல்லை. இதற்கு முன்பாக, காங்கிரஸ் எம்எல்ஏ, பாஜக எம்எல்ஏ என அனில் உபத்யா என்ற பெயரை வைத்து பிற மொழிகளில் வதந்திகள் பரப்பப்பட்டு இருக்கின்றன என்பதையும் அறிய முடிந்தது.

Advertisement

2018-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி வெளியான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” மீரட் பகுதியின் பிளாக் பேப்பர் உணவகத்தில் தாமதமாக சேவை செய்ததாக எழுந்த தகராறில்  மீரட்டின் பாஜக கவுன்சிலர் மனிஷ் செளத்ரி சப்-இன்ஸ்பெக்டர் பன்வாரைத் தாக்கியதால் கைது செய்யப்பட்டார். அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது ” என வெளியாகி இருக்கிறது.


பாஜக கவுன்சிலர் மனிஷ் செளத்ரிக்கு சொந்தமான உணவகத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்வார் மற்றும் பெண் வழக்கறிஞரும் வந்துள்ளனர். உணவு வழங்கும் சேவையில் ஏற்பட்ட தாமதத்திற்கு பெண் வழக்கறிஞர் உணவக ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது உணவக உரிமையாளர் மனிஷ் அங்கு தலையிட்டு பேசும் போது போலீஸ் பன்வார் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் தகாத வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, எஸ்.ஐ பன்வாரை பாஜக கவுன்சிலர் மனிஷ் அறைந்து தாக்கி உள்ளார். இதன் காரணமாக, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். ” போலீஸ் அதிகாரி பன்வார் மற்றும் பெண் வழக்கறிஞர் ஆகிய இருவரும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். இருவரும் மது அருந்தி இருந்ததாக அறிக்கை உறுதிப்படுத்தியது ” என டிஎஸ்பி பங்கஜ் குமார் சிங் தெரிவித்ததாக ஸ்க்ரோல் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

சில நாட்களில் பாஜக கவுன்சிலர் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த போது மீரட் சாலையில் வாகனத்தில் செல்லும் போது அவரின் ஆதரவாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதாக தி லாஜிக்கல் இந்தியன் தளம் வெளியிட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், பெண்ணுக்கு உதவ சென்ற போலீசை பாஜக எம்எல்ஏ அனில் உபத்யா தாக்கியதாக பரவும் வீடியோ 2018-ல் மீரட்டில் உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் பாஜக கவுன்சிலர் மனிஷ் என்பவர் போலீசை தாக்கிய வீடியோவாகும். பாஜக எம்எல்ஏ அனில் உபத்யா என்று யாரும் இல்லை, அனில் உபத்யா என்ற கற்பனை கதாபாத்திரத்தை வைத்து பல வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button